தாலியைக் கழட்டலாமா? விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.

தாலம் என்ற பனையோலையில் செய்த ஒன்றை பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள குடும்பம் என்ற ஒரு வாழ்க்கைமுறை தொடங்குகிறது. தாலம் என்ற பனையோலையின் பெயரிலிருந்து தாலி என்ற பெயர் வழக்கமாயிற்று.

பிறகு, பனையோலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் உலோகத்தாலான தாலியைச் செய்து பயன்படுத்தினர். அதற்குப்பிறகு பொன்னாலான தாலியைப் பெற்றுவிளங்கினர். உண்மையாகவே பொன்னால் ஆக்கவேண்டுமென்பதல்ல மஞ்சள்துண்டைக் கூடக் கயிற்றில் கட்டி அணிந்துகொள்ளலாம். சில சமூகங்களில் தாலியைவிட கட்டியிருக்கும் மஞ்சள் கயிறை மதித்துப் போற்றுவார்கள்.

“தாலி கட்டித் திருமணம் செய்வது தமிழர்களின் வழக்கமா?” இந்தக் கேள்விக்கு, இல்லை என்று சொல்லும் ஆராய்ச்சிமுடிவுகள்தான் அதிகம். தாலி கட்டித்திருமணம் செய்வது ஆணாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு என்று பெரியார் உட்பட பல சமூகச்சீர்திருத்தவாதிகள் எதிர்த்திருக்கிறார்கள், எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கணவனை தாமாக மனமார்ந்து வணங்கிவாழும் பெண்கள் ஏராளமாக நமது சமுதாயத்தில் இருக்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்று வாழ்கிறார்கள்.  அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் என்றாலும் அவர்களுக்கு அது நம்பிக்கை. அவர்களுக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய கடந்த ஞாயிறு (11/10/2009) அன்று ஒளிபரப்பான “நீயா? நானா?” என்ற நிகழ்ச்சியில் பலரும் பேசியகருத்து மனவலியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. குறிப்பாக ஒரு வயதான பெண்மணி தன் தாலியைக் கழட்டிக்காட்டச்சொன்னதும் செய்து காட்டினார். தனிப்பட்ட முறையில் அவர் செய்தது புரட்சிகரமான ஒரு செயலாக இருந்தாலும், அது அங்கிருந்தவர்களையும் பார்வையாளர்களையும் ஓரளவு புண்படுத்தியிருக்கும். இறுதியில் அவருக்கு (தாலியைக் கழட்டிக் காட்டியதற்காக) ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசளித்து டி.ஆர்.பி ரேட்டிங் எனப்படும் ஊடகத் தரவரிசையைத் தக்கவைத்துக்கொண்டது விஜய் தொலைக்காட்சி.

இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சன் தொலைக்காட்சி செய்தி படிப்பாளர் நிர்மலா பெரியசாமி கொடுத்த விளக்கம் வேறு. ஒரு காலத்தில் அவர் செய்தி படிக்கும்போது தாலியைக் கழட்டிவைத்துவிட்டு வாசிக்க ஆரம்பித்ததும், சிலர் அவரிடம் கேட்டார்களாம், விவாகரத்து செய்துவிட்டீர்களா? என்று. ஒரு செய்திமலரில் அந்தச் செய்தி ஒரு கட்டுரையாகவேறு வெளிவந்ததாம். இதைச் சொல்லிவிட்டு அவர் கேட்கிறார், “செய்திவாசிக்கும் போது செய்தியைப் பார்க்கவேண்டியதுதானே ஏன் அவரின் கழுத்தைப் பார்க்கிறீர்கள், அவரின் புடவை அழகாயிருக்கிறதா என்று பார்க்கிறீர்கள்” என்று. நீங்கள் தாலியை அணிந்துகொண்டு படிப்பதால் என்ன பிரச்சனை என்று நிகழ்ச்சியாளர் கேட்ட கேள்விக்கு, “அது ஒரு பார்வைக்குத்தான், இளமையாகத் தெரியவேண்டு மென்பதற்குத்தான்” என்று விளக்கம் கொடுக்கிறார். நிகழ்ச்சியாளர் திரும்பக் கேட்டிருக்கவேண்டிய கேள்வி “பார்வையாளர்கள் செய்தியைப் பார்க்காமல் ஏன் படிப்பாளரின் அணிகலன்களைப் பார்க்கிறார்கள் என்று கேட்டீர்களே! பிறகெதற்கு தாலியைக் கழட்டி வைத்துச் செய்திவாசித்தீர்கள்?” என்று. ஆனால் அதைக்கேட்க அங்கு யாருமில்லை.

சாதி மதங்களைக் கடந்து, பலருக்கு ஒழுக்கத்துக்கு அடையாளமாக கருதப்பட்டுவருகிற தாலி அந்த நிகழ்ச்சியில் பட்டபாடு இருக்கிறதே…! அதைச் சொல்லிமாளாது. அம்மன் டி. ஆர். ஒய். முறுக்குக் கம்பிக்காரர்களிடமிருந்து காசைக் கறக்க இவர்களின் வீரவிளையாட்டுக்கள் நிற்கவா போகிறது.

விரைவில் நமது பண்பாட்டுச் சின்னங்களனைத்தையும் சிதைத்துவிட்டுத்தான் மற்றதெல்லாம் என்று தோள்தட்டிக் கிளம்பிவிட்டார்கள் போலத் தெரிகிறது என்று சிலர் பேசக் காதுகளில் கேட்கிறது.

மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபடுதல் சமூக எண்ணம்தான், ஆனால் பிறர் மனதைப் புண்படுத்தாத வண்ணம் வெளிப்பட வேண்டும். இதைவிட எத்தனையோ பல மூட நம்பிக்கைகள் நமது சமுதாயத்தில் மலிந்துகிடக்க அவற்றைச் சாடாமல், சிவனே என்று தாய்மார்கள் கழுத்திருக்கும் தாலிதான் இந்தத் தொலைகாட்சிக் காரர்களுக்குக் கிடைத்ததா?

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

ஒரு பதில்

  1. நாச்சிமுத்து /

    மூடநம்பிக்கை என்று நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம்

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>