உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)

Dec 26, 2012

நம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர்.

நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும் என்றே சொன்னார்கள். சனி ஞாயிறு கூட விட்டுவைப்பதில்லை அதையும் இந்த வேகமான உலகம் தூக்குத்தின்று துப்பிவிடுகிறது.

விவாகரத்துக்கள் அதிகரிக்க இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பணத்தின்மீதான மதிப்பு தேவைக்கு அதிகமாக ஆகிவிட்டதன் காரணமாகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் தன் மேலாளரிடம் தன் அக்கா திருமணத்துக்குச் செல்ல விடுப்புக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் திருப்பிக்கேட்டாராம் ‘What the hell you are doing with your sister’s marriage?’ (உன் அக்காளின் திருமணத்தில் உனக்கென்ன வேலை!) என்றாராம். சரி நாம் கருத்துக்கு வருவோம். உறவுகள் பிரிவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம், (உங்களுக்கு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்)

 • வீணான காரணங்களுக்காக கோபித்துக்கொள்வது. அடிக்கடி இப்படி சிறிய சிறிய கோபங்களைக் காட்டுவதால் வெறுப்பு அதிகமாகும்.
 • காணும்போதெல்லாம் அவருடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவது, குத்திக் காட்டுவது. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை.
 • அடிக்கடி கடன் கேட்பது. கடன் அன்பை முறிக்கும்.
 • சுயநலத்துடன் நடந்துகொள்வது. அவர்களிடமிருந்து தனக்குத் தேவையிருக்கும் பொருட்களை அபகரிக்க முயற்சிப்பது.
 • நேரத்தை சரியாகக் கையாள முடியாமை. நட்புக்களுக்கும் உறவுகளுக்கும் வாரத்தில் சிலமணிநேரங்களை ஒதுக்குங்கள்.
 • ஆடு பகை குட்டி உறவா என்று பெற்றோர்கள் சண்டையில் குழந்தைகளைப் பிரிப்பது
 • விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சோம்பேறித்தனம்

இந்த வரிசை பெருகிக்கொண்டே போனாலும் சொல்லப்பட்ட காரணங்கள் மிக அதிகமாக உறவுகளைப் பிரிக்கும். உறவுகளைச் சேர்க்கும் பாலங்களாகப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

 • அவர்களின் திறமைகளைப் பாராட்டுவது, புரிந்து நடந்துகொள்வது.
 • அடிக்கடி தொலைபேசி மூலமாவது தொடர்பில் இருப்பது. காரணமாக மட்டும் பேசாமல் நலம் விசாரிக்கக் கூட தொடர்புகொள்ளலாம்.
 • விட்டுக் கொடுப்பது, சண்டைவந்தால் அதற்குப் பின் தவறே தன் மீது இல்லையென்றாலும் தானே முன்வந்து மன்னிப்புக்கேட்டு மறக்கச் சொல்வது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நந்நயம் செய்துவிடல்.
 • நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு உதவி செய்தல்

இதில் அன்பையும் நேசத்தையும் கொஞ்சம் கலந்து கொள்ளவேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர்வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். எல்லா நண்பர்களும் உறவினர்களும் கூடியிருக்கும் போது, தான் கொண்டுவந்த பரிசை என் நண்பரின் உறவினர் ஒருவர் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தார். அவர் அந்தப்பரிசை கொடுப்பதை படம் எடுக்கச் சொல்லி ஒரே அடம். நண்பருக்கோ முகத்தில் வெறுப்புக் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. தான் அன்பைக் காட்டுகிறேன் என்று விளம்பரம் மட்டுமே செய்கிறார் அவர். கோவிலுக்குச் சென்றால் உபயம் இராமசாமித் தேவர், உபயம் சின்னசாமிக் கவுண்டர் என்று எழுதியிருப்பார்கள் குழல் விளக்குகளில் (Tube Lights). அதன் ஒளியையும் மறைக்கும் அளவுக்கு. ஒளி என்பது என் நண்பரின் உறவினர் காட்டும் அன்பென்றால் அந்த விளம்பரம் அவரின் அன்பை மறைக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை.
தொடரும்…

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>