மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
இசையில் எனக்கு ஆர்வம் அளவுக்கதிகம் என்றாலும் முறைப்படி சங்கீதமோ ஏதாவதொரு இசைக்கருவியையோ கற்றுக்கொள்ள எனக்குக் கொடுப்பினை இல்லை. ஆனாலும் திரைப்பாடல்களில் எனக்கு நாட்டம் வந்ததற்கு காரணம் மெல்லிசை மன்னரின் திரையிசையும் இசைஞானியின் திரையிசையும்தான். கிட்டத்தட்ட என்னுடைய ஏழாம் வகுப்புக்கல்வியிலிருந்தே (கருத்துள்ள) திரையிசைப் பாடல்களை விரும்பிக்கேட்க ஆரம்பித்தேன்.
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு நான் அடிமையாக ஆரம்பித்தது அப்போதுதான். பாடுபவர்களின் தமிழ்ச்சொற்களைச் சரியாக உச்சரிக்க வைத்து, பாட்டெழுதும் கவிஞர்களிடம் கருத்தான சொற்களைப் பயன்படுத்தச் சொல்லி பாடும் இராகத்தின் இயல்பினை கருத்தோடு இணைத்து, எந்தெந்தக் கருவிகளின் இசை ஒட்டும்; எவையெவை ஒட்டாமல் அபச்சுரங்களைத் தரும் என்பதை உணர்ந்து ஒரு தாய் தன் மகனுக்குத் தயாரிக்கிற உணவினைப் போல் சரிவிகித அளவினில் கலந்து தரும் அந்த இசைச்செம்மல் பாடல்களில் எனக்கே தெரியாமல் என்னை இழந்தது இந்தப் பிறவியில் நான் கண்ட பேரின்பம்.

கிட்டத்தட்ட 150 பாடல்களுக்கும் மேல் மனதில் முழுவரிகளையும் அடக்கியிருக்கிறேன். இங்கே அவைகளின் சொல்லாட்சி மற்றும் இசைச் சின்னங்களை நான் எழுதப்போகிறேன். இந்தப் பாடல்கள் முழுக்க முழுக்க அழகான தமிழ் வரிகளாலானவைதான். நம் தாய்த் தமிழில் எத்தனையோ புலவர்கள் எழுதினாலும், கவிஞர்கள் கவிபாடினாலும் அவைகளின் உட்கருத்துக்கள் படிக்காத பாமரனையும் சென்றடைந்தது இந்தத் திரைப் பாடல்கள் மூலமாகத்தான். இந்தத் தொடரில் இதுவரை நீங்கள் கேட்டிருக்கும் பாடல்களும் இருக்கும், அதிகம் கேட்காத பாடல்களுமிருக்கும். ஆனால் இதைப் படித்ததும் அந்தப் பாடல்களைத் தேடிக்கேட்டுப்பாருங்கள். அந்தச் சொற்களின் சுகம் உங்களுக்குப் புரியும்; இசையின் குழைப்புகள் விளங்கும். ஏன் இங்கே இந்த புல்லாங்குழல் வந்தது, எதற்காக இந்த வீணைச் சுவடு, என்பதெல்லாம் நீங்கள் அறியவிழைவீர்கள்இசைஞானியின் இசையில் தூங்காதே தம்பி தூங்காதே என்னும் திரைப்படத்தில் பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய கவிஞர் வாலியின் இந்தப்பாடல் தான், நான் விரும்பிப் பாடிப்பழகிய முதல் பாடல். அதுவும் நம்மைப் பெற்ற தாயினை வாழ்த்திப் புகழ்பாடும் பாடல்.
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டானுன் சேயே
கீழ்வானிலே ஒளிவந்தது
கூண்டைவிட்டு கிளிவந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும்
நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர்வார்த்த கார்மேகம்
மணிமாளிகை மாடங்களும்
மலர்த் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயன்றி நான்காண வேறில்லை
அடுத்த முறை இந்தப்பாடலைக் கேட்கும் போது அமைதியான சூழலில் ஆழ்ந்து கண்களை மூடிக் கேளுங்கள். நான் சொன்னவை, எனக்குத் தெரிந்தவை; ஆனால் நீங்கள் கேட்கையில் உங்களுக்குப் புதிய உணர்வுகள் உண்டாகலாம். அதனை எனக்கு எழுதுங்கள் இந்த ஆக்கத்தில் உங்கள் பெயருடன் இணைத்துக்கொள்கிறேன்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 20:16)