| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
ஏற்கனவே நமது பாடல் வரிசைகளில் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பொன் மகாலிங்கம் இயற்றிய உன்னால் முடியும் தம்பி என்ற பாடலின் தமிழ்ச்சுவையைப் பார்த்தோம். உண்மையில் சொற்கள் மட்டுமல்ல, மெட்டிலும் கருநாடக இசைச்செல்வர்களைத் திரும்பிப்பார்க்கவைத்த பாடல் அப்படத்தில் இடம்பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்பதாகும்.
இந்தியாவின் சமூகக்கேடுகளை, கேட்க நாதியற்ற நல்வழிக் கருத்துக்களை எடுத்து முகத்திலடித்தாற்போல் தெளிக்கும் வரிகள், பாலசுப்பிரமணியத்தின் சிறப்பான குரல் வலிமை, துள்ளிக்குதிக்கவைக்கும் இசைஞானியின் இசை இப்பாடலுக்கு வலிமை சேர்த்து சிறப்புடன் இன்றும் இனிமையாக ஒலிப்பது இந்தப்பாடல்.
வற்றாத ஆறுகள், கொட்டிக்கொடுக்கும் மண்வளம் நிறைந்திருந்தாலும் விவசாயிகளின் வாழ்வில் வளமில்லை அதனால் பஞ்சம் மட்டும் மாறவில்லை என்று கூறும் வரிகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. காய்கறிகளின் விலையேற்றத்தால் வளம்பெறுவது இடைத்தரகர்கள்தான். விவசாயிகளுக்கு அதில் வருமானமில்லை இதுதானே இன்றைய நிலை. ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு புழுக்களைக் கலப்படம் செய்துவிட்டு இந்த அரசு மார்தட்டிக்கொள்கிறது.
சாதிகள் பெருகின, கட்சிகள் பெருகின அதனால் சாதிக்கட்சிகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால் அதனால் மக்களுக்கென்ன பயன்? இங்கு மனிதர்கள் வாழ்வதில்லை அதனால் இது நாடல்ல வெறும் காடுதான் என்று பாடலாசிரியர் சாடுகிறார். ஒருநாளும் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதில்லையே இதைக் கேட்க யாரும் பதவிவலிமையைப் பயன்படுத்துவதில்லை எனப்பல்லவி முடிகிறது.
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
வானுயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்கும் ஏழைத் தொழிலாளிக்கு தங்குவதற்கு வீடு வாசலில்லை என்று யாராவது கேட்டு சமத்துவத்தை நிலைநாட்டுவார்கள்; அப்பொழுது புவியிலுள்ளவைகளெல்லாம் எல்லோருக்கும் சொந்தம் என்ற பொதுவுடைமை நிலைநாட்டப்படும். அப்போது ஆயிரம் கைகள் கூடியதுபோல நினைத்ததையெல்லாம் நிறைவேற்ற முடியும் என்று கனவுகாணுகிறார் முதற்சரணத்தில். இதில் ஒரு சிறப்பென்னவென்றால் முதற்சரணத்தின் முடிவு ஆனந்தக்கூத்தாடுவதுபோல அமைந்து மேற்சொன்ன புலம்பல்களையெல்லாம் முற்போக்கான எண்ணத்தில் நங்கூரமிட்டுவிட்டார் பாடலாசிரியர்.
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு உழைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!
எல்லோரும் இன்னொருவரை நம்பித்தான் காலம் தள்ளுகிறார்கள். அது எல்லாநேரத்திலும் வெற்றியைத் தேடித்தராது. ஆறு எப்படி பாதைவகுத்துத் தராமல் தானாகவே வளைந்து வளைந்து பாதை அமைத்துக்கொண்டு நடக்கிறதோ அதுபோல, மூங்கிலில் வண்டுகளிட்ட துளைகளின் மேல் மோதும் போது யாரும் சொல்லித்தராமல் தானாக இசை உண்டாவதுபோல் தனக்கென ஒருபாதை உண்டாக்கி தன்முயற்சியால் வெற்றிபெறவேண்டுமென்று அழுந்தச் சொல்கிறார்.
என்னதான் பகலில் வெய்யில் கொளுத்தினாலும், காலைநேரத்தில் வரும் பொன்னொளி இருளைப் போக்கிக்கொண்டு வருவதுபோலே நமது மனத்தின் இருளையெல்லாம் போக்கி நம் கண்ணுக்குள் ஒளியை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கொண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?
கடைசியாக தென்னாடு வடநாட்டைவிட வரட்சியில் வாடுவதையும் கங்கை காவிரி இணைப்பைச் செயல்படுத்தினால், நதிகளைப் பொதுவுடைமை ஆக்கினால் இங்கு ஏழைகள் யாருமில்லை என்ற நிலை வரும். பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலையாக அந்த நதிகள் மாறும் என்று அழுத்தம் திருத்தமாக ஒரு தீர்வைச் சொல்லிப் பாடலை முடிக்கிறார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 11:47)