மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
பாரதி திரைப்படத்தில் ஒவ்வொரு பாடல் கேட்டுவரும்போது பாரதியாரின் வரிகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே வந்தேன். பாரதியின் வரிகளுக்கே இளையராஜாவின் இசை ஒரு எடுப்பையும் வலிமையையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. பலரும் பாடல்களைக் கேட்டுவிட்டுப் போய்விடுவது போல என்னால் போகமுடியவில்லை. அந்த நேரத்தில்தான் "எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ" என்ற பாடலைக் கேட்டேன். முதலில் அந்தப்பாடலை பாரதியாரின் பாடல் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் அந்தவரிகளில் தவழ்ந்த மரபு, இன்று இருக்கும் திரைப்படப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு எடுத்தாளத் தெரியாத ஒரு முறை.
கண்டிப்பாக "வரிப்புலியதழ் தரித்தவன் எழில் கண்டேன்" என்ற வரிகள் இன்றைய கவிஞர்களுக்கு வராது என்று நினைத்துக்கொண்டு தான் அவ்வாறு தோன்றியது. ஆனால் உண்மையில் புலவர் புலமைப்பித்தன் என்ற மனிதர் இருக்கிறார் என்பதை ஒரு நொடி மறந்ததால் தான் அவ்வாறு தோன்றியிருக்கலாம். சும்மாவா எம்.ஜி.ஆர் புலவரை தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக அன்று அறிவித்தார்? ஒரு நாட்டின் அரசவைக்கவிஞராக என்னனென்ன தகுதிகள் இருக்கவேண்டுமோ அத்தனையும் புலவர் புலமைப்பித்தனுக்கு இருக்கிறதென்பதற்கு இந்தப்பாடல் ஒன்றே எடுத்துக்காட்டு. அப்பப்பா.... என்ன ஒரு அழுத்தம் திருத்தமான வரிகள். பாரதியை பிராமண மரபை மீறி மீசை வைத்துக்கொண்டதற்காக அவர் சாதியினர் சாடுகிறார்கள். பாஷாண்டி போலிருக்கும் உன்னிடம் இறைவன் எப்படி அன்புகாட்டுவான் என்று கேட்கையில் நதிக்கரையில் நின்று அவர்பாடும் பாடல் அனைவருக்கும் இறைவன் பொதுவானவன் என்பதை உணர்த்துகிறதென்றால் எவ்வளவு பொறுப்பான ஒரு பாடல் சூழ்நிலையாக அது அமைந்திருக்கவேண்டும். அதுமட்டுமல்ல அந்தப்பாடல்தான் அத்திரைப்படத்தின் முழுக் கருவையும் அடக்கித் திருப்பமாக அமைந்த ஒன்று. அதற்கான முழுத்தகுதியும் இந்தப்பாடலுக்கு உண்டென்றால் அது மிகையல்ல. இறைவன் எங்குமிருக்கிறான்; எனகுள்ளும் இருக்கிறான். தவழ்ந்து ஓடும் நதியையே சடைமுடியாகக் கொண்டவன். அடியும் (பாதமும்) முடியும் (உச்சியும்) யாராலும் அறியமுடியாதவன். ஏழை எளிய அடியவர் சொல்லுகின்ற வேதமாகவும் இருக்கிறான் என்று இறைவன் பொதுவானவன் என்ற கருத்தைப் பல்லவியில் வைத்துப் பட்டாசு வெடிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியா
அடியும் முடியும் அறிய முடியா
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத்திரு வுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு கொண்டன்
பற்றுத்தலைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
குடுக்கலில் சரம் தொடுத்தவன் தலை முடிற்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
குற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2009 08:52)