| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
பொன் மகாலிங்கம் இயற்றி இளையராஜா இசையமைத்த பாடல் உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம்பெற்று அப்போதெல்லாம் பல இளைஞர்களின் எண்ணங்களில் புரட்சி விதை தூவியது.
இந்தத் திரைப்படம் இயக்குநர் பாலச்சந்தரின் வாழ்வியல் திரைப்படம்.
சோர்ந்துவிடும் மனிதர்க்கெல்லாம் உன்னால் முடியும் என்று திரும்பத்திரும்ப மனதுக்குள் கொப்பளிக்கவைத்த பாடல் இது. எனக்குள் தனிப்பட்ட முறையில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய பாடல் இது.
உன்னால் முடியும் தம்பி தம்பிஉனக்குள் இருக்கும் உன்னை நம்பிஉன்னால் முடியும் தம்பி தம்பி - அடஉனக்குள் இருக்கும் உன்னை நம்பிதோளை உயர்த்துதூங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்தோளை உயர்த்துதூங்கி விழும் நாட்டை எழுப்புஎதையும் முடிக்கும் இதயம்உன்னில் கண்டேன்
தோளை உயர்த்தி விழிப்புணர்வின்றி தூங்கிவிழும் நாட்டை எழுப்பி புரட்சிசெய்யத்தூண்டும் பாடலிது. என்னால் முடியாது நான் வாழ்வில் நிறையப் போராடிவிட்டேன் என்று சோர்ந்து போவோர்க்கு அந்த நேரத்தில் இந்தப்பாடலை கேட்டால் எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன் என்று உணர்வுகளைத் தூண்டி சோர்வைப்போக்கும் பாடலிது.
நாளைய நாட்டின் தலைவனும் நீயேநம்பிக்கை கொண்டு வருவாயேஉனக்கென ஓர் சரித்திரமேஎழுதும் காலம் உண்டு
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யாரென்று கேட்ட அந்தப்பாடலின் புத்துணர்வு மாறாத வரிகள் மேலுள்ளவை.
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்சாராய கங்கை காயாதடாஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்காசுள்ள பக்கம் பாயாதடாகுடிச்சவன் போதையில் நிற்பான்குடும்பத்தை வீதியில் வைப்பான்தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடாகள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டாகட்சிக் கொடி ஏறுது போடாகள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டாகட்சிக் கொடி ஏறுது போடாமண்ணோடு போகாமல்நம் நாடு திருந்தச் செய்யோணும்
வானிலுள்ள ஆகாயகங்கை கூட காணாமல் கரைந்து போகும், ஆனால் சாராய ஆறுமட்டும் காயவே காயாது. மது நாட்டுக்கு உயிருக்குக் கேடு என்று அரசே விளம்பரப்படுத்திவிட்டு அரசாங்கமே சாராயக்கடை நடத்துவது எவ்வளவு அசிங்கமானது என்பதை யாராவது கேட்கிறார்களா? காசு வருகிறதென்றால் கஞ்சாவையும் கலந்து விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தக்காசில்தானே கட்சியே நடக்கிறது என்று சாடித்தள்ளுகிறார் கவிஞர்.
குடித்தவன் தான் வீதியில் விழுந்து மண்ணைக் கவ்விக்கொண்டு வீட்டையும் நாட்டையும் மண்ணுக்குள் தள்ளுகிறான். அவனைத் தண்டிக்கவேண்டிய அரசே ஊற்றிக் கொடுக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுப்பது யாரென்று கேட்கிறார் கவிஞர். சட்டதை நம்பாதே அது பணக்காரக் கூட்டத்துகாக படைக்கப் பட்டது, உனக்கென ஓர் சரித்திரத்தை எழுதவேண்டிய காலத்தை உருவாக்கு என்கிறார்.
கல்லூரி பள்ளி இல்லாத ஊரைகையோடு இன்றே தீ மூட்டுவோம்கல்லாத பேர்கள் இல்லாத நாடுநம் நாடு என்றே நாம் மாற்றுவோம்இருக்கிற கோவிலை எல்லாம்படிக்கிற பள்ளிகள் செய்வோம்அறிவெனும் கோபுரம் அங்கேநாம் காணுவோம்வானம் உங்கள் கைகளில் உண்டுஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டுவானம் உங்கள் கைகளில் உண்டுஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டுநான் என்று எண்ணாமல்நாம் என்று உறவு கொள்ளணும்
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இல்லாத ஊரை கையோடு இன்றே தீமூட்டுவோம் என்றால் என்ன? படிக்காதவன் நாட்டில் இருப்பதைத் தவிர்க்கவேண்டுமென்ற வெறி கவிஞரிடம் தெரிகிறது. கோவிலகளை மட்டும் வானுயரக்கட்டிவைத்துவிட்டு பள்ளிகள் இடிபாட்டுச் சிதறலகளாயிருக்கும் அவலங்களைச் சாடும் ஆசிரியரின் மனது நம்மை புருவங்களை உயர்த்தவைக்கிறது.
வானமுங்கள் கைகளில் உண்டு என்பதன் மூலம் யார்தடுத்தாலும் நிற்காதீர்கள் என்றும். நான் என்று எண்ணாமல் நாமென்று உறவுகொள்ள வேண்டும். கொஞ்சமாவது பொதுநலக் கொள்கை வேண்டுமென்று பாடலில் உறுதியாகச் சொல்லப்படுகிறது.
இப்படியொரு கவிஞர் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார் என்று இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இன்றைக்கு எதுகை மோனையில் நான்கு வார்த்தைகளைப் போட்டு அடுக்கடுக்காய் எழுதுபவனெல்லாம் பாடலாசிரியர், கவிஞர் என்று அடைமொழி வைத்துக்கொண்டு அலைகிறான். இவர்களெல்லாம் நம் தமிழ்நாட்டுக்கு பெருத்த அவமானம். "ஹலோ மிஸ்டர் கந்தசாமி ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மி... ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு..." இந்தப்பாடலில் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்கின்றன என்று எண்ணிப்பாருங்கள். இந்தப்பாடல் பார்ப்பதற்கும் அவ்வளவு அருவருப்பை ஊட்டக்கூடிய நடன அமைப்பக் கொண்டிருக்கிறது. போடா...போடி... என்று வக்கிரமான எண்ணங்களை இன்றைய இளைய சமுதாயத்தின் மீது திணிக்கும் இவர்களையெல்லாம் கொண்டுபோய் சாக்கடைத்தண்ணீரை குடிக்கவைக்கலாம் என்று மனதுக்குள் தோன்றுகிறதல்லவா? அரிசியில் கற்களையும், தேயிலை, காபித் தூளில் புளியங்கொட்டையைக் கலந்து விற்கும் கலப்படக் கருங்காலிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு தோன்றுகிறது?
நல்ல தமிழ்ப்பாடல்கள் இனியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. திரைப்படத்துறை நச்சுக்கலக்கப்பட்டத் திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லும் கிடப்புத்தண்ணீர் நிறைந்த குளமாகிவிட்டாலும், இந்தப் பாடல்கள் நமக்கு அவ்வப்போது கேட்கும் வான அமுதாகத் தோன்றுகிறது.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 20:06)