மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
நம்மில் பலர் பாடல்களின் பல்லவி என்றழைக்கப்படும் முதலிரண்டு மூன்று வரிகள் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. பல பாடல்களை தினமும் கேட்டபோதும் நினைவில் வைத்துக்கொண்ட போதும் சரணம் என்றழைக்கப்படும் உள்வரிகள் நினைவில் நிற்பதில்லையே ஏன் அப்படி என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு மிகப்பெரிய காரணங்கள் இருக்கின்றன.
முதல்வரிகளைப் (பல்லவியை) பலமுறை திருப்பித் திருப்பிப் பாடுவார்கள் முதலில் இரண்டு மூன்று முறைகளும் பின் ஒவ்வொரு சரணம் முடியும்போதும் பாடும்படி அமைப்பார்கள். இந்த வழக்கம் 99 விழுக்காடு பாடல்களில் மரபாகவே இருந்துவருகிறது. திரும்பத்திரும்பப் பாடுவதால் அந்த வரிகள் நினைவில் நின்றுவிடுகின்றன. நாக்க முக்கா கோக்க மாக்கா என்று ஏதாவது கருத்துக்கெட்ட வரிகளைபோட்டு பாடினாலும் திரும்பத்திரும்ப அந்தப்பித்துப்பிடித்த வரிகள் வருவதால் நினைவை விட்டு அகல்வதில்லை.
முதல்வரிகளுக்காக மெட்டு எப்படிவரவேண்டும் என்று இசையமைப்பாளர் சொன்னபோதும் சரி அல்லது வேண்டாமென்று முடிவு செய்வது நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமாக இருந்துவிடுகிறார்கள். முதல்வரிகளுக்கான மெட்டு முடிவானதும் பெரும்பாலும் உள்ளே வரும் வரிகள் எப்படி இருக்கவேண்டுமென்று இசையமைப்பாளர் ஒருதலையாக முடிவுசெய்கிறார் அல்லது அப்போதைக்கு என்ன வருகிறதோ அதைப் போட்டு பாட்டை முடித்துவிடுகிறார்.
செல்லிடப்பேசிகளில் (Mobile phones) அழைப்புமணியாக, மற்றும் பல விளம்பரங்களில் முதல்வரிகளே அதிகம் இடம்பெறுவதால் அது எங்குசென்றாலும் காதில் விழுகிறது.
"போதும் நிறுத்துய்யா!" என்று தாங்கள் என்னைத்திட்டுவது கேட்கிறது. இப்படி எவனாவது ஆராய்ச்சி செய்வானா? இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என்று நீங்கள் கேட்டாலும், இதில் ஒளிந்துள்ள உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. இதனால் நாம் பல கருத்துள்ள செய்திகளைக் காதில் விழுந்தாலும் வாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்பதே அந்த உண்மை. மூன்றாவது வாரமாக இந்தப் பழைய பாடல் மெல்லிசை மன்னர்கள் இசைக்கு சீனிவாசு பாடிய நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல் நமது சிந்தனைக்கு வருகிறது. முதல்ப் பாடலுக்கு விளக்கம் எழுதியபோதே நிறைய வாசகர்கள் பாராட்டுப்பதில்கள் கொடுத்திருந்தது நம்மை இன்னும் ஊக்கப்படுத்தியுள்ளது.
நம் வாழ்வில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? ஆனால் நடந்துவிட்டால் மனிதர்கள் யாராவது தெய்வத்திடம் சென்று எனக்கு அதுவேண்டும், இதுவேண்டுமென்று கேட்பார்களா? அப்படியொரு நம்பிக்கைதான் வந்திருக்குமா? இந்தக்கருத்துத்தான் பாடலின் முதல்வரி. சரி நமக்கு நினைப்பதே தொடர்ந்து நடக்காமல் பல்வேறு காரணங்களால் நாம் நடக்கக்கூடாதது என்று நினைப்பதோ அல்லது எதிபார்க்காத ஒன்றோ நம்வாழ்வில் நடக்கும்போது அதற்குப் பின் இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்தனை செய்து செயல்படுத்தாமல் அதைப்பற்றியே வருந்திக்கொண்டிருப்பதால் அமைதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இந்த சலனமற்ற அப்பட்டமான வாழ்வியல் கருத்தினைத்தான் இரண்டாவது வரி நமக்குச் சொல்கிறது.
இறைவன் ஒன்றை நினைத்து அந்தக்கதையை முடித்துக்கொண்டுவிட்டால் பின்னர் அதை மாற்றிக்கொள்வதே இல்லை. மாண்டவர் மீண்டதில்லை, உடைந்த பானை ஒட்டிக்கொண்டதில்லை. ஆனால் மனிதனுடைய வாழ்க்கையில் ஒருமுறை தவறு செய்வதால் சந்திக்கும் பிரச்சனையை அவன் காலம் முழுதும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நினைவற்ற நிலையில் செய்த பிழை வாழ்வைவிட்டு அகன்றுபோவதில்லை. இது அடுத்த இரண்டு வரிகளில் சொல்லப்பட்டுள்ளது.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நாம் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம், வாழ்வில் பலரைச் சந்திக்கிறோம், பலவற்றைச் சிந்திக்கிறோம். ஆனால் காலம் மாற மாற நாம் அவர்களையும் அவர்கள் பற்றிய சிந்தனைகளையும் மறந்துபோகிறோம். ஆனால் வாழ்க்கைத்துணை என்ற ஒருவரைமட்டுமே, பிறந்தபோது அறியாமல் இடையில் சந்தித்துக் காலம் முழுவதும் நினைவில் தொடர்கிறோம். அதுபோல தன்னை ஒரு வழிப்போக்கனாக எதேச்சையாகச் சந்தித்த மனிதர்களில் ஒருவராக நினைத்துக்கொண்டு ஒருவருடன் வாழ்க எனக் கதைப்பாத்திரம் பாடுவதாக உள்ளது. இன்னொருவர் திடுமென்று வந்து உன்வாழ்வில் நீ நெறிதவறிப்போக ஒருபோதும் துணிந்துவிடாதே. அதுபோல கதையில் வரும் பாத்திரம் (தேவிகா) சிலகாலம் மட்டுமே ஒருவருடன் (முத்துராமன்) வாழவேண்டிய கட்டாயத்திற்கு வந்தாலும் உன் நினைவில் என்றும் இருக்கவேண்டியவர் மருத்துவராக வரும் கல்யாண் குமார் பாத்திரம்தான். என்னை இனிமேல் நினைக்காதே, எதையும் வாழ்வில் சாதாரணமாக எடுத்துக்கொள்க என்று கூறுவது முதற்சரணம். இதில் ஒன்றிருக்க இன்னொன்றுவந்தால் வாழ்வில் அமைதி போய்விடும் என்ற வரிகள்தான் இதற்கு மகுடம் சூட்டும் கருத்து.
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நாம் எங்கே பிறந்தோம், எங்கெங்கெங்கெல்லாம் சென்றோம். இப்படியெல்லாம் நடக்குமென்று நாம் இதற்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருந்திருக்கவே முடியாது. தெரிந்துகொண்டிருந்தால் அந்த வாழ்வை நாம் ஆர்வத்துடன் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
நாம் பயணிக்கும் வாழ்க்கைப்பாதை மாறி மாறிப்போகும்; சிலகாலம் நாம் நெடுஞ்சாலைகளில் போயிருப்போம், பின் சிலகாலம் ஒற்றையடிப்பாதையில் கூட நடந்திருப்போம். எல்லோரும் பயணிக்கும் பாதை அவரவர்க்கு ஓரிடத்தில் முடிந்துபோகப் போகிறது. இந்த உண்மை அறிந்து கொண்டவர்க்கு மயக்கமென்பதே இல்லை. இதில் ஒருவரியிலாவது அர்த்தமற்ற, மற்றும் கோர்வையாக வரவேண்டுமே என்பதற்காக பொருந்தாத வார்த்தைகள்/கருத்துக்கள் வந்திருக்கிறதா பாருங்கள். கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசந்தான்.
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைச் சிந்திக்கவைத்து நம் நினைவில் நின்றிருக்கிறது இப்பாடல்.
நமது பனித்துளிகள் வாசகர் பழனிவேல்ராஜன் விரும்பிக் கேட்டிருந்த பாடல் இது.தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 23:20)
வணக்கம்....மிக நன்றாக பாடலை விளங்கச் செய்தீர்கள்... நன்றி...