| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
தனிப்பாடல்கள் (ஆண்/பெண் தனியாக மற்றும் குழுவினருடன் சேர்ந்து பாடும் பாடல்கள்) அதிகம் கருத்துக் கொண்டவைகளாக அமைந்துவிடுவது இயற்கை. ஏனென்றால் சேர்ந்து பாடும் பாடல்களில் அதிகம் காதல் உணர்வுகள் மிஞ்சிவிடுகின்றன. அந்த வகையில் எண்பதுகளின் பின்பகுதிகளில் மனோ என்ற பாடகருக்குக் கிடைத்த பாடல்களனைத்தும் துள்ளல் மிகுந்த பாடல்களாக இருந்துவிட்டன.
வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் கவிஞர் மு. மேத்தாவின் இந்தப் பாடல் படிக்காவிட்டாலும் உலகறிவையாவது கற்றுக்கொள்ளுங்கள் என்கிற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது.
வேலையில்லாதவந்தான்
வேலைதெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்...
விவகாரமான வேலைக்காரன்
மொத்தமாக வந்தால் அதை சுத்தமாக முடிப்பேன்
சத்தம் போட வேண்டாம் அட ஒற்றைக்கு ஒற்றை வாடா
ஒரு நல்ல வேலைக்காரனை எப்படித் தேர்வுசெய்வீர்கள். ஏற்கனவே வேறோர் இடத்தில் வேலை செய்பவன் இடம் மாறிப் புதிய வேலை கேட்பதற்குக் காரணம் ஒன்று அவன் அதிக சம்பளத்தை எதிர்பார்த்தவாறு இருக்கும் அல்லது இருக்குமிடத்தில் அவனுக்குச் சிரமங்கள் இருக்கும்; இந்த வேலையைவிட அவனுக்குச் சாதகமாக இருக்கும் இடம் தேடுகிறான் என்று பொருள். ஆனால் வேலையில்லாதவன் நாம் சொன்ன வேலையைச் செய்யச் சித்தமாயாயிருப்பான். அவந்தான் எப்படியாவது செய்துமுடித்துத் தன் வேலையைத் தன்னிடத்தில் தக்கவைத்துக் கொள்ள நினைப்பான்; அவனிடத்தில்தான் வீரம், விவேகம் இரண்டுமிருக்கும் என்கின்றன முதலிரண்டு வரிகள்.
அரைகுறைக் கட்டளைகள், காரணம் என்னவென்று சொல்லாமல் "வேலையை மட்டும் செய்! காரணம் கேட்காதே" என்று தன் மேலாளரோ அல்லது முதலாளியோ சொல்லும்போது அவன் செய்யும் வேலைகளில் சுத்தமிருக்காது. எதற்குச் செய்கிறோமென்று புரியாமல் செய்து முடிக்கும் வேலை சிறப்பானதாய் அமையாது. என்பதை "மொத்தமாக வந்தால் அதைச் சுத்தமாக முடிப்பேன்" என்ற வரிகளில் கவிஞர் சொல்கிறார்.
அன்பாய்க்கூறி வேலை வாங்கும் மேலாளர்களுக்கு அவர்கள் சிரமத்தில் மாட்டிக்கொண்டாலும் உதவிசெய்யக் காத்திருப்பான். சிடுமூஞ்சி மேலாளரை எப்பொழுதாவது மாட்டிவிடக் காத்திருப்பான். அன்பைக் கொடுத்து அன்பை வாங்க ஒருவருக்கு ஒருவர் ஒற்றாசையாய் இருப்பதால் ஒருவர் மனமும் வாடாது இதைத்தான் "சத்தம்போட வேண்டாம், ஒற்றைக்கு ஒற்றை வாடா (து)" எனக் கவிஞர் கூறுகிறார்.
படிச்சா போதுமின்னு நினைக்காதப்பா - இங்கே
படிச்சுப்புட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா!
எதிர்த்துப் பட்டம் விட்டா அறுப்பேனப்பா
எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா
காலம் நம்ம கையில இருக்குது
கவலைகள் ஏதும் கிடையாது
ஏழை எங்க வாழ்க்கையை யாரும்
ஏலம் போட முடியாது
படிச்சவந்தான் வாங்குற பட்டமும்
படிக்காதவன் விடுற பட்டமும்
புத்தகம் உள்ளது கையில அங்கே
வித்தைகள் உள்ளது கையில இங்கே
நான் படிப்பது மனுசனைத் தான்
பயிற்சியற்ற படிப்பினால் பயனேதுமில்லை, ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அடுத்து நாமறியும் உண்மை. என்னதான் 90 மதிப்பெண்கள் வாங்கினாலும் அவர்களால் வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. 50 மதிப்பெண்கள் வாங்கித் தேறி வேலை கிடைக்காதவன் ஆரம்பிக்கிற நிறுவனங்களில்தான் 90 மதிப்பெண்வாங்கித் தேறியவன் வேலை செய்து சம்பளம் பெறுகிறான்.
போட்டியை நல்லமுறையில் வெல்லாமல் சூத்திரங்களினால் வெல்ல நினைப்பவர்களை நான் முறியடிப்பேன் என்பதைத்தான் "எதிர்த்துப் பட்டம் விட்டால் அறுப்பேன்" என்று கூறுகிறார் கவிஞர். பணத்தால் வெல்லும் வல்லவனாக இருந்தாலும் பதவியைப் பயனாக்கி வெல்லும் சூத்திரனாக இருந்தாலும் போராடுவேன் என்று திடநம்பிக்கையை நமக்குத் தரும் வரிகள்தான் "எதிர்த்துப் பட்டம்விட்டால் அறுப்பேனப்பா, எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா". அப்படி போராடும்போது தோற்றுவிட்டாலும் அடுத்தமுறை நாம் வெல்ல முயற்சி செய்ய வேண்டுமென்றுதான் "காலம் நம்ம கையில இருக்குது கவலைகள் ஏதும் கிடையாது" என்று நம்பிக்கையூட்டுகிறார் பாடலாசிரியர். கொத்தடிமைத்தனத்தை எதிர்க்கும் வரிகள்தான் அடுத்தவை இரண்டும். பட்டம் படிப்பவனிடம் புத்தகமிருக்கும், படிக்காதவனிடம் பல வித்தைகளிருக்கும். என்பதாகக் கூறுவது படிக்காதீர்கள் என்பதற்காக அல்ல படித்தால் மட்டும் போதாது. பயிற்சியைச் சிறப்பாகச் செய்து கைதேர்ந்த வித்தகனாக ஆக மனிதர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதைக் கூறுகிறார்.
விவரம் இல்லையின்னு சிரிக்காதப்பா - சிறு
விளையாட்டுப் பிள்ளையின்னு நெனைக்காதப்பா
பிறப்பே அப்பா அம்மா விளையாட்டப்பா
இந்த பெரியவர்கள் செய்வதெல்லாம் சரியா தப்பா?
கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம் தேசம்
மேடை போட்டுத் தேடும் தலைவரைப்
பாருங்க எல்லாம் பொய்வேசம்
ஆறோடுற ஓட்டத்தைப் பார்
ஓட்டத்தைப் பார், ஓட்டத்தைப் பார்
அதுதானே சுதந்திரந்தான்
சுதந்திரந்தான், சுதந்திரந்தான்
வந்த சுதந்திரந்தான் போனது எங்கே?
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே
விக்கிறவன் வாங்கறவன் வேலை நமக்கேன்
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் விளையாட்டுக் குணமுண்டு; என்னை மட்டும் ஏன் விளையாட்டுப்பிள்ளையெனக் குறைத்து மதிக்கிறாய் என்பது இரண்டாவது சரணத்தின் துவக்கம். அரசியல்வாதி விளையாடுகிறான். ஓட்டுக்கேட்டு வருகிறான், பிறகு காணாமல் போய்விடுகிறான். இதைத்தான் "கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது; காணாமல் போச்சுது நம் தேசம்" என்கிறார். இந்தவரிகளில் இந்திய நாட்டின் பழைய ஒழுக்க நிலைகள் மாறிப்போனதால் நாடே காணாமல் போனதென்கிறார். இதையெல்லாம் விடுத்துச் சுதந்திரம் என்பதை ஓடும் ஆறைப் பார்த்துக் கற்றுக்கொள் என்கிறார் கவிஞர். குற்றத்தைத் தட்டிக்கேட்கும் சட்டமும் கையூட்டுக்கு விற்கப்படுகிறது.
படித்து வாங்கும் சட்டமும் விலைக்கு விற்கப்படுகிறது. நாம் இவைகளை விற்கும் கூட்டத்திலும் நாம் இணைந்து கையூட்டுப் பெறவும் விற்கவும் வேண்டாம் காசுக்குக் கல்வியை விலைகூறி விற்கவும் பெறவும் வேண்டாம் என்று விலகி நிற்கச் சொல்கிறார் கவிஞர்.
இவ்வளவு கருத்துக்கள் அடங்கிய இந்தப்பாடல் இப்போதாவது சாதாரணமான குத்துப்பாடல் அல்ல என்பது விளங்குகிறதா? பாட்டின் கருத்துக்கள் வேகம் மிகுந்தவையாக இருப்பதால், இதன் மெட்டும் வேகத்தில் செல்கிறது. இளையராஜாவின் இயல்பில் குழுவினர் அடிக்கடி ஆமாம் சாமி ஆமாஞ்சாமி என்று பாட்டின் கருத்துக்கு தலையாட்டுவது போல் கூறுவது புரிந்து கேட்போர் மனதை மாற்றும், மேலும் அவர்கள் தவறு செய்யும் முதலாளியாகவோ, மேலாளராகவோ, அல்லது ஊரை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் கைத்தடிகளாகவோ இருப்பவர்களாயின் சிந்திக்கத் தூண்டும்.
தொடரும்....
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 23:24)
நாக்கு மூக்குன்னு எதையாவது எழுதிக் கொல்லுறானுகளே... காசுக்குத்தானே பாட்டெழுதி விக்கறானுக....