மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
தமிழனைத் தமிழனைத் தவிர யாராலும் பழிவாங்க முடியாது. சிங்கள இராஜபக்ஷே நெஞ்சில் குத்தினால் நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் நாளேடுகள் முதுகில் குத்துகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கொடூரமாகக் கொல்லப்பட்ட நமது உடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
மெரினாக் கடற்கரையில் சூன் 26 ம் தேதி ஞாயிறு நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சிப்பாகுபாடு, சாதி மதப்பாகுபாடின்றி ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமெனத் திரண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. கூட்டத்தில் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப் பட்டன. இது போர்க்குற்றம் என அறிவித்து நடவடிக்கை எடுக்க ஐ.நாவுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

ஆனால் இப்படியொரு நிகழ்வை அடுத்த நாள் செய்தித்தாள்களில் எதிர்பார்த்த நமது தமிழரின் நெஞ்சம் ஏமாந்த நிமிடங்கள் இருக்கின்றனவே.... அய்யகோ... இந்தக் கொடுமை இலங்கையின் இராஜபக்ஷே செய்த கொடூரத்தை விடக் கொடுமையானது. இதில் பத்திரிக்கைச் சுதந்திரம் என்று இவர்கள் பேசும் பேச்சு எங்கே போச்சு என்று தெரியவில்லை!
தினமலர், தினத்தந்தி மற்றும் தினமணி ஆகிய நாளிதழ்கள் கூட சொல்லிவைத்தாற்போல் இந்தச் செய்தியைப் புறக்கணித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!. பத்திரிக்கை நடத்துவது இவர்களுக்கெல்லாம் தொழில் என்பதை நாமறிவோம். ஆனால் தொழிலில் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை மற்றும் உண்மை பேசும் நாளிதழ் என்றெல்லாம் மூக்கைப் பிடித்துக்கொண்டு முழக்கமிட எந்தத் தகுதியும் இவர்களுக்குக் கிடையாது.
இவர்களையெல்லாம் தமிழ்நாட்டை விட்டு ஓட ஓட விரட்டினால்தான் இறந்த நமது தமிழர் ஆன்மா அமைதிபெறும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 சூன் 2011 12:17)