மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
மனப்பாடம் செய்து படித்ததைத் தேர்வில் வாந்தியெடுத்து, படிப்பை முடித்தால் சரி என்று மதிப்பெண்களைக் குவிக்கும் மனப்பான்மை நமது மாணவர்களிடையே பெருகிவருகிறது.
ஆனால் இதன் ஆரம்பம் நேற்று, முந்தா நேற்றல்ல, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடங்களாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்து விட்டது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புத்தேடி அலையும் நமது மாணவர்கள் எங்கே தோற்கிறார்கள் என்று உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால் அது இங்கேதான்.
ஆமாம், இதுதான் மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக கணினித்துறை, மின்னணுவியல், மின்னியல், பயன்பாட்டியல், மற்றும் இயந்திரவியல் துறை மாணவர்கள் தங்களுடைய இறுதியாண்டு படிப்பின் அங்கமாகச் செய்யும் திட்டங்களின் மூலம் (Project Work) அவர்களின் முயலாமை மற்றும் சோம்பேறித்தனத்தை மூலதனமாகக் கொண்டு பலர் காசுசேர்க்கும் கலையைக் கற்றுவைத்துள்ளனர்.
ஒரு நான்கு நாட்களுக்கு முன் ஒரு மாணவன் என்னைத் தொடர்புகொண்டு தனக்கு இறுதியாண்டு
தேர்வின் அங்கமாக வரும் திட்டத்தினை (Project Work) செய்ய அனுமதி தர மென்பொருள் நிறுவனத்திடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டான். நானும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தும் நண்பரொருவரைத் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொடுத்தேன். பிறகு என்னைத் தொடர்புகொண்ட அந்தமாணவன் கேட்டானே ஒரு கேள்வி.
எங்களுக்கு கோப்புக்களைச் செய்துகொடுத்து (Document) காண்சட்டங்களை (Presentation Slides) செய்துகொடுப்பார்களா என்று கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனைத் திட்டவும் மனதில்லை, (ஏனென்றால் விருப்பப்பட்டு உதவி என்று கேட்பவரை நாம் எந்த உரிமையில் சங்கடப்படுத்துவது) சரி அப்படியே செய்துதரும் ஒரு வியாபாரியைப் பிடித்துத் தருகிறேன் என்றும் சொல்லமுடியவில்லை.
அவர்கள் மேல் மட்டும் தவறில்லை, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் காசுகொடுத்து இந்த தவறை மாணவர்கள் நடத்த முடியாதவாறு கிடுக்கிப்பிடி போடுவதில்லை. முன்னோட்டம் (Review) என்று அழைத்து அமரவைத்து அவனுக்கு என்ன உதவிவேண்டுமோ அதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள்.
மேலும் இந்த புரோஜக்ட் விற்கும் கடைகள் என்ன செய்கின்றன தெரியுமா? ஒரு மாணவன் செய்த திட்டத்தை வேறு ஒரு கல்லூரி அல்லது அடுத்து வரும் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு விற்று காசாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பல கல்லூரிகளுக்கு தேர்வாளராகச் சென்றிருக்கிறேன். ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு மாணவன் செய்த புரோஜக்டையே இன்னொரு கல்லூரியில் தான் செய்ததாக காண்பிப்பான். அதையே இன்னொரு கல்லூரியில் இன்னொருவன் காட்டி மதிப்பெண் வாங்கிக் கொண்டிருப்பான்.
சரி இதனால் என்ன இழப்பு என்கிறீர்களா? இழப்புத்தான். பெரும்பாலும் இந்த இறுதியாண்டுத் திட்டங்களானவை (Final Year Project) நிறுவனங்களில் பணிபுரிய இயல்நிலை முன்னறிவினை ஊட்டும். இதன்மூலம் ஒரு மென்பொருளையோ, பொறியின் அமைப்பையோ உருவாக்குதலுக்கான அறிவினையோ இவர்கள் பெறமுடியும். அதனால் நேரடியாக நிறுவனங்களில் பணியாற்றும் திறனை ஓரளவு மாணவர்கள் பெறுவதற்கும் முடியும்.
மாணவர்களிடம் இந்த அறிவில்லாததால்தான் பல இலட்சங்களைச் செலவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிகளில் தேர்வு செய்யும் மாணவர்களைப் பயிற்சியை அளிக்கின்றன. இன்றைய நிலை அப்படியில்லை, அண்மையில் நடந்த பொருளாதாரச் சீரழிவினால் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் நிறுவனங்கள் இந்த பயிற்றறிவில்லாத தற்போதுதான் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய (Freshers) மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு விட்டன.
கல்லூரிகள் அளவில்லாமல் உருவாகிவிட்டதாலும், நிறுவனங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவும் போட்டி நிறைந்த இந்த பணிச்சந்தையில் வெற்றிபெற வேண்டுமானால் காசுக்கு இறுதியாண்டுத் திட்டங்களை (Final year project) வழங்கும் வியாபார நிறுவனங்களைத் தவிர்த்து சுயமாக முயன்று வல்லுனர்கள், மற்றும் மென்பொருள், தொழிற்துறை நிறுவனங்களின் உண்மையான உதவியுடன் கல்வி இறுதியாண்டுத் திட்டங்களைச் செய்து நிறைவடைய வேண்டும் என்பதை உணர இதுதான் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதியான வாய்ப்பு.
இறுதித்தேர்வுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்தக் கட்டுரை பனித்துளிகளின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 08 திசம்பர் 2010 08:43)