| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
தமிழ் படத்துக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசின் துப்புக்கெட்ட விதியை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று தமிழைச் சீரழிக்கும் முயற்சியிது.
எந்திரன் என்பது வடமொழிச் சொல். பாட்டில் பூம் பூம் ரோபோ.., சுட்டி சுட்டி ரோபோ, என்று தமிழ் எங்கேயுமே இல்லையே... கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த இந்தப்படத்துக்கு எதற்கு வரிவிலக்கு? மக்கள் பணம் எப்படியெல்லாம் சுருட்டப்படுகிறது பாருங்கள்.
சட்டத்தை தனக்காக வளைத்து எவ்வளவு ஈட்டமுடியுமோ அவ்வளவையும் ஈட்டிக்கொள்கிறது ஒரு கூட்டம். வரிவிலக்கு மட்டுமல்ல,
முறைப்படி திரைப்படங்களுக்கு எவ்வளவு அனுமதிக்கட்டணம் பெறவேண்டுமோ அதைத் தவிர்த்து அதைவிட அதிக கட்டணம் பெற இவர்கள் கையாளும் வழிகள் ஆயிரமாயிரம். அனுமதிச் சீட்டே கிடைக்காது எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன என்ற ஒரு வளிப் பொய்யை இவர்களின் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளில் பரப்பி மக்களை அதற்காக ஏங்க வைத்துப் பின் அனுமதிச்சீட்டு வழங்கும் வழியில் Housefull பலகை மாட்டி அசிங்கமாகக் கழிப்பறைகளில், கொடுமையான விலைக்கு திரைப்பட அனுமதிச் சீட்டு விற்றார்கள் என்று நண்பர்கள் பலர் புலம்பித் தீர்த்தார்கள்.
ஆகமொத்தம் கம்பிவடத்தொலைக்காட்சித் தொழிலை தமிழ்நாடெங்கும் அழித்து, அதனால் பிழைத்துவந்த படித்த வேலையில்லாத இளைஞர்களைப் பிச்சையெடுக்க விட்டதற்கடுத்து அண்ணனும், தம்பியும், மாமனும் மற்றும் மச்சானும் இன்று திரைப்படத் தொழிலை அழிக்க வந்துவிட்டார்கள். நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பதுதான் அது. அதுபோல இவர்கள் செல்லுமிடமெல்லாம் நாசமாய்ப் போகும் என்று நாடறியத் துவங்கிவிட்டது. குடும்பமே சேர்ந்து பலதொழில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கிறது.
இவர்களின் சொத்துக்கு முன் பட்டுச்சேலைகளையும், செருப்புகளையும், சூட்கேசுப் பெட்டிகளையும் காட்டுவது என்னவோ பெரிய திருட்டாகத் தோன்றவில்லை...!