| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
கலப்படம் என்பது தற்பொழுதெல்லாம் வணிகர்களுக்கு ஒரு பாடமாகவே ஆகிவிட்டிருக்கிறது. எதை எதோடு சேர்த்து கணிசமான வருமானம் பார்க்கலாம் என்பதுதான் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லித் தந்துவிட்டுப் போகிறார்கள். இதனால் வழிவழியாகக் கலப்படக் கொள்ளை சமுதாயத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. தேயிலைத்தூளில் ஆரம்பித்து மஞ்சள், பருப்பு, அரிசி என்று இதன் பட்டியல் நீண்டு வண்டிகளுக்கான எரிபொருள்வரை கலப்படமோ கலப்படம்.
பின்வரும் அட்டவணை கலப்படம் செய்யப்படும் பொருட்களைப் பட்டியலிடுகிறது.
|
பால் |
தண்ணீர், ஸ்டார்ச், பால் பொடி |
|
அரிசி |
கல் |
|
பருப்பு |
கேசரி பருப்பு |
|
மஞ்சள் பொடி |
lead chromate |
|
தானியா எனப்படும் மல்லித்தூள் |
சாணிப் பொடி, ஸ்டார்ச் |
|
நல்ல மிளகு |
காய்ந்த பப்பாளி விதைகள் |
|
வத்தல் பொடி |
செங்கல் பொடி, மரப்பொடி |
|
தேயிலை |
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை மேலும் மற்ற கழிவுகள் |
|
காஃபி எனப்படும் குழம்பிப் பொடி |
பேரிச்சம்பழ பொடி |
|
பெருங்காயம் |
மண், பிசின் |
|
கடுகு |
உச்சிவிதை எனப்படும் ஆர்ஜிமோன் விதைகள், மலிவான கேழ்வரகு |
|
தனியா எனப்படும் மல்லி |
மானசைட் பச்சை எனப்படும் கந்தகப் பூச்சு (பழையதைப் புதியதாக்கவும், எடையைக் கூட்டிக்காட்டவும்) |
|
சமையல் எண்ணை |
மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை |
|
வெண்ணை |
பிற கொழுப்புகள் |
|
பச்சை பட்டாணி |
பச்சை சாயம் |
|
நெய் |
வனஸ்பதி |
|
பெட்ரோல், டீசல் |
மண்ணெண்ணை |
|
தேன் |
சர்க்கரைக் கரைசல் |
|
குளிர்பானங்கள் |
அளவுக்கு மிகுந்த பூச்சிகொல்லி மற்றும் நச்சுப்பொருட்கள் |
|
கசகசா |
வெள்ளை ரவை, கீரைவிதை மற்றும் பளிச்சென்று ஆக்கி எடைகூட்டுவது (மங்கிய நிறம் நீக்கப்பட்டால் எடை கூடும்) |
|
குங்குமப்பூ |
செயற்கையாக சோளமாவு மற்றும் சர்க்கரையை நிலக்கரித்தாரில் கலக்கி உருவாக்கப்பட்ட குங்குமப்பூ போன்ற ஒரு பொருள் |
|
கோதுமை, கம்பு மற்றும் மற்ற உணவுதானியங்கள் |
நச்சுத்தன்மை கொண்ட ஒருவிதமான காளான், ஊமத்து விதைகள் (ததூரா) |
கோவையில் 4 திரையரங்குகள் ஒரே இடத்திலிருக்கும் கூடங்களில் நடப்பதை எல்லோரும் அறிவர். ஒரு பெருங்குவளை பாப்கார்ன் எனப்படும் சோளப்பொறி விலை 50 ரூபாயாம். நாமெல்லாம் இளிச்சவாயர்கள்தான் என்ற நினைப்பில், படத்தின் இடைவேளை நேரத்தில் திரையில் ஒரு விளம்பரம் செய்வார்கள் பாருங்கள்; "பாப்கார்ன் உங்களைப்பிரிந்து வாடுகிறதாம்! வரச்சொல்லி செய்தி அனுப்பியுள்ளது" என்று கொட்டை எழுத்துக்களில் போட்டால் இடைவேளை வரை 1 1/2 மணிநேரம் தண்ணீர்கூட இன்றி தவித்துக்கொண்டிருக்கும் எந்தக்குழந்தைதான் அடம்பிடிக்காமலிருக்கும். அவ்வளவு செலவுசெய்து எடுக்கப்பட்ட படம்பார்க்க 40 ரூபாய் தான் நுழைவுச்சீட்டு, ஆனால் சோளப் பொறிக்கு 50 ரூபாயாம். விவரம் கேட்டபோது ஒரு மிக்கப்பெரிய நிறுவனமொன்று அந்த திரையரங்கின் பராமரிப்பை ஏற்றுச் செய்கிறதாம். அந்த நிறுவனத்தின் பெயரைக்கேட்டதும் இனிமேல் இங்கே வரவே கூடாது என்று பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியே வந்துசேர்ந்தோம். ஏனென்றால், ஏற்கனவே எல்லோர் தொழிலையும் கெடுக்கும் அந்த நிறுவனத்திடம் தொலைபேசி இணைப்புப் பெற்று நான் பட்ட பாடு போதும்; இனிமேல் குண்டூசி கூட சும்மா கொடுத்தாலும் அந்த நிறுவனத்திடம் வாங்கக்கூடாதென்று முடிவு செய்திருந்தேன். இவன் உலகப்பணக்காரன் ஆன காரணம் என்னவென்று இதிலிருந்து தெரிகிறதல்லவா.
வெளியிலிருந்து கொண்டுவரும் தின்பண்டங்களை ஏன் விடுவதில்லை என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம் அதைவிடக்கொடுமை, தூய்மையான திரையரங்குக்குள் குப்பை போடக்கூடாதென்பதாம். மூட்டைப்பூச்சிகள் கூட்டமாக வாழும் பண்ணையாகிய அந்தப் புகழ்பெற்ற திரையரங்குக்குள் இவர்கள் கொடுக்கும் சோளப்பொறி அட்டைகளும் ஆங்காங்கு சிந்தும் சோளப்பொறிகளும் குப்பையாகாதா? வெளியில் 10 ரூபாய்க்கு விற்கும் பொருளை 12 ரூபாய்க்கு விற்றாலே அது கொடுமை 50 ரூபாய்க்கு விற்பது எவ்வளவு வெறிச்செயல் என்று பாருங்கள்.
கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களிலெல்லாம் மிகவும் புகழ்பெற்றுவிளங்கும் குழலூதுபவன் பெயரில் கிளைகள் விரித்திருக்கும் பலசரக்குப் பெருங்ககடையில் மக்கள் கூட்டம் அதிகமாக மொய்க்கிறது. இதில் மறைந்திருக்கும் கொடுமைகள் அண்மையில் ஒரு பெண்கள் மாத இதழில் வந்ததது.
மற்ற மளிகைக் கடைகளை விட மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களால் கவரப்பட்டு மக்கள் அக்கடையையே மொய்க்கிறார்கள். ஆனால் உணமை என்னவென்றால் ஒட்டுமொத்தமாக வண்டிவண்டியாகக் கொள்முதல் செய்தால் குறைந்த விலைக்குக் கிடைக்கும் மளிகைப் பொருட்களை பலநாட்கள் கிடப்பிலிட்டுவைத்துப் பொட்டலம் கட்டி விற்கிறார்கள். இதனால் மற்ற கடைகளைவிட இரண்டு முதல் பத்துப் பதினைந்து ரூபாய்கள் குறைவாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. வாங்கிவந்த பலரும் ரவை, பருப்பு போன்றவைகளில் புழு மற்றும் பூச்சிகளையும் பார்த்திருக்கிறார்கள். காலாவதியாகும் தேதிகளைத் தாண்டிவிட்ட பொருட்களின் உறைகளைக் கிழித்துவிட்டு புதிய உறைகளில் மீண்டும் நிரப்பிக் கொடுக்கிறார்கள். எனவே உங்களால் காலாவதியாகும் தேதியை உறையை வைத்துக் கண்டறிய முடியாது. இக்கடைகளில் இப்படிப்பட்ட உணவுப்பொருட்களை நிரப்பிவிற்க தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளே பயன்படுத்தப்படுகின்றன. உணவுப்பாதுகாப்புக்கென்றே உருவாக்கப்பட்ட (Food grade) உறைகளைப் பயன்படுத்துவதில்லை.
எடுத்துக்காட்டாக நீல்கிரீஸ் எனப்படும் புகழ்பெற்ற கடையில் விலைக்குறைப்பு செய்யப்படாமல் விற்கப்படும் பொருட்களைப் பார்த்தால் நமது பெண்கள் இவ்வளவு விலையா என்றும், என்ன போட்டிருக்கும் விலையிலேயே கொடுக்கிறார்கள்; குறைக்கமாட்டார்களா? என்றும் கேட்பதுண்டு. நான் செயல்முறைப்படி தெரிந்துகொண்ட உண்மையிது: விலை குறைப்பு செய்யப்படுவதில்லை. ஆனால் தரம் குறையாத வீரியம் கெடாத இயற்கை நலம்மிகுந்தவைகளாக அவைகள் இருக்கின்றன. பாதுகாக்கப்படாமல் கிடப்பில் கிடந்த மிளகாயாக இருக்கும் மிளகாய் 1 கிலோ 50 ரூபாயாக இருந்தால் அதே 50க்கு நீல்கிரீஸில் விற்கப்படுகிறது. ஆனால் விலைகுறைப்பில் ஈடுபடும் கடையில் வாங்கிய மிளகாய் 42 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் 5 மிளகாய் போட்டுங்கூட உணவில் காரமில்லை. ஆனால் முன்னது 2 மிளகாய் போட்டால் காரம் தூக்குகிறது. எல்லாம் சரியாகத்தான் போச்சு என்பதை உணர்ந்தவர் மிகக்குறைவே.
மேலும் விலைகுறைப்பு செய்யப்படாத கடைகளில் உணவுப்பொருட்களை அடைத்துத் தரும் பைகள் பளபளப்பின்றி உணவுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத தரம்மிகுந்தவைகளாக இருக்கும் உண்மையையும் வாங்கியவர் உணர்வார்கள்.
ஏமாறாமல் ஒவ்வொரு முறையும் பார்த்துப் பொருட்களை வாங்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகிறது.
பின் வரும் இணைப்புகளைச் சொடுக்கி கலப்படத்தை மேலும் தெரிந்துகொள்ளவும்:
http://unavuulagam.blogspot.com/
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309047&format=html
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 06 திசம்பர் 2009 16:06)