| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
இன்னொருவர் பிணத்தைப் பிடுங்கித்தின்னும் இடிஅமீன்கள் வாழ்ந்த புவியாயினும் அதுபோலொரு வரலாற்றை இந்தியத்துணைக்கண்டத்தில் நாம் இதுவரை கண்டதில்லை. ஆனால் ஆங்காங்கே இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளாகத் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதை சோற்றுக்காகத் திருடும் திருடர்கள் செய்வது இயல்பு. ஆனால் மருத்துவமனையும் மருத்துவர்களும் செய்வது கேட்பவர் நெஞ்சை வெடித்துச் சிதறடிக்கும் செய்தி. என் வாழ்வில் நான் இழந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளமுடியுமென்று என் உள்மனம் சொன்னாலும், என் மகனைக் கோயமுத்தூர் கு.நா மருத்துவமனையில் இழந்தது எனக்கு பெருத்த இழப்பு. இந்தப்பிறவியில் ஈடுசெய்ய இயலாத ஒரு இழப்பு. ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய, தெரிந்துகொண்டு மற்றவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய செய்தியாக பனித்துளிகள் தளத்தில் வெளியிடுகிறேன்.
உலகமயமாக்கல் தொழில் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமைகளும் பணி நிரந்தரமின்மையும் மன அழுத்தமாக மாறி பணியாளர்களுக்கு கடுமையான உடல் நலப்பிரச்சனைகளை எற்படுத்திவருகிறது. சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. தகவல் தொழில் நுற்பத்துறையில் எற்பட்டுவரும் அளப்பரிய வளர்ச்சிகள், ஊதியங்கள் மனித மனங்களில் பேராசைகளை மூட்டிவிட்டுள்ளது. பணம் ஈட்டுதல் மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்டது.
மிகநீண்ட புரதான வரலாற்றுக்குச் சொந்தமான இந்திய சமூகம் பணப்பேராசையால் ஊழல் மயமாகிவிட்டது. கையூட்டு மற்றும் ஊழலில் இந்தியா புவியில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் சான்று வழங்கியுள்ளன! ஊழல், சமூக வாழ்வில் மரியாதைக்குரிய அங்கமாகிவிட்டது. அறவியல் பண்புகள் புத்தகங்களில் முடங்கிப்போயின. அனைத்து துறைகளிலும் கடமை தவறுவதே கடமையாகிப் போனது. வழிபாடுகள் சடங்குகளாகி விட்டன. காணிக்கைகள் லஞ்சமாகிவிட்டது. லஞ்சம் காணிக்கையாகிவிட்டது. சொல்லும் செயலும் துருவங்களாகிவிட்டன.
மருத்துவத்துறை லாபமீட்டும் நிறுவனமாகிப் போனது. லாபத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்ட மருத்துவ மனைகள், இவற்றிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டியதால் இருமடங்கு பேராசைகளுடன் அலையும் மருத்துவர்கள். நோயாளிகள் பொன்முட்டையிடும் வாத்துகள். அதிர்ஷ்ட்டம், துரதிர்ஷ்ட்டம், விதியின் விளையாட்டு, ப்ராப்தம் போன்ற சொற்கள் மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் இல்லங்களிலுமே அதிகம் புழக்கத்தில் உள்ளன.
என் மகன் ஆனந்த் குமார். 26 வயதில் ஒரு கர்மயோகி. இது அவருடன் பழகியோர், பணியாற்றியோர், நண்பர்கள் சொல்வது. அவரின் இதய ஆரிக்கிள் சுவரில் குறைபாடு[ASD]. அத்துடன் நுரையீரல் ரத்த நாள அழுத்தம் அண்மைக்காலதில் அதிகரித்துள்ளது. இது அவருக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருந்துள்ளது. கடைசியாக அவர் பணியாற்றியது ஆரக்கிள் (ORACLE) மென்பொருள் நிறுவனத்தில். மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்ற 16-7-2009-க்கு முன், ஒரு மாதம் கிட்டத்தட்ட நாளும் நள்ளிரவுவரை பணியாற்றியுள்ளார். நாளும் 35 கி.மீ பெங்களூர் சலைகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இக்காலங்களில் அவர் தமக்கு உடல் நலமில்லை என்று சக பணியாளர்களிடமோ, நண்பர்களிடமோ, குடும்பத்தாரிடமோ தெரிவித்ததில்லை. நாளாந்த பணிகளை எப்போதும் போல் செய்து வந்துள்ளார்.
அவர் தம் வாழ்நாளில், பிறந்த வருடத்தில் சிறிய அளவில் தோன்றிய மூச்சுக்கோளாறுகளுக்கு மருத்துவம் பார்த்ததோடு சரி. பிறகு மருத்துவரிடமோ, மருத்துவ மனையிலோ மருத்துவம் பார்த்தது கிடையாது. சளி, காய்ச்சல், தலைவலி என்று ஏதும் வந்தால் பக்கத்து வீட்டு கம்பவுண்டரிடம் தான் மருத்துவம். அன்மைக்காலதில் செய்த உடல் பரிசோதனையின் போதுதான் மேற்படி குறைபாடு தெரியவந்தது. அதை சரி செய்து கொள்ளத்தான் அவர் தற்போது மருத்துவ மனைகளுக்குச் செல்ல வேண்டி வந்தது. பெயர் பெற்ற பெரிய மருத்துவ மனைகள், பெயர்பெற்ற மருத்துவர்கள். அனைத்து சோதனைகளும் நடைபெற்றன. பணிவிபரங்கள் குடும்பப்பின்ணனிகள் விசாரிக்கப்பட்டன. இதன் மூலம் நோயாளியின் வசதிவாய்ப்புகளும் தெரிந்து கொள்ளப்படுகின்றன. தம்மை நாடி வந்த நோயாளியை விட்டுவிடக்கூடாது. உள்நோயாளியாக அனுமதித்து பணம் பறிப்பது முதன்மை நோக்காகவும், நோயாளி குணம் அடையவேண்டும்
என்பது அடுத்த கட்டத்திற்கும் போய்விடுகிறது. நோயின் தன்மை குறித்தும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை உடனடித்தேவை. அது மிக எளிமையானது. அறுவை சிகிச்சைக்குப்பின் 15 நாள் ஒய்வு போதும். பின் வழக்கம் போல் பணிகளுக்கு செல்லலாம். திருமணம் மட்டும் ஓராண்டு கழித்து செய்வது நல்லது என்றெல்லாம் சொல்லி உடனடி அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தினார்கள். உயிரச்சத்தினால் உடனடியாக சம்மதித்தோம்.
வலைத்தளங்களில் பன்னாட்டு மருத்துவர்களின் அனுபவங்களும் ஆய்வுகளும் நிறையவே பதிவு செய்யப்பட்டுள்ளன. நுரையீரல் ரத்தநாள அழுத்தம் இருக்கும் போது இந்த அறுவை சிகிச்சை ஆபத்தானது. கூடாது. நுரையீரல் ரத்த நாள அழுத்தம் குறைய மருந்துகள் பரிந்துரைக்கப்படவேண்டும் . அதுவே வேறு உடல் நலப் பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் இந்நோயாளிகளில் பலரை 60 ஆண்டுகள் வரையிலும் கூட நன்னிலையில் வாழவைக்கும் என்கிறது.
‘Surgery that is used to repair the defect can’t be used after Pulmonary Hypertension has developed because the change in blood Pressure would further damage the heart’
-The regents of the University of California.
‘In the advanced stage of the PAH, closure of the ASD will eventually lead to Deterioration of the clinical condition and a decreased survival in these patients’
-Pediatric and Congenial Cardiology. University Medical Centre, Groningen Nethrlands.
அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்துகட்டுப் பாட்டுக்கழகம் கூட AMBRISENTAN, BOSENTAN, EPOPROSTENOL SODIUM, ILOPROSET, SILDENAFIL,TREPROSTINIL ஆகிய மருந்துகளை PAH-க்கு நல்லதென அனுமதித்துள்ளது.
இவர்கள் ஏன் எமக்கு இதை பரிந்துரைக்கவில்லை? இவர்களின் நோக்கம் பணமும் பரிசோதனையுமாகவே இருந்திருக்கிறது. செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளும், கவனிப்புகளும் இதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப் படுத்துகின்றன.Any Anesthesia and surgery [ASD with PAH] is considered high risk and should be carefully planned எனும் போது முதலில் அறுக்கும் போதே எந்தவித ஆலோசனைகளும் இன்றி அறுத்து எந்தவித கவனிப்பும் இன்றி நான்கு நாட்கள் விட்டுவிட்டார்கள். ரத்த உறைவுகள்[EMBOLISM] அப்போதே தொடங்கி உயிர்காக்கும் உறுப்புகள் செயலிழந்து விட்டன என்பதை காலை செய்த ரத்த பரிசோதனை தெரிவிக்கிறது. இந் நிலையில் மீண்டும் அனஸ்தீசியா மீண்டும் அறுப்பு என்றால் என்ன கொடுமை? எப்படி பிழைப்பார்? ஆக செய்யப்பட்டவை இவர்களுக்கு தேவையான சோதனைகளே.
இரவு 7.40க்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, என்று இறப்பு அறிக்கையை தாயாரித்து தந்துள்ளனர். 7.00 மணிக்கே மருத்துவர்கள் தம் ஆய்வுகளை முடித்துக்கொண்டு வெளியேரி விட்டனர். பணம் பிடுங்குவது தான் முதல் நோக்கம் . மருத்துவம் பார்த்து குணப்படுத்தலாம் எனும் கடமை உணர்வு அறவேஇல்லை.
பணம் இன்னும் லட்சம் கேட்டிருந்தாலும் தரத்தானே போகிறோம். கடைசியாக மருத்துவர்கள் செய்து பார்த்த சோதனைகளுக்கும் பணம் கட்டியபின்னால் உடம்பைத் தந்தார்கள். பணத்தாசை இல்லை என்றால் வெளிமருத்துவ மனையில் செய்யப்பட்ட cath study- ஐ அப்படியே ஏற்றுக்கொண்டதால் அதற்கான தொகை RS 20500/-. ASD/VSD SURGERY 8 நாள் PACKAGE-ல் வருகிறது. மொத்த தொகை RS 1,04,500/-. எங்களை ஒரு நாள் முன்னதாகவே காலி செய்து விட்டதால் அதனால் மிச்சமான தொகை ஆகியவற்றை ஏன் திருப்பித் தரவில்லை? குறைந்த பட்சமாக மருத்துவமனைக்கான மருத்துவ அற்றிக்கைகளின் ஜெராக்ஸ் காப்பிகளுக்கு எம்மிடம் பணம் வாங்காமல் தந்திருக்கலாம். ஆனால் மருதுவமனை மனிதாபிமானம் அதற்கும் இடம்தரவில்லை.
மகனை இழந்த பின்னால் நான்கு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை நேரில் சென்று சந்தித்தேன். ஒரு வருத்தம் கூடத்தெரிவிக்கவில்லை. அந்த மனிதாபிமானம் இருந்திருந்தால் ஆனந்த் குமார் உயிர்வாழ மருத்துவம் பார்த்திருப்பர். குறைந்த பட்சம் இறந்த நேரத்தில் அருகில் இருந்து நடந்ததையும், செய்த மருத்துவ முயற்சிகளைவும் விளக்கியிருப்பார். கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லை. கல்லுளிமங்கன் என்பதற்கு அன்றுதான் சரியான பொருள் தெரிந்துகொண்டேன்.ஆனந்த் குமார் நல்லபடி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வருமுன் காப்போம் என மருத்துவர் சொற்படி கேட்டோம். மகனைப் பறி கொடுத்தோம். தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் தவறு நடந்திருக்கிறது என நம்பி வலைத்தளங்களில் தேடினேன். மனிதாபி மானமற்ற மருத்துவம் எம் மகனை பலிகொண்டுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மருத்துவர்களையும் மருத்துவ மனைகளையும் எச்சரிக்கையோடு அணுகுங்கள்.
எம்நிலை யாருக்கும் வரவேண்டாம்!
கண்ணீருடன்,
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009 21:17)
IT people should concentrate more on their health. Companies should give frequent awareness about good health and cultivate some basic exercise as a daily routine for all the employees.