நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ?

Feb 11, 2014

ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட உண்மையான வாக்கியம்.

தமிழ் வாழ்க்கைக்கு உதவாது! அதைப்படித்து என்ன பயன்? என்று சொல்லி தங்கள் குழந்தைகளை வேற்றுமொழியே முதன்மை மொழியாகக் கொண்டு படிக்கவைக்கும் பெற்றோர்கள் மிகுதியிங்கே! அதேநேரத்தில் அவர்கள் நமது பண்பாட்டைவிட்டுச் சிறிது பிறண்டுபோனாலும் குய்யோமுறையோ என்றழுவதும் இங்கேதான்? வாழ்க்கையில் பொருள் சேர்ப்பது, தொழில்நுட்பங்களைக் கற்றுத்தேர்வது, அறிவியலைப் புரட்டி அறிவியலாளராவது இவையெல்லாம் அவரவர் தேவை. ஆனால் எல்லோருக்கும் நெறிபட வாழ்தல் என்பதும் வாழும்போது மனிதத்தை வளர்ப்பதென்பதுமே அவரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.

இன்று மேலைநாடுகளில் பணி நிமித்தம் சென்றிருக்கும் தமிழர்கள் கூட தங்கள் பிள்ளைகள் வளர்ந்து வருவதற்குள் தாய்நாட்டிற்குத் திரும்பிவிடவேண்டும் என்று ஒரு வேகத்தில் இருப்பதற்கான காரணம் என்ன?

அங்கு நற்சிந்தனைகள் வளரவாய்ப்பில்லை என்பதல்ல!… நமது குருதியில் நல்லதை விட கெட்டது அதிகம் ஒட்டிக்கொள்ளும் என்பதே ஆகும்.

தமிழை நாமனைவரும் தவறாமல் படித்தாகவேண்டிய, நமது பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது வெற்றுக் கூச்சலல்ல என்பதை முதலில் உணர்வோமாக!

நமது மொழியில் வாழ்வியல் நற்சிந்தனை இலக்கியங்கள் மற்றமொழிகளை விட அதிகம். பண்பாட்டுக்கேற்ற நிறைய, நல்ல, மற்ற மொழிகளிலல்லாத சொற்கள் நமது மொழியிலேதான் உள்ளன. எப்படித் தொழில்நுட்பத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு மாற்றுத் தமிழ்ச் சொற்கள் தரமுடியவில்லையோ, அதுபோல தமிழிலிருக்கும் பல சொற்களுக்குச் சரியான மாற்று ஆங்கிலச்சொற்களோ  அல்லது பிற மொழிச்சொற்களோ தரவியலாது. எடுத்துக்காட்டாக பேராண்மை, வேளாண்மை போன்ற சொற்களுக்கு அதே பொருள் தரும் ஆங்கில அல்லது மற்ற மொழிச்சொற்கள் இல்லை.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

-குறள்

திருக்குறளில் வரும் இந்த வேளாண்மை என்ற சொல் குறிப்பது கொடையளித்தல் என்பதே. வேளாண்மை என்ற சொல் அடுத்தவர்க்கு உதவும் செயலாண்மை என்றும் அது அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயத்திற்கு வழங்கப்படுவது போலே கொடை என்ற பொருளில் வரும் வேள் என்ற சொல் கொடையாளருக்கும் பொருந்தும். ஆனால் ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் சேர்மம் இல்லை. விவசாயத்துக்கு Agriculture என்ற சொல் மட்டுமே பயன்படுகிறது. அதனால்தான் நாம் விவசாயத்தையும் அதன் இன்றியமையாத தன்மையையும் மறந்துவிட்டோமோ என்னவோ?

பெரும்பாலான தமிழ்ச் சொற்களை உயர்ந்த நோக்கத்தோடு தமிழில் சொல்வோம். அன்பு காட்டுதல், காதல் கொளல், காமுறுதல் இவற்றிற்கெல்லாம் தமிழில் அந்தந்த சொற்களுக்கான அழுத்தமான பொருள் உண்டு. தாயிடம் குழந்தை அன்புகாட்டுதல், மக்களிடம் மன்னன் அன்புகாட்டுதல், இயற்கைமேல் காதல், கற்றாரைக் காமுறுதல் என்று எல்லாச் சொற்களுக்கும் அதற்குரிய அழுத்தங்களுடன் உயரிய பொருள் இங்குண்டு. உடலுறவு என்பதற்கும் இந்தச் சொற்களுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை தமிழில்.

ஆனால் ஆங்கிலத்தில் நாம் மேற்சொன்ன கருத்துக்களை உணர்வுமாறாமல் வலியுறுத்த சொற்களே கிடையாது. ”Like” என்று சொன்னால் வெறும் விரும்புகிறேன் என்பதோடு போகும். ”அன்புகாட்டுகிறேன்” என்றால் ”I am loving” என்று சொல்லலாம். ”அன்புகாட்டுகிறேன்” என்பதற்கும் ”காதல் கொள்கிறேன்” என்பதற்கும் அந்த ஈர்ப்பின்பத்தின் அழுத்தம் நிறையவே மாறுபடுகிறது. ”காமுறுகிறேன்” என்ற சொல்லை எப்படிச் சொல்வது? ”Lust” பெரும்பாலும் பாலின ரீதியான காமத்தையே குறிப்பதால் அதுவும் பயன்படாது.

இதெல்லாம் இப்படியிருக்க, அன்புகாட்டுகிறேன் என்று சொல்வதை ”Love making” என்று ஆங்கிலத்தில் சொன்னால் அது நேரடியாக பாலியல் உறவையே குறிக்கிறது. இது மொழியின் தாத்பரியம் என்று சமாதானம் சொல்லும் மொழிப்புலவர்கள் கொஞ்சம் ஓரங்கட்டிக்கொள்ளுங்கள்.

அப்படியென்றால் நான் எப்படி பாலியல் வேறுபாடற்றுப் பழகும் என் தோழியை ஆங்கிலத்தில் குறிப்பேன்? ”GirlFriend” என்றா? அதற்குப் பொருள் என்னவென்று பாருங்கள் முதன்மைப் பொருள் ”A girl or young woman with whom a man is romantically involved” என்றே வரும். ”தோழி” என்று தமிழில் சொல்லும் சொல் எவ்வளவு அழகான ஒன்று! எவ்வளவு உயர்ந்த எண்ணங்களாக இருந்தாலும் பண்பாடோடு ஒட்டும் சொற்களுக்கு இந்த ஆங்கிலம் பெருங்குழப்பங்கள் நிறைந்த பொருள் கொண்ட சொற்களைப் போட்டுக் கற்றுத்தரும். இதனால் உயர்பண்பு மெதுவாக நம் இனத்திலிருந்து மறையும். எல்லா மொழியையும் படிக்கலாம், பேசலாம். அது தேவைதான்! ஆனால், எண்ண மொழி எப்போதும் நம் சிறார்களுக்குத் தமிழாகத்தான் இருக்கவேண்டும்.

புரிகிறதா? மொழியை அழித்தால் இனம் அதன் பண்பாடு எல்லாம் அழியும் என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா என்ன?

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

3 பதில்கள்

  1. உண்மை தான். மீட்டு எடுக்க வேண்டும்.

  2. காலம் காலமாக நடக்கும் போர் இது.தமிழ் மொழி வீழ்ந்து பல மொழிகளாக நம் முன் வலம் வருகிறது (மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் பல...).

    தமிழ் மொழியை வளர்ப்போம், இனத்தை காப்போம்...

  3. ஜான் தாமஸ் /

    மிகவும் சிறந்த எடுத்துக்காட்டுகள்... அநேகருக்கு இது ஒரு புதிய தகவல். நன்றி.

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>