| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
தற்போதைய இந்தியாவின் வடபுலத்தில், வைணவர்க்கு இறைவனான பெருமாளை ஒட்டி இதிகாசங்கள் எனப்படும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்ற கதைகள் உருவானதும் இந்தக் கட்டத்தில்தான். இதைப்பற்றி சர்ச்சைக்குறிய சில கருத்துக்களை கட்டாயம் சொல்லவேண்டியிருக்கிறது. இதிகாசங்கள் பெருமாள் எனுங்கடவுளை வலிமை மற்றும் திறமை மிகுந்த (இந்தக்காலத் திரைப்படக் கதைநாயகர்கள் போல) இறைவனாகக் காட்ட இராமன், கண்ணன் போன்ற வேறுவேறு பிறவிகள் சொல்லப்பட்டன.
உண்மையில் இந்தக்கதைகளை தென்னாட்டுத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதை, இராவணனை ஓரளவு நல்ல முறையில் (வால்மீகி இராமாயணத்தில் சீதயினைத் தூக்கிச்சென்றான் என்றிருந்தால், அதை மொழி பெயர்த்துப் புனைந்த கம்பர், சீதையினைத் தொடாமல், நின்றிருந்த நிலத்தோடு பெயர்த்தெடுத்துப் போனதாக) காட்டியதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
மதங்கள் இவ்வாறு உருவாக ஆரம்பித்தது ஒருபுறம் நடந்தேறிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் செய்யும் தொழிலினை வைத்து மக்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் எனப் பல்வேறு சாதியினராகப் பிரிக்கப்படுவதும் நடந்தேறியது. தமிழில் ஜாதி என்ற வடமொழிச்சொல்லுக்கிணையான சொல் இருந்ததில்லை. படித்தவர்கள், அறிவில் மூத்தவர்கள், ஆசிரியர்கள், வேத அர்ச்சனை செய்பவர்கள் பிராமணர்கள் என்ற சாதியினராகக் கருதப்பட்டனர். போர்ப்படைத் தளபதிகள், மன்னர்கள் மற்றும் போர்வீரர்களெல்லாம் சத்ரியர்கள் என அழைக்கப்பட்டனர். விவசாயம் மற்றும் தொழில் செய்தவர்கள் வைசியர்கள் எனப்பட்டனர். கலைஞர்கள், வேறு சேவைகளில் இருந்தவர்களனைவரும் சூத்திரர்கள் என்றழைக்கப்பட்டனர். இங்கேதான் பலரும் தவறான ஒரு கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள்.
பிராமணர்கள் வேறு ஆரியர்கள் வேறு. மேற்சொன்ன பிரிவுகளில் ஆரியர்கள் மட்டுமே பிராமணர்களாக ஆகவில்ல. அவர்களில் பலர் கலைஞர்களாகவும் (சூத்திரர்கள்) தொழில் செய்யும் வைசியர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள். பிராமணர் எனப்படுவரும் ஒரு உருவாக்கப்பட்ட சாதியினர்தான். இப்போதிருக்கும் பிராமணவகுப்பினராகக் கூறப்படுபவர் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்த ஆரியர்கள் அல்லர். 90 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் பச்சைத் தமிழர்கள். அப்பொழுதெல்லாம் கல்விகற்றுத் தேர்ந்து ஆசிரியராகவும், அறிவியலாளர்களாகவும், கணக்கியலாளராகவும் பணியாற்றியவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இது ஒரு தொழில்முறைப் பகுப்பாக இருந்ததே ஒழிய வேறெந்த ஒரு காரணியாலும் அவர்கள் பிராமணராகக் கருதப்படவில்லை.
ஆனால் ஆரியர்களின் வருகையால் தமிழனின் இச்சிறப்புகள் மங்கி மறைந்துபோனது, சாதிகள் உருவானது மற்றும் பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டது போன்ற பித்துக்குளித்தனமான சீரழிவுகள் ஏற்பட்டது போக பல்வேறு நன்மைகளும் அவர்களால் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை. விதிமுறைப்படுத்தப்பட்ட நடன நாட்டியங்களில், இசையில் வாழ்வியலில் இவர்களின் புலமை மிகச்சிறந்து விளங்கியது. கலை இலக்கியங்களில் அவர்கள் காட்டிய ஆர்வமும் அவற்றில் வகுத்துக் கொடுத்த விதிமுறைகள் என்றும் நமது நாட்டின் சிறப்பியல்புகளை உலகுக்கு உணர வைத்தன.
இதிலெல்லாம் நாம் வருந்த வேண்டியது என்ன தெரியுமா? இன்று தமிழர்களை வைத்து பிழைக்கும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், குழுக்கள் பிராமணர்கள் தான் தமிழைக் கெடுத்தவர்கள் என்றும் அவர்கள தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றும், இந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களை ஆரியர்கள் என்றும் (சில பிராமண இயக்கங்களே அதைச் சொல்லிக்கொள்கிறது அதிலும் கொடுமை), வார்த்தைக்கு வார்த்தை சாடுவதுதான்.
இன்றைக்கு இந்தியாவிலிருக்கும் இசுலாமியச் சகோதரர்கள் கிருத்துவச் சகோதரர்கள் எல்லோரும் நம் நாட்டில் வந்து குடிபுகுந்தவர்களா? இல்லை. அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தாம். தம் சொந்த விருப்பத்தினாலும், பிறரின் தூண்டுதலினாலும் இறைவழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டவர்கள். இது இப்போது நடந்ததென்றால், ஆரியர்களின் வருகையால் சைவம் வைணவம் என்று சொல்லப்பட்ட மதங்களில் உள்ள வழிபாட்டு முறைகளில் நாட்டம் கொண்டு அந்தந்த மதங்களைப் பின்பற்றிப் பின் உயர்தொழிலில் பணியாற்றியதால் பிராமணராக சாதி வகுக்கப்பட்டவர்கள்தான் இன்றைய பிராமணச் சாதியென்று சொல்லப்படும் பிரிவில் இருப்பவர்கள். நெசவுத் தொழிலை செய்தவர்கள், நெசவாளர் எனவும், வேளாண்மைத் தொழிலைச் செய்தவர்கள் வேளாளர்கள் எனவும், வணிகம் செய்தவர்கள் செட்டியார்கள் என்றும் பல உட்பிரிவுகள் வந்ததெல்லாம் பண்டைத்தமிழகத்தில் தொழில்கள் தொடந்து விருத்தியடைந்ததாலும் பல்வேறு வகைத் தொழில்கள் புதிதாகத் தோன்றியதாலும் வழிவழியாய் வந்த ஒவ்வொரு குடும்பத்தின் சந்ததியினரும் தாய்தந்தையின் தொழிலை ஏற்றுக்கொண்டதாலும் அந்தந்தச் சாதி முத்திரை அவர்களுக்கு நிலைத்துப் போனது.
உண்மையில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்களில் பலரின் அரும்பெரும் செயல்களாலும், சாதனைகளாலும்தான் தமிழில் நாம் இந்தளவுக்கு இலக்கியங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறோம் என்பதை நாம் இந்தத் தருணத்தில் உணரவேண்டியிருக்கிறது.
தமிழ் தாத்தா என்று நாம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர் உ.வே. சாமிநாத ஐயர். செல்லரித்து, சிதைந்து, அழியும் தறுவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை சரிபார்த்து ஒழுங்குபடுத்தி அச்சிட்டு அழியாத கருவூலங்களாகத் தமிழ் மொழிக்கு அளித்தப் பெரியவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமலிருந்தால் பழந்ததமிழ் இலக்கியங்கள் பலவற்றை நாம் அடியோடு இழந்து போயிருப்போம். உலகத் தமிழர் அறிந்த உன்னதக் கவிஞர்களில் ம.த.ந.வீரமணி ஐயரும் ஒருவர். இயல், இசை, நடனம் என்னும் முக்கலைகளிலும் நன்கு புலமை பெற்று, இக்கலைகளை உலகத் தமிழர் மத்தியில் வளர்ப்பதிலும், அதில் பல புதுமைகளைப் புகுத்துவதிலும் இறுதிவரை யாழ்ப்பாணத்தில் அயராது பாடுபட்டவர். தமிழ்மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டி தமிழ்மொழியின் வரலாறு'' என்ற தமது நூலின் முடிவுரையில் குரல் கொடுத்த பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரியான இவர் தமிழ்மேல் கொண்ட பற்றினால் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர்), தமிழ்க் கவிதைகளால் நாட்டுமக்களின் உணர்வுகளில் இடம்பெற்ற பாரதியார் முதல் தமிழ் நாவல்களில் தமிழ் மன்னர்களின் வீரத்தை அறிவினைப் பறைசாற்றும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி வரை இந்தப் பிராமணப் பிரிவினைச் சார்ந்தவர்கள் பலர் தமிழுக்காகத் தங்கள் வாழ்நாளைத் துறந்தவர்கள். தமிழ் மண்ணின் மைந்தர்களாக இல்லாமல் புலம்பெயர்ந்து வந்தவர்களாக (ஆரியர்களாக) இங்கு சொல்லப்பட்ட பெரியோர்கள் இருந்திருந்தால் தமிழ் மொழியைக் காப்பதில் மற்றும் வளர்ப்பதில் யாரும் செய்யமுடியாத இந்தச் செயற்கரிய செயல்களை இவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை.
சேவை மனப்பான்மையுடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இவர்களின் பிறப்பினையும் சாதியினையும் பற்றி ஆராய்ந்ததற்கு முதலில் நேயர்களின் மன்னிப்பினைக் கோரிப் பின் பிராமணர்கள் முழுக்க முழுக்க நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களின் சந்ததியினர் அல்லர் என்றும் இதுவும் ஒரு உருவாக்கப்பட்ட சாதிதான் என்பதைக் கூற இத்துனை எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு எடுத்து வைக்கவேண்டிய கட்டாயமேற்பட்டது என்பதையும் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், பைத்தியகாரனுக்குப் பணம் கொடுத்தால் அதை எப்படிக் கிழித்துப்போடுவானோ அப்படிச் சிலர் உயர்சாதியினராகத் தங்களைச் சித்தரித்துக் கொண்டு கிடைத்த உரிமையினைக் கொணடு மற்றவர்களைக் கீழ்ச் சாதி என்று அழுத்தமாக மட்டம் தட்டித் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டதினால் இத்துனை பிரச்சனைகளும் வேறூன்ற ஆரம்பித்தன.
பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழ் மக்கள், அடுத்த பாகத்தில்...
கணேஷ்,
நீங்கள் கூறியவற்றில் பல செய்திகளுக்கு சான்றுகள் இருப்பதாகத் தோன்றவில்லை. போகிற போக்கில் எழுதுவது போல் உள்ளது. குறிப்பாக ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்கிற உங்கள் கூற்றுக்கு அடிப்படை ஆதாரமாக எதைக் காட்டுவீர்கள்? வரலாறு, இலக்கியம் அல்லது தமிழ்ச் செப்பேடுகள் ஏதாவது குறித்து செய்திகள் வைத்திருக்கிறீர்களா ?
அண்மைக் கால மரபணுவியல் குறித்த ஆய்வுகள் இது பற்றி என்ன கொள்கின்றன என்பதை வாசித்து உள்ளீர்களா ? சான்று இல்லாமல் உங்கள் விருப்பத்திற்கு தோன்றுவது போல எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அரை வேக்காட்டுத்தனமான ஆய்வுகளால் தமிழுக்கும் தமிழர்க்கும் பயனில்லை.