| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் சொல்லப்படாத அறிவியலும் இல்லை, தொழில் நுட்பங்களும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழர் கண்டுவைத்த, சொல்லிவைத்த கருத்துக்களைத்தான் இன்றைய தத்துவ அறிஞர்களும், அறிவியலாளர்களும் தாங்கள் கண்டுணர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறார்கள். நமக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடங்கள் இந்தத் தலைமுறையில் இருக்கும், காசுக்காகப் பணியாற்றும் தமிழாசிரியர்களால் தெரிவு செய்யப்பட்டவை. எதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவைகளைப் பாடத்திட்டத்தில் வைக்காமல், செங்கீரைப்பருவம், பிள்ளைத்தமிழ், பிள்ளைக்கறி சமைத்த கதை, அகலிகையின் கதை, நளதமயந்தி கதை என ஒன்றுக்கும் உதவாத கதைகளையும் பாடங்களையும் வைத்து மாணவர்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள இலக்கியங்களில் காதல் மட்டுமே விஞ்சி நிற்கும். ரோமொயோ, ஜூலியட் கதை போன்றவை இவைகளுக்கு எடுத்துக்காட்டுக்கள். நம் தமிழில்மட்டும்தான் 150 மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்ட ஒரே நூலான புறநானூறு, புவியில் மிகச்சிறப்புப் பெற்ற நூலான திருக்குறள், எட்டுப் பெண்களை மணந்த சூழ்நிலையும் மனஒழுக்கத்துடன் (காமுகனாக இன்றி) வாழ்ந்து நீதியாட்சி செய்து பின் துறவரமேற்று வாழ்வியலை விளங்கவைக்கும் மன்னன் கதையான சீவக சிந்தாமணி, நலன் உடமையின் - அழகுடைமையை விட நாணு - நாணமுடைமை என்று அழகைவிட நாணத்துடன் இருப்பதுதான் சிறப்பு விளங்கவைத்த முதுமொழிக்காஞ்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
சங்கத்தமிழ் நூல்கள்தான் இப்படியென்றால் அவைகளுக்குத் துணைபோக பாரதி, பாரதிதாசன், கல்கி உள்ளிட்ட சென்ற நூற்றாண்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் வாழ்வியலில் சொல்லாத கருத்துக்களே இல்லை.
ஒரு சொல்லாகட்டும், ஒரு சொற்றொடராகட்டும் தவறு நேர்ந்துவிட்டால் ஆங்கில மொழியைப் பிழையுடன் பேசுவதாகக் நையாண்டிசெய்யும் மனிதர் தன் தாய்மொழியில் ஒரு வாக்கியத்தையாவது தூய்மையான தமிழ்ச் சொற்களை வைத்துப் பேச முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைச் சொல்கிறேன். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற டார்வின் கொள்கையில் எவ்வளவுதூரம் உண்மையிருக்கிறதென்று ஆராய்ச்சி செய்ததில், முடிவுகள் அவரின் பரிணாமக்கொள்கையே தவறானதென்று உணர்த்தியிருக்கின்றன. ஆனால், தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறியிருக்கும் செய்தியைக் கேளுங்கள்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவேஇரண்டு அறிவதுவே அதனொடு நாவேமூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கேநான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணேஐந்து அறிவதுவே அவற்றொடு செவியேஆறு அறிவதுவே அவற்றொடு மனமேநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரேபுல்லும் மரனும் ஓர் அறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேநந்தும் முரளும் ஈர் அறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேசிதலும் எறும்பும் மூ அறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேநண்டும் தும்பியும் நான்கு அறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேமாவும் மாக்களும் ஐ அறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேமக்கள்தாமே ஆறறிவு உயிரேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஒருசார் விலங்கும் உள என மொழிப
இந்தப்பாடலின் கருத்தைச் சுருக்கமாக விளக்க முயற்சிசெய்கிறேன். மனிதனுக்கு ஆறறிவு என்பதை அறிவோம். ஆனால் நம்மில் பலருக்கு ஆறறிவுகள் எவையெவை எனக்கேட்டால் திரு திருவென விழிப்போம்.
புவியில் முதலில் தோன்றிய உயிர்கள் தாவரங்கள். அவைகளுக்குத் தொடு உணர்வு மட்டுமே உண்டு. எந்தப்பிடிமானம் அருகில் கிடைக்கிறதோ அதைப்பிடித்துக் கொண்டு வளரக்கூடிய திறன் அவைகளுக்கு உண்டு.
இரண்டாவதாகத் தோன்றியவை அத்தாவரங்களைத் தின்று வாழக்கூடிய புழுக்கள் உருவாகின. அவைகள் தன் உணவின் சுவையை அறிந்துகொள்ளக் கூடிய சுவையறிவுத் திறன் அவைகளிடமிருந்தன.
இந்தப் புவியில் அடுத்த பரிமாணவளர்ச்சி காற்றில் மணத்தினை உணரக்கூடிய நுகர்தல் திறன் மூன்றாவது அறிவாக உருவெடுத்தது. புழுக்கள் பிறகு லார்வா, பியூப்பா என்ற வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் மலர்களில் உள்ள தேனைக் அருந்த அதன் மணத்தினை நுகர்ந்து பறக்க ஆரம்பித்தன. இவைகள்தான் தும்பி, பட்டம்பூச்சி போன்றவை. அப்பொழுதெல்லாம் இருந்த இவ்வகை உயிரினங்களுக்குக் கண்கள் இல்லாமல் இருந்திருக்கின்றன.
கண்கள் தோன்றி நான்காவது அறிவாகிய பார்வைத்திறன் பெற்று மலர்களின் அழகிய நிறங்களால் ஈர்க்கப்பட்டு இரைதேடிப் பறக்க ஆரம்பித்தன.
பிறகு ஐந்தாவது அறிவாகிய கேட்கும் திறன் உயிரினங்களுக்கு வர ஆரம்பித்தது. பிறகு விலங்கினங்களில் பல வளர்ச்சி நிலைகள், வகைகள் தோன்றின. மனிதன் தோன்றிய போது ஆறாவது அறிவாகிய மனம் பெற்றிருந்தான்.
நம்மில் பலருக்கு ஆறாவது அறிவு என்னவென்றால் பகுத்தறிவு என்றுதான் சொல்வோம். ஆனால் பகுத்தறிவானது மனம் என்ற ஆறாவது அறிவின் ஒரு பண்புதான். இப்படிப் பல பண்புகள் மனம் என்கிற ஆறாவது அறிவுக்கு உண்டு.
ஒவ்வொரு அறிவையும் ஆள ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொரு பூதமும் வரிசையாகத் துணைவருகிறது. தொட்டுணர்வதை நிலமும், சுவைப்பதை நீரும், நுகர்வதை காற்றும், காண்பதை நெருப்பும் மேலும் கேட்பதை ஆகாயமும்
ஆட்சிசெய்கின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என வரிசை கூட மாறாமல் நம் படித்திருப்போம். அப்போதே தமிழர்கள் எவ்வளவு அறிவுடன் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்பார்த்தால் இன்று நாம் திரைப்படங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதன் உண்மை விளங்கும். தமிழில் இவ்வளவு அறிவுசார்ச் செய்திகள் இருக்கையில் குப்பைகளைப் படித்துவிட்டு தமிழால் பயனில்லை, தமிழில் பேசாதே என்றால் சொல்பவரை மூடர் என்றும் கேட்பவரை முட்டாள்களென்றும் சொன்னால் என்ன தவறு.
தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கணக்கிடப்படமுடியாத பழைய காலம் என்பதை நாம் அறிவோம். இது வடமொழியில் வேதத்தைத் தொகுத்த வியாசமுனிவர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்ட காலம் என்றும், இசை நடனவிதிகளுக்கு மூலவராகக் கருதப்படும் பதஞ்சலிமுனிவர் காலத்தை ஒட்டி வாழ்ந்தவரகாகத் தொல்காப்பியர் கருதப்படுகிறார்.
மாணிக்கவாசகரும் இதே கருத்தைத் தெரிந்து பாடியிருக்கிறார்.
புல்லாகிப் பூடாய்ப்புழுவாய் மரமாகிப்பல் விருகமாகிப்பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பொத்தாம் பொதுவான டார்வினின் அரைகுறைப் பரிணாமக் கொள்கை எங்கே? பழந்தமிழ்ச் சொல்லும் முலம் தெளிந்துணர்ந்த பரிணாமக் கொள்கை எங்கே... இனி யாராவது பரிணாமக் கொள்கையைக் (Theory of Evolution) கண்டவர் யாரென்றால் டார்வின் என்று சொல்லாதீர்கள்; எங்கள் தொல்காப்பியர் என்று சொல்லுங்கள்.
வரிசை மாறாமல் ஆறறிவும் (6 Senses) எவ்வளவு தெளிவாக தமிழர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பாழாய்ப்போன கடல் நம்மிலிருந்து இவைகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ அறிவியல் மற்றும் நுட்பச் செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கும்.
தமிழின் சிறப்பு தொடர்ந்து எடுத்துரைக்கப்படும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 01 அக்டோபர் 2009 10:33)
இப்பதிவு நமது தாய் மொழி பற்றிய பல புதிய பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது... நான் தாங்களிடம் ஒரு கேள்விக்கு பதில் அறிய விரும்புகிறேன்... உங்களுடைய பார்வையில் தாய் மொழியின் தற்போதைய நிலை என்ன?.... உங்களது பதிலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்...... நன்றி.....