போய் வா பாரதி! (ஓரங்க நாடகம்)

போய் வா பாரதி! (ஓரங்க நாடகம்)

Aug 27, 2012

ஒவ்வோர் இளைஞனும் படிக்கவேண்டிய செய்திகள் இந்த நாடகத்தில் அடங்கியிருக்கிறது. தன்னிலை உணர்ந்து தன் நாட்டின் நிலையும் உணர்ந்து வெந்து புழுங்கிப் பின் பொங்கி எழுதிய திரு வெங்கட் அவர்களுக்கும் அவரின் நாட்டுப்பற்றுக்கும் நாம் தலைவணங்குகிறோம்….

பாத்திரங்கள் : பாரதி (மீண்டு உயிர்த்தெழுந்தவன்), தற்காலன் (நீங்களோ அல்லது நானோ)

(ஆகஸ்டு 15 , 2012 – ஒரு வழக்கமான காலை – ஆனால் இன்று விடுதலை நாள் என்பதால் தற்காலன், அந்த நினைவுடன் எழுகின்றான். கண்ணைக் கசக்கிக் கொண்டு, பலகணியைத் திறந்து காலை வானத்தைப் பார்க்கிறான்……..)

அருவ ஒலி :  “வானமெங்கும் பரிதியின் சோதி… மலைகள் மீதும் பரிதியின்

சோதி… கானல் நீர்க் கடலின் மீதும்…”

தற்காலன் :   ஐயோ ! பாரதியா, இவர் எங்கு இங்கு வந்தார் ?

(மெல்லிய காலை ஒளியில் புகைபோல் ஒன்று வானில் தோன்றி, அருகே வந்து தெளிய, எதிரே பாரதி)

தற்காலன் :   சார் ! ஐயா! குட் மார்னிங் ! சாரி, காலை வணக்கம் ஐயா ! நீங்க… எப்படி… இங்க…

பாரதி : காலையின் முதல் வணக்கமே ஆங்கிலமா… அப்படியென்றால் இன்னுமா இங்கு ஆங்கிலேயன் இருக்கிறான்… எங்கே அவன்?

தற்காலன் :   இல்லை; இல்லை; மன்னிக்கவும்; ரொம்ப நாள் ஆச்சு ஐயா; விடுதலை கிடைத்துவிட்டது.  in fact, மன்னிக்கவும், அதாவது விடுதலை 1947 ல் கிடைத்து விட்டதையா….65 வருடம் ஆகி விட்டது…

பாரதி : ஆஹா ! ஆஹா ! ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று…..ஆடுவோமே..”

தற்காலன் :  (இவர் வேற…)  சொல்லுங்கையா… எப்படி வந்தீங்க? நீங்க ரொம்பகாலம் முன்னாடியே… இறந்து விட்டதாய்…

பாரதி :     ஹா ஹா ஹா  கவிஞனுக்கு ஏதையா இறப்பு.. இறக்கும்போது என் உயிருடன் கலந்த ஜோதியாய் எரிந்து கொண்டிருந்தது சுதந்திர தாகம்….அதனால் பூத உடல் இறந்தாலும் என் ஆன்மா இறக்கவில்லை. பல காலம் உணர்வின்றிக் காற்று வெளியில் சுற்றிக் கொண்டிருந்த அது ஏதோ  பூரணம் பெற்று இன்று மீண்டும் என் உருவில் மீளக் கண்டேன்…என் உணர்வுகள் மீண்டும் கொண்டேன்….சொல்….எப்போது கிடைத்தது சுதந்திரம்…? எப்படி வாழ்கிறது  என் பாரதம் ? எப்படி வாழ்கிறார் எம்மக்கள் ? 65 ஆண்டுகளில் உலக அரங்கில் நாம் நிச்சயம் மேலே இருக்க வேண்டுமே “பாருக்குள்ளே நல்ல நாடு; எங்கள் பாரத நாடு” என்று அன்றே சொன்னேனே…..” தொன்று நிகழ்ந்ததனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், இவள் என்று பிறந்தனள், என்றுணராத இயல்பினளாயிற்றே என் பாரதத் தாய்…”

தற்காலன் :  (மனதுக்குள் – தொலைந்தேன்….இவரிடம் என்ன சொல்வேன்எங்கு எப்படி ஆரம்பிப்பேன்…..?”) ஐயா, அறுபத்தைந்து ஆண்டுகள் கதை… ஒன்று செய்கிறேன்….நீங்கள் ஒவ்வொரு கேள்வியாய்க் கேளுங்கள்; நான் விடையிறுக்கிறேன்.

பாரதி :     ஹா ஹா ஹா அதுவும் சரிதான்…..என் முதல் கேள்வி… வெள்ளிப்பனிமலையின் மீதுலவுகிறீரா ? அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுகிறீர்களா?

தற்காலன் : (மனதுக்குள் – இவன் ஒரு சத்திய ஜோதி போல் இன்னும் ஒளிர்கிறான்…. இவனிடம் மறைத்துப் பயனில்லை…)

எங்கே ஐயா உலவுவது? கிழக்கே உலவினால் வங்க தேசத்துக்காரன் அடிக்கிறான்; மேற்கே உலவப்போனால் பாகிஸ்தானியன் சுடுகிறான்; வடக்கே சீனன்; அடி மேலைக்கடலில் இத்தாலியன் சுடுகிறான்; அமெரிக்கன் சுடுகிறான்… தெற்கே கீழே, சிங்களவன் சுடுகிறான்…

பாரதி : என்ன வங்க தேசமா? விடுதலைத் தீயில் நெய்வார்த்த அந்த வங்க சகோதரர்கள் நம் எதிரியா? அது யார் பாகிஸ்தானியன் ?

தற்காலன் : வங்க தேசம் தான்; ஆனால் நம் வங்க தேசம் அல்ல ! அதாவது நம் வங்க தேசம் இப்போது மேற்கு வங்கம். நான் சொன்னது பங்களாதேஷ் என்று பெயர் பெற்ற உங்கள் காலக் கிழக்கு வங்கம்… பாகிஸ்தான் என்பது உங்கள் கால சிந்து தேசம்…

பாரதி : அடப்பாவிகளா; என் தேசத்தின் இருபக்கமும் இரண்டு இறக்கைகளை வெட்டி விட்டீர்களே… யார் செய்தது இந்த படுபாதகம்?

தற்காலன் : ஐயா, பொறுங்கள். சத்தியமாக நானில்லை… ஜின்னா என்று ஒருவர்…

பாரதி :  அந்த இஸ்லாமிய சகோதரரா? நம்ப முடியவில்லையே; “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர்; தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ” என்று எழுதியிருந்தேனே……

தற்காலன் : ஐயா, கவிதை வேறு, வாழ்க்கை வேறு…

பாரதி :    என்ன?… கவிதை வேறு வாழ்க்கை வேறா?… அடப்பாவி…! கவிதை என்பது வாணியின் வாக்கு; அது சத்தியம்; வாணியைச் சரண் புகுந்தேன்; அருள் வாக்களிப்பாள் எனத் திடம் மிகுந்தேன்; பேணு நல் பெரும்தவத்தாள்; நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்… இல்லை; எங்கோ தவறு இருக்கிறது; உள்ளத்தின் சத்தியம் கனல் விட்டு எரிய எழுதிய வார்த்தைகள் பொய்யாக முடியாது… சரி; சொல் ! அவர்கள் தான் பிரிந்து சென்று விட்டார்கள்; பகைவனுக்கருள்வாய் நெஞ்சே; நல் நெஞ்சே! பகைவனுக்கருள்வாய். அவர்கள் நன்றாய் வாழட்டும்… விடு… மீதமுள்ள நம்மவராவது நன்றாய் இருக்கிறார்களல்லவா… சிந்து நதியின் மிசை, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருகிறீர்கள் அல்லவா? வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்கிறீர்கள் அல்லவா ? சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்து விட்டீர்களல்லவா ? சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்து விட்டீர்களல்லவா ?…

தற்காலன் : ஐயா… மூச்சு விட நேரம் கொடுங்கள்… சிந்து நதியின் பெரும்பகுதி இன்று பாகிஸ்தானுக்குள் அதனால் தோணி விட முடியாது… சேர நாடு இன்று கேரளா… அவர்களுக்கும் தமிழ் நாடான நமக்கும் முல்லைப் பெரியார் அணை சண்டையில், மண்டைகள் உடைவது தான் மிச்சம்… கங்கை நீரை விடுங்கள்… பக்கத்திலுள்ள கன்னடர்களே காவிரி நீரை அடைத்து வைத்திருக்கிறார்கள்; ஒரு சொட்டு கூட தமிழனுக்குத் தரமாட்டார்களாம்; சிங்களத் தீவுக்கெங்கே பாலம் அமைப்பது? அது இப்பொழுது தனி நாடு; சிங்களவர்கள் இதுவரை ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று விரட்டி இன்னும் ரத்த தாகத்தில் அலைகிறார்கள்… சேதுவை மேடுறுத்த ஐந்நூறு கோடி ரூபாய் செலவு செய்து விட்டு; இப்போது முடியாது என்று கிடப்பில் போட்டு விட்டார்கள்… அதில் முன்னூற்றைம்பது கோடிக்கு மேல் ஆளும் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்…

பாரதி :    என்னைச் சற்றுப் பிடித்துக் கொள்… கொஞ்சம் நீர் கொடு… என்னவோ செய்கிறது… சற்று உட்காருகிறேன்…

தற்காலன் : மன்னிக்கவும்! உங்களை இன்னும் நான் உட்காரவே சொல்லவில்லை; நீரும் கொடுக்கவில்லை… இதோ ஒரு நொடியில்…

பாரதி: (ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்; பள்ளிச்சாலைகள் வைப்போம்…)

தற்காலன்:  (நாற்காலியில் அவரை அமர வைத்துநீர் கொடுத்து) ஆயுதம் செய்கிறோம்… அதிலும் ஊழல் செய்கிறோம்… அந்த ஆயுதங்கள் ஒரிசாவிலும், ஜார்கண்டிலும், பீஹாரிலும், மேற்கு வங்கத்திலும் இருக்கும் மாவோயிஸ்டுகளை அடக்கவே போதவில்லை… நல்ல காகிதம் செய்கிறோம்… கோடிக்கணக்கில் நாட்டு நடப்புகளைச் சொல்லப் பத்திரிக்கைகளாய் அவை மாறுகின்றன… எத்தனை பக்கம் போட்டாலும் போதவில்லை. தினம்,அவ்வளவு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், விபத்து, சாவுகள்… ஆலைகள் வைத்திருக்கிறோம்… அத்தனையும் அத்தனை நதிகளையும் கொன்று விஷமாக மாற்றி விட்டன; காற்று மண்டலத்தையும்தான்;  அதற்குமேல் நிறைய சாராய ஆலைகளும் உண்டு… அந்த அதிபர்கள் தான் நிறையப் பள்ளிகள் திறந்திருக்கிறார்கள்…

பாரதி :   (பித்துப் பிடித்தவன் போல்… தனக்குள்)  ஓயுதல் செய்யோம்; தலை சாயுதல் செய்யோம்; உண்மைகள் சொல்வோம்; பல வண்மைகள் செய்வோம்….

தற்காலன்: ஓய்வதில்லை ஐயா… உண்மை… பட்டினிச் சாவுகள் ஓய்வதில்லை; தினம் இருநூறு பேரையாவது, வறுமைக் கோட்டிற்கு கீழே அனுப்புகிறோம்; அரசியல்வாதிகள் ஓயாமல் ஊழல் செய்கிறார்கள்; வியாபாரிகள் ஓயாமல் பணம் செய்கிறார்கள்; அதிகாரிகள் ஓயாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்; மக்கள் ஓயாமல் இலவசம் தேடுகிறார்கள்; மாணவர்கள் ஓயாமல் சினிமா பார்க்கிறார்கள்; பெண்கள் ஓயாமல் சின்னத் திரை பார்க்கிறார்கள்; ஆண்கள் ஓயாமல் குடிக்கிறார்கள்; யாரும் ஓய்வதில்லை ஐயா; யாரும் ஓய்வதில்லை… தலை சாய்வதும் இல்லை… எவ்வளவு அடித்தாலும் நாங்கள் நிமிர்ந்து நின்றே வாங்கிக் கொள்கிறோம்… எங்களுக்குள் சூடு, சொரணை, மானம், ஈனம் போன்ற வார்த்தைகளை மறந்து விட்டதால்… நாங்கள் குனிந்து நிலம் பார்ப்பதே இல்லை… பன்னிரண்டு வயது மகளைக் கூட யாரோ ஒரு பதினாறு வயது பையனுடன் காம நடனம் ஆடவைத்து; எல்லோரையும் அழைத்து, என் பெண் சின்னத்திரையில் “மானாட-மயிலாட” நிகழ்ச்சியில் ஆடுகிறாள்; மறக்காமல் பாருங்கள் என்று தலை நிமிர்ந்தே சொல்கிறோம்…

பாரதி :   அட ஈனமில்லாதவர்களே; குழந்தைகளையுமா? ”நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா” என்ற என் பாடலை அவர்களுக்கு சொல்லியே தரவில்லையா? பாரத நாடு, பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்”….இதையும் சொல்லவில்லையா?

தற்காலன்: ஐயா, நீதி காசுக்கு விலை போகிறது; உயர்ந்த மதி வெளிநாட்டுக்குச் சென்று விடுகிறது; கல்வி கூறுகட்டிக் கடைத்தெருவின் நடைபாதையில் விற்கப்படுகிறது; அன்பு செலுத்தத் தகுதியான அடுத்த மனிதர் யாருமே இல்லை என்பதால் வளர்ப்புப் பிராணிகளிடம் மட்டுமே செலுத்தப் படுகிறது… மேலோர் என்பவர் பத்து கோடிக்கு மேல் வருமான வரி கட்டாமல் சொத்து வைத்திருப்பவர்கள் அல்லது சினிமா நடிகர்கள்… நாங்கள் பாரத நாட்டின் புதல்வர் என்பதை மறப்பதே இல்லை; அதனால்தான் என்று வெளிநாடு செல்வோம் என்ற கனவிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

பாரதி :   பாவிகளே, படுபாவிகளே… (மெல்லிய உடைந்த குரலில்)  “நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி… வஞ்சனை செய்வாரடி, கிளியே… வாய்ச்சொல்லில் வீரரடி…” என்று ஏதோ ஒரு விரக்தியில் நான் பாடியது உண்மைதான்… அதற்காக, நான் பாடிய பல பாடல்களை உண்மையாக்காத நீங்கள்… இந்த வரிகளைத்தானா சத்தியமாக்க வேண்டும்?? பதர்களே… “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடீ சிவசக்தி… வல்லமை தாராயோ  இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே…”

தற்காலன்(நாற்காலியில்  உட்கார்ந்திருக்கும் பாரதியின் பாதங்களைத் தடவியபடி)… ஐயா, ஒன்று சொல்லலாமா? சினமின்றி கேட்டுக்கொள்வீரா?

பாரதி :   ஏற்கனெவே என்னைப் பாதி மீண்டும் கொன்றுவிட்டாயடா… இன்னும் செய்ய என்ன இருக்கிறது? ம்ம்… ம்ம்… சொல்! சொல் !!

தற்காலன்: ஐயா… உங்கள் பராசக்தி என்றோ இந்த நாட்டைவிட்டுச் சென்றுவிட்டாளய்யா… அவள் மீது தவறில்லை… இருக்கும் ஆயிரம் பேரில்… ஏதோ, ஓரிரண்டு அசுரர்கள்  இருந்தால் அவள் வதைப்பாள்… சம்ஹாரம் செய்வாள்… இருக்கும் அனைவருமே அசுரர்களாக மாறிவிட்ட ஒரு உலகத்தில் யாரைக்காப்பாற்ற அவள்  இருக்கவேண்டும் அவளுக்குத் தெரியும்… எதிர்ப்பார்  இல்லா அசுரர் கூட்டம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமென்று… அதனால் அவளே உருவாக்கிய  இயற்கை விதிகளுக்குப் பணிந்து அவள் விலகிச் சென்று விட்டாளய்யா…

பாரதி : (ஈனக் குரலில்) ”பஞ்சமும் நோயுமுன் மெய்யடியார்க்கோ  பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ? தஞ்சமடைந்தபின் கைவிடலாமோ?…… தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ ?”

தற்காலன் :பராசக்தியை விட்டு விடுங்கள் ஐயா ! பராசக்தி துன்பங்களில் தவிப்பவற்குத்தான்   உதவிக்கு வருவாள்   துன்பங்களை உருவாக்குபவர்க்கும்… தேடிச் சென்று விழுபவர்களுக்குமல்ல…

பாரதி :   அப்போது யார்தானடா காப்பாற்றுவது ?

தற்காலன்: நீங்கள்தானய்யா…!!!

பாரதி :   என்னது நானா ?   நான் செத்த சவம் !  சிவமல்ல..

தற்காலன்: இருக்கலாம்… தற்போது எங்களுக்கு வேண்டியது சிவமல்ல… சவமாக இருந்தாலும் பரவாயில்லை… வா பாரதி வந்து  எங்களைக் காப்பாற்று…!

பாரதி :   மூடனே! நான் வெறும் மனிதன்…! அதுவும் முடிந்தவன்…!

தற்காலன்: இல்லை பாரதி  முடிந்தாலும் அணையா நெருப்பு நீ… காந்தியையே பார்த்து நீங்கள் கொடுக்கும் நேரத்தில்  என்னால் வர முடியாது… நான் கொடுத்த நேரத்தில் நீங்கள் வர முடியாவிட்டால் பரவாயில்லை.. என்று சொன்னவன் நீ…!

பாரதி :   ஆமாம் சொன்னேன்   தேசத்தை மீட்டெடுக்கும் காலம்  அது… தேசநலத்தின் முன்னே, எந்த ஒரு தனிமனிதனுக்கும் முக்கியத்துவமில்லை… அது காந்தியாக இருந்தாலும்… உனக்கு ஒன்று தெரியுமா நான்தான் பாடினேன்  வாழ்க நீ எம்மான்  இந்த வையத்து நாட்டிலெல்லாம்  தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை…

தற்காலன்(கேவிக் கேவி அழுது கொண்டு) நிறுத்துங்கள் ஐயா நிறுத்துங்கள்… எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் நம் நாட்டின் நிலை அவ்வளவு தெளிவாகத் தெரிந்தது ?

பாரதி :   நண்பா,! நான் அப்போதிருந்த பாரதத்தைப் பற்றித்தான் அப்படிப் பாடினேன்.

தற்காலன்: இல்லை ஐயா !  இன்று அதைவிட மோசமாக இருக்கிறோம்… வேகமாக படுவேகமாக  இன்னும் கீழ்நோக்கியே போய்க்கொண்டிருக்கிறோம்..

பாரதி :  (கண்ணீர் பொங்கி வழிய) தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்… கருகத் திருவுளமோ… எண்ணமெல்லாம் நெய்யாக என்னுயிருனுள் வளர்ந்த  வண்ண விளக்கிது மடியத்திருவுளமோ… ஓராயிரம் வருடம ஓய்ந்துக் கிடந்தபின்னர் வாராது போல வந்த மாமணியைத்தோற்போமோ…

தற்காலன்: தோற்றுவிட்டோம்  அப்பா !  என் தெய்வமே ! தோற்றுப் பல காலமாயிற்று (விக்கல்கள்)

பாரதி :   (விசும்பல்களுக்கிடையில்ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா… இளைய பாரதத்தினாய் வா வா வா எதிரிலாவதத்தினாய் வா வா வா  களையிழந்த நாட்டினை முன்போலே களை சிறக்க வந்தனை வா வா வா…

தற்காலன்: போதும் பாரதி… முட்டாளே… நிறுத்து… இனிமேலும் என்னால் தாங்க முடியாது…

பாரதி :  (அதிர்ந்துபோய்) என்னையா முட்டாள் என்று சொன்னாய் ???

தற்காலன்: இல்லை என்று சொல்ல மனம் துடிக்குதைய்யா, ஆனால்   ஆமாம்   என்று சொல்ல வேண்டியதே என் தற்காலமய்யா

பாரதி :   பரவாயில்லை…! சொல்லு

தற்காலன்: இன்றைய இளைஞன்  இன்னும் மனிதனாக மாறவே இன்னும் பலகாலம் ஆகுமய்யா

பாரதி :   ஏன் ?

தற்காலன்: அவனை முதலில் விஜய்யிடமிருந்தும், சிம்புவிடமிருந்தும், ஐஸ்வர்யா ராயிடமிருந்தும்  தமன்னாவிடமிருந்தும்   அமலாபாலிடமிருந்தும் டாப்ஸியிடமிருந்தும் பிரிக்கவே கல்பகோடி காலம் ஆகுமய்யா.

பாரதி :    யார்    இவர்களெல்லாம் ? எமக்குத்தொழில் கவிதை  நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற லட்சியங்கள் கொண்ட மக்களோ

தற்காலன்:  இல்லை ஐயா !  எமக்குத்தொழில் சினிமா,  நாட்டையழித்தல்  இமைப்பொழுதும் சோராது பணம் சேர்த்தல்  என்பதே இவர்கள் கொள்கை

பாரதி :    நீ வீணவதூறு பேசுவதாக நினைக்கிறேன்… அவர்களுக்கும் கொள்கைகள் இருக்கலாம்…

தற்காலன்:  என்ஊச்சி மண்டேலே கிர்ருங்குது   அப்படிப் போடு போடு  நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே   இவையே விஜய்யின் கொள்கைகள் ஐயா… எவன்டி உன்னப் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் என் கையிலே கெடச்சா செத்தான்… செத்தான்… என்பதும்  லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே  இந்த லூசுப்பையன் ஒம்மேலதான் லூசாச்சுத்துறான்… இவை சிம்புவின் கொள்கைகள் ஐயா… விடுதலை நாள் வரும்போதெல்லாம் இவர்களெல்லாம்  நாள்முழுதும் சின்னத்திரையில் வாழ்வார்களய்யா

பாரதி :    யாரிவர்கள்  விடுதலைக் கனலில் புடம் போடப் பட்ட பெரியோர்களோ ??

தற்காலன்:  இல்லை ஐயா அவர்கள் நடிகர்கள்…

பாரதி :    நடிகர்களா அப்போது உங்களிடமிருக்கும் போராளிகளையும் தலைவர்களைப் பற்றியும்  பற்றிச் சொல்லுமேன்…

தற்காலன் : எங்கள் தலைவர்களில்  ஒருவர் தன் குடும்பம் வாழ  ஐம்பதினாயிரம் தமிழர்கள் இறந்தாலும் கலங்க மாட்டார் ஆனால் தமிழர் நலனுக்காக தினமும் இறப்பதாகப் பம்மாத்து செய்வார் எழுத்தில்….. இன்னொரு தலைவி  தான் ஆட்சியுரிமை பெற எதையும் செய்யத்தயங்க மாட்டார்… எதிர்ப்பவரை எரித்து விடுவார்… மக்கள் முட்டாள்கள் என்று சொல்லாமல் சொல்வார் தன் செயல்கள் மூலம்… இன்னொருவர் மக்கள் தேர்தலில் புறக்கணித்தாலும், பூட்டுவேன் காட்டுவேன்  என்று   அடுத்தவரை மிரட்டியே கட்சி வளர்ப்பார்… ( வளர்ப்பதாக  நினைத்துக் கொள்வார்இன்னொருவர் குடும்ப அரசியலை ஒழிப்பேன் என்று தன் இடப்புறம் மனைவி வலப்புறம் மச்சினன்  இருக்க முழங்குவார்… நாக்கு குளறும்போதெல்லாம் அதைக் கடித்துக் கொள்வார்…

பாரதி :    சீச்சீ நாயும் பிழைக்கும்  இந்தப் பிழைப்பு !!!

தற்காலன் : உறக்கப் பேசினால் உதை கொடுப்பார்கள் பாரதி  உனக்கும் சேர்த்துத்தான்…

பாரதி :    பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா  மோதி மிதித்து விடு பாப்பா   அவர் முகத்தில்  உமிழ்ந்துவிடு பாப்பா

தற்காலன் : பாரதீ இதையெல்லாம் செய்தால் அவர்கள் கவலைப் பட மாட்டார்கள்  இதைத் தாங்கும் திராணி எனக்குண்டென ப்ரச்சாரம் செய்வார்கள். திராணியார் எனப் பட்டமும் அளித்துக் கொள்வார்கள். பாரதி!… போய் விடு! இவ்வளவு நேரம்  உன்னிடம் பேசிய என் கால்கள் நரகலில்!  மனித நரகலில்  இரண்டடி ஆழத்தில் புதைந்திருப்பதை நீ இன்னும் காணவில்லையா ?    “நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் சிற்றெரும்பால் யானை சாகும் வரி வகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் வருங்காலமுணர்வோரும் மயங்கி நிற்பர்”  என்று நீ தானே எழுதினாய் அதுதான் எங்கள் இன்றைய நிலையும்!

பாரதி :   கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணமும்  இதுவெனும்  அறிவுமிலார்  துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே  அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே…!    நெஞ்சு பொறுக்குதில்லையே…!!

தற்காலன்:  அப்ப்ப்ப்ஆஆஆ!!   எப்படி பாரதி எங்களின்  இன்றைய நிலைமையை அன்றே இப்படிப் படம் பிடித்தாய் ??

பாரதி :    இவையெல்லாம் நான் வாழ்ந்த காலத்து மக்களின் அப்போதைய நிலையைப் பார்த்து எழுதியது. மாற்றான் ஆட்சியில் விடுதலை தவறிக் கேட்டு இருப்பதால் சோர்ந்து இருந்த மக்களின் நிலையாக அவைகளைக் கண்டேன்.  ஆனால் இப்போது புரிகிறது… இவர்கள் எப்போதுமே அப்படித்தான் என்று…

(இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டு…..வெகு நேரம் வானத்தையே வெறித்தபடி இருக்கிறார்கள்……. பாரதியின் கண்கள் சிவந்து கொண்டே போகின்றன… ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் எழுந்து தோன்றி வந்த இடம் நோக்கி நடக்கத் தொடங்குகிறான்)

தற்காலன்:  “பாரதி… போ… இல்லை… நீயும் போய் விட்டால் எங்களுக்கு யாருண்டு… போய்வா பாரதி !  போய்… இந்த நாட்டைக் காக்கும் ஒரு வழியுடன் வா… பாரதி…!”

பாரதி :    (நின்று திரும்பிப் பார்க்கிறான்…) “வழி ! ………உங்களுக்கு ! (சிரிக்கிறான்) காப்பாற்ற வேண்டும்…! உங்களை…!  (மீண்டும் சிரிக்கிறான்)…..மீண்டும் வரவேண்டும் நான்…! (பேய் போல் சிரிக்கிறான்)… வருகிறேன்… வருவேன்… முடிவுடன்… ஒரு முடிவுடன்….!!

(அடிக்குரலில் தொடங்கி உச்சக் குரலில் பாடிக் கொண்டே நடக்கிறான்)

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்….அதை

ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன்….

வெந்து தணிந்தது காடு………….வெந்து தணிந்தது காடு……..

வெந்து தணிந்தது காடு………….வெந்து தணிந்தது காடு……..

(மெதுவாய் புகை உருவமாய் மாறி கதிரொளியில் கரைந்து போகிறான்).

 

2012 ஆம் ஆண்டு விடுதலை நாளுக்கான காணிக்கையாக நண்பர் திரு வெங்கட் ட்ரான்டோரியன் அவர்கள் எழுதி செம்புலப் பெயல் நீராவோம் என்ற முகநூல் குழுவில் வெளியான ஓரங்க நாடகம் இது. பனித்துளிகள் தளத்தில் வெளியிட அனுமதித்த திரு வெங்கட் அவர்களுக்கு எமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம். 
The following two tabs change content below.

வெங்கட்

இதுவரை இரண்டு அரசு வங்கிகளில் பணியாற்றியவர். ஏறத்தாழ பத்தாண்டுகளாக நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் சேவையாற்றியவர். மிகவும் புகழ்பெற்ற பழமையான கணித்துறை நிறுவனத்திலும் சிலகாலம் பணியிலிருந்தவர். மனிதம் பயணிக்கும் பாதையைச் செப்பனிட்டுச் சீர்திருத்தவும் மனிதம் அதில் சிறக்கவும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் உண்மை மனிதர்.

Latest posts by வெங்கட் (see all)

2 பதில்கள்

  1. சரவணன் /

    மெய்சிலிர்தேன்.. கடைசியாக பாரதி சொல்வதை நம்பி வாழ்கிறேன்.. வருவான் பாரதி என்று..
    சாதாரண மனிதன் வாழ தகுதியற்ற நாடு...

  2. vijayanand k /

    எனது வாழ்த்தினையும் இங்கு பதிவிடுகிறேன் வெங்கட் அண்ணா

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>