| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |

நீ பிறந்த மண்ணில்
உன் உதிரத்தின் உரத்தில்
உதித்துவிட்ட எங்களுக்கு
உனது பிறந்த நாளில்
உன் நினைவுகள் மட்டுமே
உள்ளத்தில் உறைந்து கிடக்கின்றன?
வேறென்ன இருக்க முடியும்?
சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்!
உன் பாப்பாக்கள் பாட்டிகளாயும்
இன்னும் சாதிகள் ஒழிந்தபாடில்லை
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவமென்றாய்!
என் அரசியல்வாதிகள் அந்தப்
பாவப் பெருங்கடலில்தான்
படகோட்டிக் கொண்டிருக்கிறார்கள்
என்று தணியுமிந்த சுதந்திர தாகமென்றாய்!
தாகம்தீர்க்கத் தண்ணீருமில்லை
இங்கே உடுக்கப் பலருக்குத் துணியுமில்லை
நீ பிறந்த குலத்தைத் திருத்தப் பார்த்தாய்!
அது இன்று வரட்டுக் கௌரவத்தால்
செத்துக் கொண்டிருக்கிறது
சிங்களத் தீவினிற்கோர் பாலமைப்போம் என்றாய்!
நாங்கள் இருந்த பாலத்தையும்
இடிக்கத் திட்டம்போட்டுவிட்டோம்
இனியென் செய்வாய்…
இருந்தபோதும் உனை மதிக்காத நாங்கள் – நீ
இறந்துபோனதும்
உன் பெயர் சொல்லி பேர்வாங்கிக் கொண்டோம்
இனி உன் நினைவுகள் மட்டுமே
எங்களில் உறைந்து கிடக்கின்றன…
நீ சொல்லிப் போனது
சத்தியமாய் நினைவில் இருந்ததாக
நினைவே இல்லை!
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 07 சூலை 2009 15:03)