மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரை
"ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது சித்தர் வாக்கியம். தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறப்பூக்கள் பூத்து அழகாகக் காட்சிதரும் ஆவாரை தங்கச் சத்தும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. நாடி நரம்புகளில் தளர்ச்சியைப் போக்கி உடலை வன்மையாக்கும். மேகவெட்டையையும் உடலின் உள்வெப்பத்தையும் தணித்து, குளிர்ச்சி தரும். உடலைத் தங்க நிறமாக்கும் உடல்வறட்சியையும் சோர்வையும் நீக்கி வலிமைதரும்.
முற்காலங்களில் வெகுதூரம் நடக்கக் கூடியவர்கள் இதன் இலைக் கொத்துக்களைத் தலையில் பரப்பித் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு நடந்துபோவார்கள். இதனால் பரிதி (சூரிய) வெப்பக்கதிர்கள் தாக்கம் (Sun stroke) ஏற்படாது. சோர்வும் வராது. ஒரு கைப்பிடியளவு ஆவாரம்பூவை 2 குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுருக்கி வடித்துப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகினால் சுவையான தேனீர் போல இருக்கும். இதனால் மேற்சொன்ன நன்மைகள் கிட்டும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை இல்லாமலும் பருகலாம்.
நீரிழிவு நோயில் அதிக தாகம், அதிகப்பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் மெலிந்து போதல், உடல் வலி மற்றும் உடல் எரிச்சல் போன்றவை நீங்கி நலம்பெற, ஆவாரம்பூ, நெல்லிக்கனி, நாவல் பழக் கொட்டைப் பொடிகளைக் கலந்து 1 தேக்கரண்டி அரை குவளை நீருடன் காலை, மாலை சாப்பிடவேண்டும்.
இப்பூவை ஆவாரம்பூ மணப்பாகு (சர்பத்) செய்து பருகினால் ஆண்களின் சிறுநீர்ப்பாதை எரிச்சல், சூடு மற்றும் வெள்ளை விழுதலில் இருந்து நலம் பெறலாம்.
உலர்ந்த பூவுடன் பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சிறிது வெந்தயம் கலந்து பொறியில் அரைத்துக் குளிப்பதால் உடல் நமைச்சல், வியர்வை நாற்றம், நீங்கித் தோல் மென்மையும் பொலிவும் பெறும்.
ஆவாரம்பூ 100 கிராம் அளவு, கொழுந்து இலை 100 கிராம் அளவு, ஆவாரம் பட்டை 100 கிராம் அளவு அருகம்புல் வேர் 100 கிராம் அளவு சேர்த்து இடித்து மென்மையாக சலித்து வைத்துக் கொண்டு காலை இரவு உணவுக்கு முன் 1/2 தேக்கரண்டி அளவு நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மூலச்சூடு, உள்மூலம் நீங்கி உடல் நலம் பெறும். இதன் விதைப் பொடியை நீரில் குழப்பி கண்ணிரப்பை மீது பற்றிட்டால் கண்சிவப்பு, அரிப்பிலிருந்து நலம் பெறலாம்.
இதன் இலை, பூ, காய், பட்டை தனித்தனியாகக் கலந்து மென்மையாகப் பொடிசெய்து வைக்கவும். இதன் பெயர் ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் என்று பெயர். இந்தப் பொடியைக் காலை மாலை 1 தேக்கரண்டி அளவு பால் அல்லது தண்ணீருடன் பருகினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மேகச்சூடு தணிந்து சூட்டினால் ஏற்படும் அனைத்து நோய்களும் விலகும். நீரிழிவுடன் கூடிய கண்பார்வைக் கோளாறு உள்ளவர்கள் பூவைப் புதியதாய்ப் பறிந்து வந்து அவியலாகச் சமைத்து வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும்.
நீரிழிவும் கட்டுப்படும்.
சுக்கு 10 கிராம் அளவு, மிளகு 10 கிராம் அளவு, அதிமதுரம் 10 கிராம் அளவு, சித்தகத்தை 10 கிராம் அளவு, நன்னாரி வேர் 10 கிராம் அளவு, விலாமிச்சை வேர் 10 கிராம் அளவு, ஆவாரம் பூ 50 கிராம் அளவு, கொத்தமல்லி 90 கிராம் மெல்லியதாக வறுத்துப் பொடித்து சுக்குக் காஃபி செய்து காலை மாலை பருகினால் இப்பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
ஆவாரைப் பட்டையினை ஏராளமாகச் சேகரித்துத் தோல் பதனிடுவதற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவின் மூலிகைச் செல்வங்களில் ஆவாரையும் ஒன்று. இதை முறையாகப் பயன்படுத்தி நலம் பெறுவோமாக.
தொடரும்...
பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.
AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்.
41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை - 641402
தொலைபேசி: 0422-2688985
செல்லிடப்பேசி: 93603 36924 மற்றும் 96598 99899
மின்னஞ்சல்: avmvijayaragavan(at)yahoo(dot)com
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 07 சனவரி 2010 08:09)