| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (7) - மனமகிழ்ச்சிக்கு மகிழம்பூ
பழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்.
மனதுக்கு இதமான மணம்வீசும் மலர்களில் மகிழம்பூ மிகச்சிறந்தது. மகிழ் என்றால் "மகிழ்ச்சியாக இரு" என்று பொருள். இந்தமல்ர் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதால் சித்தர்கள் இதனை மகிழம்பூ என்றழைத்திருக்கிறார்கள்.
கைப்பிடி மகிழம்பூவை 2 கோப்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, சரிபாதியாகச் சுருக்கி வடித்து, காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடலில் சூடு தணிந்து வலிமை பெற்று விளங்கும். மூன்று கைப்பிடிப் பூவை இதேபோல் வைத்து வடித்து, பால் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் ஆண்கள் பருகினால் இல்லற இன்பம் கூடும். நல்ல திறனுண்டாகி உடலுறவுக்குப்பின் ஆயாசமும் களைப்பும் வராமல் தடுக்கும். பித்தம் சமன்படும்.
பூக்களை உலர்த்தி மெல்லிய பொடியாக்கி மூக்கில் பொடிபோடுவதுபோல் உறிஞ்சுவதால், மூக்கில் நிறைய நீர்வடிந்து நாற்றமடிக்கும் மண்டைப்பீனிசம் (Sinusitis), அது தொடர்பான தலைவலி மற்றும் வாயில் சுவையின்மை போன்றவை நீங்கி குணமாகும்.
இதன் விதைப்பருப்பைச் சேகரித்துப் பொடியாக்கி வேளைக்கு 3 கிராம் அளவு காலை மற்றும் மாலை நேரங்களில் பாலுடன் அருந்திவர தாது வளர்ச்சிபெறும். உடல் சூடு, நச்சு, மலச்சிக்கல் நீங்கும். ஒரு தேக்கரண்டி விதைப்பொடியை நெய்கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் கொடுத்தால் குடல் திறனிழந்து மலச்சிக்கலால் அவதிப்படும் வயதானவர்களின் தொல்லை நீங்கும். குடல் வலிமை பெறும். தேவைப்பட்டால் இரண்டு தேக்கரண்டிவரை சாப்பிடலாம். விதைகளை வெந்நீர் விட்டரைத்து நெல்லிக்காயளவு சாப்பிடுவதால் பாம்புக்கடி நச்சு முறியும்.
நாள்தோறும் காலை பல்துலக்கியதும் இளம் மகிழங்காய்களை மென்று சிறிது நேரம் கழித்து துப்பினால் பற்கள் இறுகி உறுதிப்படும். இதன் இலைகளைக் கசாயம் வைத்துப் பல்துலக்கியதும் வாய் கொப்பளித்துவந்தால் பல்நோய்கள் தீரும். இந்த மரப் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். பற்கள் வலிமை பெறும். ஏ.வி.எம் முலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிமையம் தயாரிக்கும் வசீகரா பற்பொடியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
6 கிராம் அளவு பட்டையைச் சிதைத்து 250 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடிகட்டி தேன் 1 தேக்கரண்டி கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் குடிப்பதால் பெண்களின் உடல் வலிமைக்குறைவு மற்றும் கருப்பை வலிமைக்குறைவு நீங்கிக் குழந்தைப் பேறு உண்டாகும்.
சித்த மருத்துவர்கள் வெள்ளியைச் சாம்பலாக்க (பஸ்பம்) இதன் பூப்புக்கும் காலத்தில் சேர்த்து மருந்து முடிப்பார்கள்.
தாதுவைநன் மெய்யழகைச்
சக்தியைஉண் டக்கிவிடுஞ்
சீதளமென் பார்க்கலிக்கஞ்
செய்மருந்தாம் - வாதை
மலத்தைவிழித் தோடத்தை
வல்விடத்தை வெப்பை
விலக்கு மகிழம் விதை
உடலுக்கும் குடலுக்கும் வலிமை தந்து ஆண்-பெண் இருவருக்கும் குழந்தைப் பேறுக்குத் திறனளிக்கும் மகிழம்பூ மரத்தை நாமும் வளர்த்துப் பயனடைவோம்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.
AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்.
41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை - 641402
தொலைபேசி: 0422-2688985
செல்லிடப்பேசி: 93603 36924 மற்றும் 96598 99899
மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 21:59)
-ராகினி ஜெர்மனி