| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
உலக சுகாதார நிறுவனம் WHO ( World Health Organization) மொத்தம் உலகிலுள்ள 160 நாடுகளில் வசிக்கும் இருநூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகக் கூறி அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது. மேலும் இது பெருகி உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் WHO எச்சரித்துள்ளது.
பார்வையில் இருப்பதைவிட அதிகமான வேகத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் மக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறது இந்த நிறுவனம். ஐரோப்பிய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடுவம் (European Centre for Disease Prevention and Control) தான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஒன்றரை இலட்சம் மனிதர்களுக்கும் மேல் இந்த நோய் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 800 பேருக்கும் மேல் இறந்துபோயிருக்கிறார்கள் என யாகூ தளம் கூறுகிறது. இந்தக்காய்ச்சல் வந்து 24 மணிநேரத்தில் பிரேசில் நாட்டில் 30 பேருக்கும்மேல் இறந்து போயிருக்கிறார்கள்.
இந்தப் பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகள் நம்மிடம் ஏதோ
ஒரு பேரழிவைப் பறைசாற்றினாலும், இன்னொருபுறம் உலக வெப்பமயமாதல் (Global Warming) நமக்கு வேறுவிதமான எச்சரிக்கையினைச் செய்கிறது. இந்த உலகவெப்பமயமாதலுக்குக் காரணம் போதுமான அளவு மனிதனாக இருக்கிறான். துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகும்வேகம் அதிகரித்துவிட்டது. புவியின் ஆயுட்காலம் முடிவதற்குள் நம்மை நாமே அழித்துக்கொள்ள ஆயத்தமாகிவருகிறோம். இந்த அழிவு இயற்கைச்சீற்றங்களை விடக் கொடூரமாக இருக்கப்போகிறது. இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழி வளர்க்கும் பண்ணைகளுக்காகவே ஏராளமான காடுகள் அழிக்கப்படுகின்றன. மக்கள் இறைச்சி உண்பதைத் தவிர்த்தால் உலகம் வெப்பமயமாதலிலிருந்து காக்கப்படும்.
புகை மற்றும் போதைப்பொருட்கள் விளைவித்தலுக்காக வானுயர்ந்த காடுகளை அழித்து கஞ்சா, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விளைவிப்பதும் உலக வெப்பமயமாதலுக்கு அடுத்த காரணமாக அமைகிறது. ஆலைக்கழிவுகள் மூலம் ஆற்றுநீர் மாசுபடுதல் பாசனத்தைத் தடுத்து விவசாயத்தின் அழிவுக்குக் காரணமாகிறது. பிளாச்டிக் பொருட்கள் மண்ணின் வளத்தை ஏற்கனவே உறிஞ்ச ஆரம்பித்துவிட்டன.
பல பெரிய நிறுவனங்கள்கூட இன்று பாலித்தீன் பைகள், பிளாச்டிக் குவளைகள் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பாலிதீன் பைகளையும் குவளைகளையும் விலைமலிவாக இருப்பதால் வாங்கிப்பயன்படுத்தும் இவர்கள் போன்ற ஈனப்பிறவிகளுக்குச் சொன்னால் விளங்காது. அனுமதிக்கப்பட்ட மைக்ரான் அளவு என அரசாங்கத் திருடர்களிடம் பணத்தைக் கொடுத்து ஒரு சான்றிதழ் வாங்கிவிட்டு தொழிலைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிளாச்டிக் எனப்படுவது இயற்கையாகவே மக்கவே மக்காது. அதிலென்ன அனுமதிக்கப்பட்ட அளவு என்பது தெரியவில்லை.
நீங்கள் வேண்டுமானால் சாலையோரங்களில் அல்லது பொதுவிடங்களில் பாருங்கள் அதிகம் இந்த பாலித்தீன் பைகள்தான் காணப்படுகின்றன. கிழிந்தும் குப்பைகளோடும் அசிங்கமாய் இந்த புவித்தாயை அலங்கோலப்படுத்தியபடி கிடக்கும் இந்த பிளாச்டிக் பைகள் உலக வெப்பமயமாதலுக்கு ஒரு முக்கியக்காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒருகிலோ அளவு மாட்டிறைச்சியைப் பெற 10 கிலோ அளவு பசுமைத் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு கிலோ அளவு பன்றியிறைச்சிக்கு 5 கிலோ அளவு தாவரப் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. 3 கிலோ அளவு தாவரப்பயிர்கள் அழிக்கப்பட்டே 1 கிலோ அளவு கோழியிறைச்சி உருவாக்கப்படுகிறது. ஆகமொத்தம் இறைச்சி உண்ணும் மனிதர்களுக்காகவே அவர்கள் எடையினை விட அதிகமான அளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்போது உங்களுக்கு விபரீதம் புரிகிறதா? கடைசியில் நீங்கள் அழிக்கத் தாவரங்களே இல்லாத காலத்தில் உங்கள் இறைச்சிப்பசியைத் தீர்க்க உங்கள் கைகால்களையே வதக்கித் தின்னத் தயாராவேண்டிவரும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இன்னும் பல அதிர்ச்சி தரும் செய்திகள் நம்மை உலுக்கக் காத்திருக்கின்றன.
ஆதாரங்கள்:
http://news.yahoo.com/s/afp/20090724/hl_afp/healthfluwho_20090724100534
http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hKdFkdbPG53WKSGTNgwZJ1DNkXng
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:14)