| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (7) - பணத்தின் மீதிருக்கும் ஆசையை விட்டொழியுங்கள்
கவனகரின் முழக்கம் மாத இதழின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்த போது அரங்கராச தேசிக சுவாமிகளின் கருத்துக்கள் வாழ்க்கையின் இயல்புகளை எடுத்துச் சொல்பவைகளாக இருந்தன. புவிவாழ்வைப் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கள் புதுத் தெளிவைப் படிப்பவர்க்கு ஏற்படுத்தும் என்று தோன்றியது. பேராண்மை என்ற திரைப்படத்தில் ஒரு ஆசிரியராக வரும் ஜெயம் இரவி சொல்லும் கருத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டால் பணத்தின்மீதுள்ள பற்று குறைந்து மனத்தின்மீது பற்று அதிகரிக்கும். பண்டமாற்று முறையில் ஆரம்பித்த வணிகத்தில் மனிதன் தான் உருவாக்கும்/விளைவிற்கும் பொருட்களை பிறரிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருட்களைப் பெற்றுக்கொண்டான். அப்போதெல்லாம் உழைப்பது கட்டாயம் தேவைப்பட்டது.
சும்மாயிருப்பவன் தனக்கு வேண்டிய எதையும் பெற முடியாது. ஏனென்றால் அவன் கொடுத்துப்பெற எதுவும் அவனால் படைக்கப்பட்டிருக்காது. பிறகு தேவைக்கு அதிகமாகவோ வேறுபாடான மதிப்புடைய பொருட்களை மாற்றிக்கொள்ளவோ பணம் என்ற ஒரு இடைப்பொருள் வந்தது. மக்கள் உழைப்பைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுப் பின் தன் தேவைக்கான பொருட்களை அந்தப் பணத்தினைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தபிறகுதான் பணத்தின் மீதான ஆசை வளர ஆரம்பித்ததாக ஜெயம்ரவி பாத்திரம் விளக்குவதாகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்தத் திரைப்படத்தில். சரி, பணத்தின் மீதான ஆசை குறைத்துக்கொள்ளப்பட்டுவிட்டாலும் உழைக்கும் தேவை போய்விடுமே என்று நினைத்துவிட முடியாது. அரங்கராச தேசிக சுவாமிகள் எடுத்துரைத்திருந்த கருத்தும் கிட்டத்தட்ட இதுபோலத்தான். பணத்தின் மீதான ஆசை குறைக்கப்படவேண்டுமென்றால் வாழ்வை வெறுத்துவிடுவதென்று கருதவேண்டியதில்லை. இன்பமான வாழ்விற்கு வேண்டிய பணம் வரும்போதும்/இருக்கும்போதும் மேலும் மேலும் பணத்தைத் தேடி ஓடாதீர்கள் என்றும் நீங்கள் இன்புறமட்டும் பணத்தைச் சேருங்கள் உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு அவர்களுக்கு வேண்டிய பணத்தை எவ்வாறு நேர்மையான வழியில் சேர்க்கவேண்டுமென்ற வழிமுறையைச் சொல்லிக்கொடுத்து நெறிப்படுத்துங்கள் என்பதுதான் அதன் உட்பொருள்.

பணத்தாசை குறிப்பிட்ட அளவைவிட அதிகரித்தால் அங்கு நேர்மை விலகும், அதனாலேயே துன்பம் நம்மை ஒட்டிக்கொள்ளும். அது நிம்மதியிழப்பு என்ற துன்பமாகவும் இருக்கலாம் அல்லது சட்டத்துக்குமுன் குற்றவாளி என்ற துன்பமாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு சத்யம் கணினிமென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் இராமலிங்க ராஜூவை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் வந்த குறையை நீக்க ஒரு சில போலிக்கணக்குகளைக் காட்டித் தன் நிறுவனத்தின் பங்குகளின் விலையை உயர்த்திக்காட்டினார், பிறகு அதுவே உயர்ந்த நிலைக்கு வந்தபின், அந்தத் தவறைச் சரிசெய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளியேறியிருந்தால் முழுக்க விடுபட்டிருக்கலாம். ஆனால் பணத்தாசை யாரைவிட்டது. தொடர்ந்ததனால் இன்று சட்டத்துக்குமுன் மாட்டிக்கொள்ளவேண்டியதாயிற்று. அவர் உருவாக்கிய நிறுவனமும் வேறு கைக்கு மாறிப் பறிபோய்விட்டது.
இல்லறத்தின் மீது அதிக ஆசை கொண்டிருத்தலும் பணம்சேர்க்கும் எண்ணத்தைத் தூண்டும். என் குடும்பத்துக்குச் சேர்த்துவைப்பேன். என்பேரனுக்கு நான் சேர்த்துவைப்பேன் என்று அளவுக்குமீறிப் பாடுபட்டு இவன் இன்புறாமல் சாவான். இதுதான் பலரின் இன்றைய வாழ்வு நிலை. துறவறம் என்பது புவி வாழ்வை வெறுப்பது அல்ல என்று சுவாமிகள் கூறியிருந்த கருத்து விளங்க ஆரம்பித்தது. விரும்பும் சிலரை நேசிப்பதே உறவு; விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் நேசிப்பதே துறவு. ஆனால் உலகவாழ்வை வெறுத்து காட்டுக்குப் போவதே துறவு என்று பலராலும் தவறாக எண்ணப்படுகிறது. குடும்ப சமூகப் பிரச்சனைகளில் சிக்குண்டு பின் வாழ்வை வெறுத்து சன்யாசம் எனப்படும் துறவு பூண்ட பலரும் சொன்ன கருத்துதான் அது என்கிறார் சுவாமிகள்.
உண்மையான துறவு எனப்படுவது அன்பின் விரிந்த நிலை, படர்ந்த நிலை, வானளாவி வளர்ந்த நிலை. ஆனால் குடும்ப வாழ்வெனப்படுவது ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்ட அன்பு. பொதுவாக இல்லறம் நாடுவோர் நன்கு எண்ணிப்பார்த்தால் இந்நிலை விளங்கும். அவர்கள் மனைவியை நேசிப்பார்கள், பெற்ற குழந்தைகளை நேசிப்பார்கள், பெற்றோரை நேசிப்பார்கள், உடன்பிறந்தோரையும் உறவினர்களையும் நேசிப்பார்கள். கொஞ்சம் வெளியே வந்தால் நண்பர்களை நேசிப்பார்கள். பிறகு தன் முதலாளிகளை நேசிப்பார்கள் அல்லது தொழிலாளிகளை நேசிப்பார்கள். வணிகம் சார்ந்த அன்பு என்றால் தன் கட்சித்தலைவர்களை நேசிக்கலாம், தலைவர்கள் தொண்டர்களை நேசிக்கலாம். ஆனால் அதுவே எதிர்க்கட்சிக்காரர்களை நேசிக்கமாட்டார்கள். வேறு சாதிக்காரனை நேசிக்க மாட்டார்கள். இதெல்லாமும் ஒரு கட்டுக்குள் அடங்கிய இல்லற வாழ்வின் வெளிப்பாடுதான். இவையெல்லாம் உடலளவிலும் அல்லது எண்ணத்தளவில் வெளிப்படும் அன்பு. எண்ணும் எண்ணம் சொல்லும் இவன் நம்ம ஆள் என்று. அதனால் பிறக்கும் அன்பு ஒரு அளவோடு நின்றுபோகும்.
துறவிகளின் அன்பு உடலளவிலோ எண்ணும் எண்ணத்தளவில் தோன்றும் அன்பல்ல. ஆனால் ஆன்மா எனப்படும் உள்மனம் மலருவதால் தோன்றுவதாகும் அந்த அன்பு. சரி இதுபோன்ற அன்பு சாதாரண மனிதர்களுக்கு, ஏன் உங்களுக்கோ எனக்கோ வராதா என்று கேட்டால் வரும் என்றுதான் கூறவேண்டும். சாலையில் போகும்போது வயதான மூதாட்டி சாலையைக் கடக்கவேண்டுமென்று திணறுவதைப் பார்த்தால் நம்மையும் அறியாமல் உதவிசெய்கிறோமல்லவா அதுவும் இந்தவகை அன்புதான். ஆனால் புகழ்பெறவேண்டுமென்றோ பணத்துக்காகவோ செய்வது வெறும் நடிப்புதானே ஒழிய அன்பில்லை; அதனால் பயனுமில்லை.
உடல் மற்றும் மனதை நேசிப்பவர்க்கு மனநோய் உடல்நோய் இரண்டும் அண்டாது. ஏனென்றால் அதன் தேவையறிந்து செயல்படுவதால். உடல் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று காரியத்திலிறங்கினால் உடல் கெடும்.
நம் குழந்தைகளை மட்டுமன்றி இப்புவியிலுள்ள அனைவரையும் தாயாகப் பார்ப்பது நம் வள்ளலார் சொன்ன சீவகாருண்யம் ஆகும். அதுவும் ஒருவகை துறவறம் தான். உதவி என்று வருபவருக்கெல்லாம் முடிந்தவரை உதவுதல் ஒருவகை துறைவறந்தான். பிறர் துன்புறும் வகையில் பேசுதல் ஒருவகையில் சுயநலம். பிறர் துன்புறவேண்டுமென்றோ பேசுவது Sadist என்று சொல்லப்படுகிற அரக்கமனம். நம் எதிரியாயினும் பிறருக்குத் துன்பமளிக்காமல் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஒரு வகைத் துறவறம்தான். இதற்கெல்லாம் நாம் மனதைப் படிக்கவேண்டும். சுயநலம் இருப்பினும் அதில் கொஞ்சம் பொதுநலம் கலக்கவேண்டும். வாழ்க்கை அப்போதுதான் இனிக்கும்.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 04 நவம்பர் 2009 16:29)