(0 வாக்களிப்புகள், சராசரியாக 0 நட்சத்திரங்கள் - மொத்தம் 5 நட்சத்திரங்கள்)
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (6)- சமச்சீர்க் கல்வி

ஆசிய நாடுகளில் சீனாவின் தற்போதைய வளர்ச்சி அளவிட்டோ இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டோ பார்க்கமுடியாதது. சீனாவின் வளர்ச்சிக்கு அதன் மக்கள் தொகை ஒரு காரணமாக அமைந்திருக்கிறதென்றால், இந்தியாவின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் மக்கள்தொகை என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. மக்கள்தொகை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது மற்றொருநாட்டின் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது.

அதுசரி நம்மால் நம் மக்கள் தொகையை வளர்ச்சிக்குப் பயனபடுத்த முடியுமா என்றால் முடியும். எதையும் திட்டமிட்டுச் செய்யும் சீனாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். சீனாவில் சமச்சீர்க்கல்வி வெற்றியடைந்திருக்கிறது என்பதை உன்னிப்பாய் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

நமதுநாட்டில் 99 விழுக்காடு ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கிடக்கின்றன. CBSC, Metriculation, State board, English medium, Hindhi medium, மற்றும் அந்தந்த மொழிவழங்கும் மாநிலங்களில் Tamil, Kannada, Malayalam, Telugu, Marathi, Gujarathi, Bengali என்று தகுதிவாரியாகவும், மொழிவாரியாகவும் கல்வி கூறுபோடப்பட்டிருக்கிறது. பணவலிமை மிக்கவனுக்கு ஒரு கல்விமுறை, ஏழைக்கு ஒரு கல்விமுறை என்றெல்லாம் இருப்பதைக் கண்டுகொள்ள யாருமேயில்லை.

உயர்கல்வியை எடுத்துக்கொண்டால் அதிலும் 99 விழுக்காடு காசுக்காக மட்டுமே கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. நான்கு சுவர்களை எழுப்பி அதிலொன்றில் கரும்பலகை வைத்துவிட்டால் கல்லூரிக்கான உரிமம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறுவதற்கும் பணம், கல்லூரிகளில் இடம் பெறுவதற்கும் பணம் என்று பணமே கல்விக்குத் தகுதியாக அமைந்துவிடுகிறது. அதை மாற்ற முயற்சிப்பவர்க்கு எதிராக ஒருகும்பல் சங்கம் வேறு அமைத்துக்கொள்கிறது. சட்டங்களிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டு அவைகளைத் தங்களுக்கு ஒத்திசைய வழக்குகள் பின்னப்படுகின்றன.
வைரமுத்து ஒரு கவிதையில் சொன்னார், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூன்று நான்கு வருடம் மாணவர்களைப் பதுக்கிவைத்திருந்து பின் பிதுக்கி வெளியே எறிந்துவிடுகின்றன என்று. அது எவ்வளவு உண்மை. இன்றைய மாணவர்களின் மனதில் விஞ்சி நிற்பது தொழில்நுட்பமோ அல்லது அறிவியலோ அல்ல; மாறாக கையாலாகத் தனமும், தன்முனைப்பற்ற தன்மையுந்தான். அதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு அவைகளில் சில,

  • தனியார் கல்லூரிகள், சுயாட்சிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மேலாண்மையைக் கண்காணிக்க ஒரு நடுவம் இல்லை.

  • பணியாற்றும் ஆசிரியர்களில் 60 விழுக்காட்டுக்கும் மேல் தகுதியற்றவர்கள் அல்லது திறனற்றவர்கள்; ஆதாவது படித்துத் தேர்ந்தவுடன் ஆசிரியரானவர்கள்.

  • கல்விமுறை மாணவர்களுக்கு கல்வியின்மேல் வெறுப்பை உண்டாக்குகிறதே ஒழிய கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதில்லை.

  • தேர்வுமுறை, மதிப்பீட்டு முறை சரியானதாக இல்லை. அது மாணவர்களை மனப்பாடம் செய்யத்தான் தூண்டுகிறதே ஒழிய புரிந்துகொண்டு தேர்வெழுத வாய்ப்பமைத்துத் தருவதில்லை.

  • ஒரு குறிப்பிட்ட பாடத்தைமட்டுமே நோக்கி மாணவர்களை நகர்த்துகிறது இந்தக் கல்விமுறை.

  • குறைவான் வருமானத்தில் இயங்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளாய் இருக்கும் பட்சத்தில் கூட சாதியடிப்படையில் இடவொதுக்கீடு கிடைக்காமல் பலர் ஒதுக்கப்படுகிறார்கள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளை தகர்த்தெரிவற்கான வழிகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் தனியார் கல்லூரிகள், சுயாட்சிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மேலாண்மையைக் கண்காணிக்க ஒரு நடுவம் இருக்குமேயானால் (AICTE மற்றும் UGC போன்றவை இதற்குத் தகுதியற்றவை ஏனென்றால் கல்லூரியிலிருக்கும் வசதிகளை, இவர்கள் உறுதிசெய்யும் முறை சரியில்லை) மாறாக, பெற்றோர்கள் சங்கம், ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள், தொழில் நிறுவனங்களில் இருக்கும் உயர்நிலை அலுவலர்கள், பொதுநலக்குழு அமைப்பினர் போன்றோர் இணைந்த குழுக்கள் நாடெங்கிலும் அமைக்கப்பட்டு அவைகளின் மூலமாக தரம் மற்றும் தகுதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறைந்த அளவு தகுதி மற்றும் வசதிகளில்லாத கல்லூரிகளின் உரிமம் அந்த ஆண்டு மறுக்கப்படவேண்டும். இதன் மூலம் ஓரளவு தேவையான வசதிகளை மாணவர்கள் பெறமுடியும்.

அடுத்ததாக வருகிறது ஆசிரியர்களின் தகுதி. வேறெங்கும் வேலைகிடைக்காத மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மாணவர்களே ஆசிரியர்களாக கல்லூரிகளில் பணியாற்ற வருகிறார்கள். இவர்களால் எப்படி அடுத்துவரும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கமுடியுமென்று தெரியவில்லை. மாறாக ஆசிரியப்பணியைத் தேடி பலரை ஈர்க்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அப்போதுதான் இப்பணிக்கான போட்டி நிலவும். போட்டி நிலவும்போது தகுதிமிகுந்த ஆசிரியர்களைக் கண்டுணர்ந்து பணியிலமர்த்த முடியும். அதற்கு ஆராய்ச்சிநடுவங்கள் ஒவ்வொரு கல்விச்சாலையிலும் அமைக்கப்படவேண்டும். அவைகளில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், அறிவியல் பற்றிய உண்மையான ஆராய்ச்சிகள் நடைபெற ஊக்குவிக்கவேண்டும். தொழில்நிறுவனங்களின் கூட்டுடன் இன்றைய தொழில் சிறப்புக்களை, நுட்பங்களைக் கருத்துக்களங்களின் மூலம் பகிர்ந்துகொள்ள வேண்டும். மாதமொரு கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும். அதில் பிரும்மாண்டம் என்கிற பகட்டுவிளம்பரங்களை விட கருத்தாய்வுகளில் அக்கறை செலுத்தப்படவேண்டும். ஆசிரியர்களின் அறிவையும் வளர்க்க அவர்களுக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஊதியம் வழங்கப் படவேண்டும்.

கல்விமுறையில் உள்ள குறைகள் களையப்பட்டு புதிய செய்திகள் கருத்துக்கள் மாணவர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தேவையற்ற பழமைகள் நீக்கப்பட்டு பாடத்திட்டம் 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு, மாணவர்களே ஆராய்ந்தறிந்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் முறை கொண்டுவரப்படவேண்டும். அப்போது மாணவர்களின் ஆர்வம் அதிகமாகும். கல்விச்சாலைகளில் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களின் மீது இரக்கமின்றி கடுமையான நடவடிக்கைகள் (ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை அவரை கல்விச்சாலையிலிருந்து நீக்கிவைக்கலாம்) மேற்கொள்வதன்மூலம் ஆர்வமற்ற மாணவர்கள் மற்றவர்களின் எண்ணங்களைச் சிதைப்பதைத் தடுக்கமுடியும். இதனால் அவர்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்று நினைக்கவேண்டியதில்லை. அப்படியொரு நிலை வருமேயானால் பின்னவர் யாரும் அந்தத் தவறைச் செய்யமாட்டார்.

அடுத்ததாக மதிப்பீட்டுமுறைக்கு வருவோம். தேர்வுக் கேள்விகள் எவையும் இதற்குமுன் எந்தத் தேர்விலும் கேட்கப்படாதவைகளாக இருக்கவேண்டும். முடியாத நிலையில் குறந்தது 50 விழுக்காடு கேள்விகள் இதுவரை கண்டிராத மற்றும் ஊகித்திராத கேள்விகளாக இருக்கவேண்டும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் தகுதி உறுதிசெய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற முறையில் விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். திருத்திய தாள்களை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இதன்மூலம் ஒளிவுமறைவற்ற முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ந்த ஆசிரியருக்கே அந்தப்பாடங்களின் தேர்வுத்தாள்கள் மதிப்பிடுவதற்காக வழங்கப்படவேண்டும். விடைகள் எப்படியிருக்கவேண்டுமென்ற சாவித்தாளை அப்படியே இருக்கிறதா என்று பார்த்து மதிப்பிடுதல் கூடாது. மாணவரின் சுயஎண்ணங்களுக்கும், புரிந்துகொண்டு கற்று தேர்வெழுதியமைக்கும் மதிப்பளிக்கவேண்டும்.

தற்பொழுது, கணினிசார் பாடங்களுக்கே அதிக ஆர்வத்தை ஊட்டிவளர்க்கிறது இச்சமூகம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? ஒவ்வொரு கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்போதும், தகுதி உறுதியிடப்படும்போதும் வளர்ச்சிபெறாத, அதிகம் கல்லூரிகளில் இடம்பொறாத பாடங்களும் அக்கல்லூரிகளில் இடம்பெற விதிகள் திருத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ECE, CSE, IT போன்ற பாடங்கள் மட்டும் இருக்குமாறு ஒரு கல்லூரி இருந்தால் கட்டாயம் Chemical Technology, Plastic Technology, Industrial Automation technology, Automobile Technology, Biotechnology, Biomedical, Bioinformatics மேலும் பல வளரவேண்டிய துறைகளில் இரு பாடங்களையாவது நடத்தி அவற்றில் மாணவர்களுக்கு அந்நிறுவனம் கல்வி அளிக்கவேண்டும்.

மதிப்பெண்கள் அல்லது நேர்முகத்தேர்வு மூலம் தகுதியுள்ளவர்களுக்கே கற்க இடம் வழங்கப்படவேண்டும். குறைவான வருமானத்திலிருப்பவராயின் சாதியைப் பாராமல் திறமைமிகுந்திருக்கும் மாணவருக்கு மானியம் வழங்கி அவரது படிப்புச்செலவுகளில் பெரும்பகுதியை அரசு ஏற்கவேண்டும். அரசு மானியங்களில் எத்தனையோ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு நமது இந்திய நாட்டின் மூலாதரமாகக் கருதப்படும் இந்த மனிதவளமேம்பாட்டிற்கும் திறமையான தொழில்வல்லுநர்களை உருவாக்கவும் செலவிட்டால் தவறில்லை. வேண்டுமானால் அவர்கள் படித்து வரும்போது மருத்துவர்கள் எப்படி கிராமங்களில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதுபோல அரசு பணியிடங்களில் குறைந்த வருமானத்துக்கு 2 ஆண்டுகள் பணியாற்றவேண்டுமென்று சட்டமியற்றலாம்.

இவையெல்லாம் செய்யப்படவில்லையென்றால் மனிதவளத்தில் பெருகிவரும் சீனாக்காரன் நம்மை இருக்குமிடம் தெரியாமலாக்குவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொடரும்....

குறிப்பு: நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? எனும் தொடர் மிகவும் மெதுவாக நகர்வதாகப் பலரும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நேரம் அதிகமாகத் தேவைப்படுவதால் முடிந்தவரை வேகமாக எழுதுகிறேன்.



கருத்துரைகள் (0)
கருத்துரைக்கவும்
உங்கள் தொடர்பு விவரங்கள்:
கருத்துரை:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:):grin;)8):p:roll:eek:upset:zzz:sigh:?:cry:(:x
Security
படத்திலிருக்கும் ஆங்கிலக் குறியீட்டுச்சொல்லை உள்ளிடவும்.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 21:53)