| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (5) - ஊழலும் கையூட்டும்
"நம் வேலை நடந்தால் சரி. யார் எக்கேடோ கெட்டுப்போனால் நமக்கென்ன?" என்ற எண்ணமும், குறைந்த வருமானத்திலும் நேர்மையால் மனமகிழ்வடையாமல் "இன்னும்... இன்னும்..." என்றெண்ணி அளவுக்கும் மிஞ்சி பணத்தினை நாடுவதாலும் மேலும் அதிவிரைவில் அதிக அளவு பணம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாலும் நம்மை அழிக்கும் கருவியாக வளர்ந்திருக்கும் ஒன்றுதான் கையூட்டு.
இரண்டு கையூட்டு மற்றும் ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல். இந்தக் கையூட்டின் காரணமாகத்தான் பணப்பதுக்கல் அதிகமாகிறது. கையூட்டின் மூலம் ஒருவர் பெறுகின்ற பணத்துக்கு அவர் வரிச்செலுத்தவேண்டிய அவசியமில்லை. இதைத்தான் நாம் கருப்புப்பணம் என்கிறோம்.
நாமென்னவோ தவறே செய்யாததுபோலவும், அரசியல்வாதிகள், அரசு உயர் அலுவலர்கள்தான் கையூட்டுப்பெற்ற பணத்தையெல்லாம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கிவைத்திருப்பதாகவும் கூறுபவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டிய செய்தியிது. அதற்கு அவர்கள் மட்டுமல்ல நாமும்தான் காரணமாக அமைந்திருக்கிறோம்.
நம்மூரில் வங்கிகளில் பணம் வைத்திருந்தால் நமக்கு வட்டிகிடைக்குமல்லவா? ஆனால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைக்க பணம்வைப்பவர்கள் சேவைப்பணம் கட்டவேண்டும். அப்படிப் பணத்தைச் செலவளித்து பணத்தைவைப்பதன் பயன் என்னதெரியுமா? அவர்களின் எந்தத் தகவலையும் அந்த வங்கி வெளியே சொல்லாது. யாரெல்லாம் பணம்வைத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்தவங்கிகள் வெளியிடாத சிறப்புக்காகத்தான் அந்தச் சேவைப்பணம். அவர்கள் பணத்தைப் பதுக்கிவைப்பதால் நம்நாட்டின் கடன் அதிகமாகி விலைவாசி உயர்வடைகிறது. பணவீக்கம் அதிகமாகிறது என்பதன் பொருள் இதுதான். நிதிச்சீர்கேடடைந்த நாடுகளிலெல்லாம், கட்டுக்கட்டாக பணம் எடுத்துச்சென்றுதான் காய்கறி வாங்குகிறார்கள். மெல்லிய ஒரு பத்து ரூபாய்த் தாளில் வாங்கவேண்டிய பொருளுக்கு ஒர்ரிரு கட்டுப் பணம் தேவைப்படுவதுதான் பணவீக்கம்.

கடந்த சில ஆண்டுகளில் நமது அவசியத் தேவைகளுக்கான செலவு எவ்வாறு உயர்ந்திருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி செய்துபாருங்கள். உங்களுக்கே விளங்கும். இரண்டு ரூபாய்க்கு அரிசியும் இலவசமாய் தொலைக்காட்சி தருகிறோம் பார்த்தே உருப்படாமல் போங்கள் என்கிற அரசாங்கம் இந்தக் கேடுகெட்ட இந்திய அரசாங்கம் நாம் எதுபோன்ற வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இலவசங்களைக் கொடுத்தே வார இதழும் மாத இதழும் நடத்தும் கேடுகெட்ட நிறுவனமும் நாம் அறிந்ததுதானே!
எடுத்துக்காட்டாகச் சொல்ல எத்தனையோ உண்டு. ஆனால் புலம்புவதால் நமக்கென்ன நன்மை! மக்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துக் காசுசேர்க்கும் கூட்டத்தை ஒழிக்க சரியான தலைவன் நம்மிடம் இல்லை. இதுவே கோடிகோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
ஊழலாலும் கையூட்டாலும் எத்தனையோ கேடுகள் நம் நாட்டை ஆட்டிப்படைக்கின்றன. நமக்கு ஒரு சாலை உருப்படியாகப் போடத் தெரிவதில்லை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி திட்டமிட்டுச் சேமித்து மின்வெட்டில்லாத மின்சாரத்தை மக்களுக்கு வழங்கத் தெரியவில்லை. எத்தனைமுறை மினவர்கள் கடலில் மீன்பிடிக்கசெல்லும்போது இலங்கை இராணுவம் கடத்தித் தாக்கினாலும் நம் நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தரத் தெரியவில்லை. போதாக்குறைக்கு இராணுவத்தை இலங்கை இராணுவத்துக்கு உதவிக்கு அனுப்பித் தமிழ்மக்களைக் கொன்று குவிக்கும் கொடுமை வேறு. இவையெல்லாம் தாண்டி மும்பைத் தாக்குதலுக்கு திருட்டுத்தனமாக இந்தியா வந்த பாகிஸ்தான் விருந்தாளி கசாப்புக்கு கசாப்புக்கடையில் கறிவாங்கிச் சமைத்துக்கொடுக்கும் அரசாங்கம் வேறெங்கு காணமுடியும்.
இவர்களை ஒதுக்குங்கள் என்று நாம் சென்ற பகுதியில் சொல்லியிருந்த போது நாம் சொன்ன கருத்தைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், ஒதுக்குங்கள் என்றால் எல்லோரும் 49-ஓ என்ற சட்டத்தின் விதியைப் பயன்படுத்தி எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவியுங்கள் என்பதே தவிர கண்டுகொள்ளாமல் போங்கள் என்பதல்ல.
இனிமேல் வாக்களிக்கப் போகாதவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்கள் தவறாமல் 49-ஓ விதியைப் பயன்படுத்துங்கள். நாம் யாரென்பதை இவர்களுக்குக் காட்டியே ஆகவேண்டும்.
(வெள்ளையாகும் வரை) வெளுக்கும் வேலை தொடரும்....
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2009 20:54)