| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (4) - அரசியல்: ஊழல் அரசியலாளர்களைத் தனிமைப் படுத்துங்கள்.
மக்கள் திறன் என்று கூவிக்கொண்டு ஊழலும் கொடுமைகளும் செய்யும் அரசியலாளர்களை வெறுத்து ஒதுக்குங்கள். அவர்களைத் தனிமைப்படுத்துங்கள். நம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களே அரசியலாளர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று தன்னைத்தானே பறைசாற்றிக்கொள்ளும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது. நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரமாக இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம், வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தோம் என்று விளம்பரம் வருகிறதே, அதற்குக் கீழே பார்த்திருக்கிறீர்களா? அதில் வெளியீடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை தமிழக அரசு என்றுதான் இருக்கும் அல்லது அரசின் வேறுதுறையாக இருக்கும்.
இந்த விளம்பரத்துக்கு ஒருநாளைக்கு அந்த செய்தித்தாளுக்குத் தரவேண்டிய பணம் எவ்வளவு தெரியுமா? முழுப்பக்கத்துக்கும் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை (பக்கத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து) அதெல்லாம் அரசுப்பணம் தான். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துவிட்டு, சமைக்கப் பயன்படும் அனைத்துப்பொருட்களின் (சமையல் எரிவாயு, எண்ணை உட்பட) விலையையும் ஏற்றிக்கொண்டுவிட்டால் மக்களிக்கு நல்லதுசெய்ததாக ஆகிவிடுமா?
காசின்றி வண்ணத் தொலைக்காட்சியைக் கொடுத்துவிட்டு படம்பார்க்க கம்பிவடத் தொலைக்காட்சிக்கு (Cable TV) மாதம் இருநூறு வாங்கிக்கொண்டால் அது எப்படி நல்லது செய்ததாக ஆகும். ஆனால் இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல் இருக்கிறதே அதில் அவர்களுக்கு பலவிதங்களில் சாதகமான செயல்கள் இருக்கின்றன. யார் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியைத் தருகிறார்களோ அவர்கள் நடத்தும் கம்பிவடத் தொலைக்காட்சிக்கு வருமானம், அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வருமானம் (அதிக மக்கள் பார்ப்பதாக விளம்பரதாரரிடம் அதிகப் பணம் கேட்கலாமல்லவா?), அந்த அலைவரிசைகளில் வரும் அசிங்க அருவருப்புக்களை வாயைப் பிளந்தபடி பார்க்கும் மக்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று அதிலேயே மூழ்கிக் கிடப்பதால் முட்டாளாகி இவர்கள் நடத்தும் சுயமகிழ்வு அரசாங்க ஊழல்களை எதிர்ப்பவர்கள் எண்ணிக்கை குறையும். இப்படி பலவிதங்களில் இவர்களுக்கு சார்பாக இருக்கும் என்பதுதான் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் திரைமறைவு நாடகம்.
இன்னொருபுறம் இந்த ஊழலாட்சியை எதிர்க்கும் திறன் எதிர்க்கட்சிக்கும் கிடையாது. அவர்கள் வேறுமாதிரி. மேடையேறிவிட்டால் இலங்கைத் தமிழரைக் காக்க இங்கிருந்து பட்டாளத்தை அனுப்புவோம் என்று உளறிக் கொட்டுகிறார்கள். இந்தியப் பட்டாளம் போய் இலங்கை பட்டாளத்துடன் சண்டையிட இலங்கைக்குள்ளேயே போகுமாம் அதைப்பார்த்து இலங்கைப் பட்டாளம் பூப்பறித்துக் காதில் வைத்துக்கொள்ளுமாம். இவர்களின் ஆட்சிக்காலத்தில் தற்போதைய ஆளுங்கட்சிக்காரர்களே பணத்தைக் கொடுத்து கம்பிவடத் தொலைக்காட்சி (Cable TV) நடத்தக் கூட்டுவைத்துக்கொண்டவர்கள்தான். பாகிஸ்தானுக்கு உதவிய அமெரிக்கா இப்போது தீவிரவாதத்தால் அழியக்காத்திருப்பதைப் போல, இவர்கள் வளர்த்துவிட்ட பாம்புதான் பெருநகரங்களில் செயல்படும் கிழவரின் பேரன் நடத்தும் கம்பிவடத்தொலைக்காட்சி. அந்த ஆட்சி இருந்தபோது தன் தொழிலுக்காக எதிர்க்கட்சிக்காரரிடமே கூட்டுவைத்து (ஒரு பெருந்தொகையினைத் தள்ளிவிட்டால் போதுமல்லவா, என்ன சொல்லப்போகிறார்கள்) குடும்பத்தொலைக்காட்சி நடத்தித் தமிழகத்தில் வேரூண்றிக்கொண்டார். ஒன்றா இரண்டா கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட அலைவரிசைகள்.
இதையெல்லாம் அறியாமல் மக்களும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நடிகைகள் உறித்த கோழி ஆட்டிறைச்சிகளாய் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தபடியே தூங்கிப்போகிறார்கள். கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் சொன்னார் என்று ஓர் இளைஞனிடம் எடுத்துச் சொன்னால் அவன் கனவில் யாரைக் காண ? நமீதாவையா? நயன்தாராவையா? என்று கேட்குமளவுக்கு எக்காளம் போயிருக்கிறது. அந்தக் கும்பல் இப்போது திரைப்படம் வேறு தயாரிக்கிறார்கள்; எடுக்கும் படத்தில் பெண்களை அப்படி தாழ்த்திக்காட்டுவது மனக்குமுறலை வரவழைக்கிறது. 
அவர்கள் எடுத்த ஒரு திரைபடத்தில் கதையரசியை (தம்மண்ணா) முதன்முதலில் அறிமுகம் செய்யும் போது விலைமகளாகக் கதையரசனுக்குத் (சூரியா) தோன்றுகிறது. அதற்கான சூழல்களும் அங்கே உருவாக்கப் படுகின்றன. எடுத்ததெற்கெல்லாம் பெண்கள் முன்னேற்றம் என்று பேசும் பொழுதுபோக்குச் சங்கங்கள் இந்தமாதிரி படங்களைப் பார்த்துத் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
அடுத்து இந்த அரசு செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்ன தெரியுமா? தமிழைச் செம்மொழியாக்கியிருப்பதாம். தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் இந்தத் தளத்துக்குச் சென்று பாருங்கள். புவியெங்கிலும், ஏன் ஆங்கிலநாடுகளில் நடத்தும் தமிழிணையத் தளங்கள் கூட தமிழில் ஒருங்குறி (Unicode) அமைப்பைச் செயல்படுத்தியிருக்கும்போது பலகோடிகள் நிதி ஒதுக்கி நடத்தும் தமிழிணையப்பல்கலைக் கழக இணையதளம் இன்னும் எழுத்துருக்களைச் சார்ந்திருப்பது, பழங்கால இணைய தளங்களைப் போல் இருப்பது தமிழ் மொழி செம்மைப்பட்டிருப்பதற்கான அடையாளமா? அந்தத் தளத்தில் அகராதிகள் பக்கத்தைச் சொடுக்கினால் (இங்கே பார்க்கவும்) ஏதாவது ஒரு அகராதியிலாவது நாம் தேடும் வார்த்தை கிடைக்கிறதா? யாருக்கும் பயனற்ற இந்த இணையதளம் இருந்தென்ன பயன். ஆங்கிலத்தை அப்படியே கருத்தின்றி மொழிபெயர்ப்பதுதான் தமிழ் இந்த அரசு மொழிக்குச் செய்யும் நன்மையா? இங்கே பாருங்கள், பெட்டிக்குள் இருக்கும் எழுத்துக்களை அழிப்பதற்கு Clear என்ற ஆங்கில வார்த்தை பயன்படும் ஆனால் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பதாக நினைத்து 'சுத்தம்' என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள். முதலில், சுத்தம் என்பதே தமிழ் வார்த்தையில்லை 'தூய்மை' என்பதே அழகான தமிழ் இந்த இணையப் பல்கலைக்கழகம் எப்படி மக்களுக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்து நாமெல்லாம் தமிழைக் கற்றுப் பயன் பெறுவது. இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? இந்தத் தளம் மேன்மைசெய்யப்படாமல் (update) ஏன் அழிந்துகொண்டிருக்கிறது என்று யாராவது கேட்பாருண்டா? இதை எதிர்த்து நான் இந்த பக்கத்தில் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் சொல்லுங்கள்.
தமிழகத்தை ஆண்ட ஆளுகின்ற கட்சிகள் எல்லாம் ஊழலைத் தின்று வளர்ந்தவைதான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் இவர்களையெல்லாம் குற்றஞ்சாட்டிக் கொண்டு எங்களுக்கும் வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு மற்றும் பல கும்பல்கள் கிளம்பிவிட்டன. இவர்கள் வந்து ஒன்றும் சாதிக்கப்போவதில்லை, திரும்பவும் கொள்ளையடிக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் இந்தக் கட்சிகளில் இணைந்திருப்பவர்கள் ஒன்றும் புதிதாக அரசியல் படித்துவந்த இளைய தலைமுறைச் சிறார்கள் இல்லை. வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து இங்கு வந்து இணைந்தவராகத்தான் அதிகமிருப்பர். இந்த உண்மை தெரியாமல் நாமும் ஓட்டுக்களைப் பிரித்துப் போட்டு அடுத்த தேர்தலில் அவர்களின் கூட்டுக்கு விலையேற்றம் செய்துவிடுகிறோம். அவர்களும் யாரை எதிர்த்து ஓட்டுக்கள் பெற்றார்களோ அவர்களிடமே எங்கள் கட்சிக்கு இவ்வளவு ஓட்டுக்கள் இருக்கின்றன, எனவே இவ்வளவு பணம் கொடுத்தால் கூட்டு வைத்துக் கொள்கிறோம் என்று விலைபேசி வருமானம் பார்க்கிறார்கள்.
எனவே அரசியலாளர்களை வெறுத்து ஒதுக்குங்கள் அவர்களைத் தனிமைப்படுத்துங்கள். ஒட்டுமொத்த மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தாடும் இவர்கள் ஒழிக்கப்பட்டால் நம் வாழ்வு சிறக்கும்.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 10:17)