| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (3) - தூய்மை
நாள்தோறும் காலை எழுவதில் தொடங்கி துயிலப்போகும் வரை நம் செயல்களைத் தூய்மையாக எத்தனை விழுக்காடு செய்கிறோம் என்று கணக்குப்பார்த்தால் பலருக்கு 20 விழுக்காட்டுக்கும் குறைவே இருக்கும். இந்தப் புதுமை புவிவாழ்வில் பல்துலக்க மறப்பவர்கள் கூட உண்டு என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதுதல்லவா...? ஆனால் இதுதான் உண்மை.
சுயதூய்மை
காலை எழுந்தவுடன் தூய்மையான தண்ணீரை ஒரு முழுச் செம்பில் நிரப்பி அருந்தவேண்டும். இதனால் உடல் தூய்மையாகிறது. தலைக்குப் நீர்ம வழலையிட்டுத் (shampoo) தேய்த்துக் குளிப்பது மிகவும் இன்றியமையாததாகும். பற்பசை கொண்டு தேய்ப்பது மிகவும் தேவையானது. பற்களை மேலும் கீழும் மாற்றிமாற்றித் துலக்குவது மிகவும் தேவை.
காதுகளில் பாதுகாப்புக்காக உருவாகும் மெழுகுபோன்ற பசையைப் பஞ்சிடப்பட்ட குச்சி (buds) வைத்துச் தூய்மைப்படுத்துங்கள். கால்களில் மற்றும் கைகளில் நகங்களை வெட்டிப் பின் டெட்டால் திரவம் கொண்டு கழுவுவது அவசியமாகிறது. முடிந்தவரை கைகழுவும் திரவம் (Liquid Handwash) வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பலவகை உண்டு மணத்துக்காக இருக்கும் திரவங்களைத் தவிர்த்து கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துவாங்க வேண்டியது தேவை.
மூக்கில் சளித்திரவம் வடிவதாலும் அதனால் உண்டாகும் கட்டிப்பட்ட சளியையும் தூய்மையாக்கிக் கைகளைக் கழுவிக்கொள்வதும் தேவை. தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மேலும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.தோலை தூய்மையாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீர் மற்றும் வழலை (Soap) கொண்டு ஓரிடம்கூட விடுபடாமல் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் உணவுகள் தூய்மையற்றவைகளாக இருக்குமென்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியும். தவிர்க்கமுடியாத நேரங்களில் கடையுணவை உண்டுதான் ஆகவேண்டிய நிலையிருக்கலாம். வீட்டுமுறையில் உணவு சமைக்கும் விடுதிகளில் உண்ணமுயல வேண்டும். இதற்கு முன்னர் வந்த 2ம் பகுதியில் உறுதியாக இறைச்சியைத் தவிர்த்துவிட்டோம் என்று உறுதிகொண்டுவிட்டதால் இறைச்சியைத் தவிர்ப்பதை நாம் இந்தப் பகுதியில் சொல்லவேண்டிய தேவையிருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
ஆர்பிட் எனும் மெல்லும் சுயிங்கம் வாங்கி வாரமிருமுறை எல்லாப் பற்களாலும் இரண்டு மணிநேரமாவது நன்கு மென்று பற்களை பற்சிதைவிலிருந்து காத்துக்கொள்ளவேண்டும். பிறகு தவறாமல் அதனை ஒரு காகிதத்தில் மடித்து அப்புறப்படுத்தவேண்டும். கண்ட இடத்தில் உமிழ்ந்துவைக்கவோ அடுத்தவர் மிதிக்கும் இடத்தில் போட்டுவைக்கவோ கூடாது.
கழிவறைக்குச் சென்றுவரும்போது தவறாமல் வழலை(Soap) அல்லது டெட்டால் திரவங்கொண்டு கைகள் மற்றும் கழிவுறுப்புக்களைக் கழுவுதல் இன்றியமையாததாகும். அணியும் துணிகள், படுக்கை விரிப்புக்கள் முதலானவற்றை துவைத்துப் பயன்படுத்துவது தேவை.
சமையலறையில் பயன்படும் துணிகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளப்பட வேண்டும். குப்பைக்கூடை வாங்கி வைத்துக்கொண்டு குப்பை போட்டுவைத்தால் மட்டும் போதாது, அதிலுள்ள குப்பைகளைக் கொட்டியதும் கிருமிஎதிர்ப்புத் திரவங்கள் கொண்டு கழுவிப்பயன்படுத்துதல் வேண்டும். வீட்டினை அடிக்கடி மெழுகித் தூய்மையாக்கல் வேண்டும்.
புறந்தூய்மை
நம்மை நாம் தூய்மையாக வைத்துக்கொள்வது எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை நம்மைச்சார்ந்த சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது. வீட்டின் கழிவுநீர்ப்பாதையில் அடைப்பு இருக்கிறதா என்று பார்த்து பொதுக்கழிவுநீர்ப்பாதைக்கு சென்று சேருமாறு செய்துகொள்வது அவசியம். கழிவுநீர் மட்டுமல்ல நீர் நமது வீட்டினைச் சுற்றி எங்கு தேங்கினாலும் கொசுக்கள் உருவாவதற்கான வாய்ப்பு 100 விழுக்காடு ஏற்படுகிறதென்பதை மனதிற் கொள்ளவும்.
நம்மில் பலருக்கு செல்லுமிடமெல்லாம் துப்பும் வழக்கமிருக்கும். இதுபோல ஒரு கெட்டபழக்கம் இருப்பவர்களைப் பார்த்தால் சாலையிலும், வாழ்விடங்களிலும், சாலையோரப் பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கடைகளின் வாயில்களிலும்
துப்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களை நாம் துப்பிக்கெட்டவர்களென்றோ அல்லது துப்பிக்கெடுப்பவரென்றோ அழைக்கலாம். இவர்களைப்பற்றி நமது பனித்துளிகளில் கவிதையொன்றை எழுதினோம் (பார்க்க: உமிழ்ந்து கெடுத்தோம்). சாலையில் வண்டிகளில் சென்றுகொண்டிருக்கும்போதே உமிழ்வார்கள். பின்னால் வண்டிகளில் யாரேனும் வருகிறார்களா? அவர்கள் மீது தெறிக்குமா? சாலையில் நம்மைபோல நாற்பது பேர் உமிழ்ந்துவைத்தால் அதனால் நம் சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகும் என்றெல்லாம் இவர்களுக்கு நினைக்க நேரமில்லை.
சிலர் அடுக்குமாடிப் படிக்கட்டுகளில் கூட உமிழ்ந்து வைப்பார்கள். இப்படி உமிழ்ந்த ஒருவரைக் கையும் களவுமாகப் பிடித்து ஓங்கி அப்பியிருக்கிறேன். இப்போது அவர் என்னால் திருந்தியிருக்கவேண்டும் அப்படியிருந்தது எனது அறை. இப்படி எல்லோரும் செய்து பாருங்கள், அவர்கள் திரும்ப அதைச்செய்வார்களா என்று. இதிலெல்லாம் மனிதாபிமானம் என்று சொல்லப்படுகின்ற இறக்க எண்ணங்களுக்கு இடம்வைத்தலாகாது.
சாலையில் ஒதுக்குப்புறமான இடம்கண்டு அங்கு சிறுநீர்கழிப்பது, கையில் கிடைக்கும் குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுவது இப்படி பலவகையிலும் நாம் இந்தப் புவியை மாசுபடுத்திக்கொண்டிருப்பதை எப்போது தவிர்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை. புவி மாசுபடுவதால் பல்வேறுவிதமான நுண்ணியிரிகள், கிருமிகள் உருவாவதற்கு நாம் சிவப்புக்கம்பளம் விரிக்கிறோம். இதனால் புதிது புதிதாக தொற்றுநோய்கள் உருவாகின்றன.
நம்மைத் தற்காத்துக்கொள்ள இவைபற்றிய எச்சரிக்கை எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தியிருக்கவேண்டுவது மிகவும் இன்றியமையாததாகிறது.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:16)