கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

கம்பர் பாடிய மாதப்பூர் வேலன்

Jun 19, 2012

என் தந்தை அடிக்கடி எனக்கு சிறுவயதில் கதைகள் சொல்லுவார்.

அப்படி அவர் சொன்ன கதைகளில் நகைச்சுவையான ஒன்று!

கம்பர் ஒருமுறை கோயமுத்தூரில் மாதப்பூர் என்ற ஊர் வழியாகச் சென்றாராம். அப்போது மாதப்பூரில் ஒரு மரத்தடி நாவிதனிடம் தனது தாடியை மழிக்க வேண்டினாராம். அந்த நாவிதன் தன்னிடம் வந்திருக்கும் வாடிக்கையாளர் கம்பர் எனும் பெருங்கவி என்பதை உணர்ந்துகொண்டானாம்.

ஆர்வக்கோளாறினாலும் கவியரசர் கம்பரைக் கண்ட பதட்டத்திலும் கையெல்லாம் நடுங்கியதாம் அவனுக்கு.  தன்வேலையை ஆரம்பித்து செய்து முடித்ததும் கம்பரைப் பார்த்து ஏக்கமாய்க் கேட்டானாம், “சாமி நான் ரொம்ப பெரிய ராசாவோ செல்வந்தரோ இல்லை என்னைப் போன்ற எளியோரைப் பற்றியெல்லாம் பாடுவீர்களா?”

கம்பர் அதற்கு “வேலா… அப்படியெல்லாம் சொல்லாதே! நீயும் நானும் மனிதர்களே… என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார். பிறகு தொடர்ந்து உன் கூலியென்ன சொல் என்றிருக்கிறார். அதற்கு அந்த நாவிதன், “என்னைப் பற்றி ஒரு பாட்டு பாடுங்க சாமி! அதுவே நீங்கள் தரும் கூலியாக நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றானாம்.

கம்பருக்கு இந்த நாவிதனின் இலக்கிய ஆர்வத்தைக் கண்டு வியப்பாயிருந்ததாம். அப்போது ஒரு பாடல் அவன்மேல் பாடியிருக்கிறார்….

கத்தி கருக்கொக்கும்
கத்தரி பனங்கையொக்கும்
மயிரிருக்கத் தோலறுத்த
மாதப்பூர் வேலா
உன் வயிற்றுப்பாட்டுக்கு
என் வாய்ப்பாட்டா வழிசொல்லும்?

அவனுக்கு ஒரே மகிழ்ச்சி….. தன்னை நக்கலடித்துப் பாடியிருக்கிறார் கம்பர்பெருமான் என்று தெரியாமல் ஆடிப்பாடிக் கூத்தாடி எல்லோரிடமும் கம்பர் என்னைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டாடியிருக்கிறான்.

பாடலுக்குப் பொருள்:

கத்தி கருக்கொக்கும் – சவரக் கத்தியானது கருக்கு அருவாள் (பயிர்வெட்டப் பயன்படும் பற்கள் கொண்ட அருவாள் எனும் கருவி) போன்றிருக்கிறது.

கத்தரி பனங்கையொக்கும் – கத்தரிக்கோலானது பனைமரக் கிளைபோலிருக்கிறது

மயிரிருக்கத் தோலறுத்த – மயிர் முகத்தில் அப்படியே ஒட்டியிருக்க தோலோடு சேர்த்து வெட்டியெடுத்தாயே

உன் வயிற்றுப் பாட்டுக்கு என் வாய்ப்பாட்ட வழிசொல்லும்

உன் வயிற்றுக்காக நீ உழைக்கிறாய் நான் பாடிய வாய்ப்பாட்டா உன் பசியைப்போக்கப் போகிறது? காசுக்குமாற்றாக பாடல்பாடச் சொல்கிறாயே!

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

2 பதில்கள்

  1. kumarapalayam rajendran super naggal serapagaullathu nandru

  2. v.Suresh /

    Ethu padinalum kamban padiyathayitre

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>