நிறுவனப் பணியில் நிம்மதியிழப்பவரைக் குறிவைக்கும் கும்பல் - ஓர் எச்சரிக்கை

பன்னாட்டு நிறுவனங்களில், மென்பொருள் துறையில், அதிகநேரப் பணியில் இருப்பவர்கள், குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், மேலும் தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திப்பவர்கள் எல்லோரும் படிக்கவேண்டிய விழிப்புணர்வுக் கட்டுரை இது.

கவனிக்க: உண்மையில் மனவளக்கலை, வாழ்வியல் பற்றிப் புகட்டும் இலாபநோக்கமற்ற நிறுவனங்களைப் பற்றி இந்தக்கட்டுரையில் சொல்லப்படவில்லை. மேலும் இதில் தொடர்புடைய நிறுவனம் மற்றும் அது தொடர்புள்ள மனிதர்களுக்கு தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக நினைத்தால் அதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல. ஏனெனில் இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் பல்வேறு தளங்களில் வெளியான, மற்றும் (பாதிக்கப்பட்ட) பலரின் கருத்துக்களை செறிந்தே எழுதப்பட்டுள்ளது.

ஆற அமர ஒரு கருத்தை நம்மிடம் விளக்கினால் அது உண்மையா பொய்யா என்றுகூடப் பாராமல் நம்மில் பலர் அப்படியே நம்பிவிடுவோம். அதுவே நாம் மனநிம்மதியின்றி பல இன்னல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் போது சொன்னால் நம்பாமல் இருக்க முடியாது.

இதற்குமுன்னர் வணிகத்தை போர்வையாகப் போர்த்திக்கொண்டு அலையும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (Multilevel marketing) பற்றி மலைச்சரிவு என்ற கட்டுரையில் என் குரல் வலைப்பதிவில் தெளிவாகப் படம்போட்டுக் காட்டியிருந்தேன். இப்போது தோண்டத் தோண்ட வெளிவரும் பிணக்குவியல் போல மனவள க்கல்வி என்ற முறையில் பணத்தைப் பலரிடமிருந்து கொள்ளையடிக்கும் கூட்டம் ஒன்று பல ஆண்டுகளாக உலகமெங்கும் வலம் வருகிறது என்று தேடலில் தெளிவாகிறது.

தி ரிக் எ ராஸ் என்ற பயன் நோக்கமில்லாத(Non profit) ஆராய்ச்சி நிறுவனம் (The Ross Institute)  ஏமாற்றும் குழுக்களைப்பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் ஊடகங்களுக்கும் கல்விகற்கும் மாணவர்களுக்காகவும் மிகப்பெரிய ஆவணக் குவியல்களை வைத்துள்ளது.www.rickross.com என்ற தளத்தில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் குவித்துவைத்துள்ள ஆவணங்கள் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட பலரின் கருத்துக்கள், இந்த பயன் நோக்கமற்ற நிறுவனம் அந்தந்த ஏமாற்றும் நிறுவனங்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் தொழிலைக் கெடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு தி ரிக் எ ராஸ் நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், அவைகள் எதனால் செல்லுபடியாகாமல் போனது என்பதுபற்றிய விளக்கங்கள் முதலானவை அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

 குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இந்தியாவில் பெருநகரங்களில் இப்போது ஆரம்பித்து மெதுவாக மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ள ஒரு நிறுவனம் லேண்ட்மார்க் கல்வி நிறுவனம் (Landmark Education Corporation) ஆகும். இது இப்போது குறிவைத்து வேட்டையாட ஆரம்பித்திருப்பது யாரைத் தெரியுமா? மென்பொருள் மற்றும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் பணியில் இருக்கும் இந்தியர்களைத்தான். ஏனெனில் இவர்கள் தான் வேலைப்பழு, மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் துவண்டு போயிருக்கிறார்கள்.

இவர்கள் வகுப்புக்களில் கலந்துகொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அன்புக்கட்டளை என்ன தெரியுமா?

 ஒன்று: விவாகரத்தானவர்கள் மீண்டும் இணைகிறார்கள் எங்கள் வகுப்புக்களால், குடும்பத் தொல்லைகள் தீருகின்றன எங்கள் வகுப்புக்களால், அலுவலகத் தொல்லைகளைச் சமாளித்துப் பதவி உயர்வு பெறுகிறார்கள் இந்த வகுப்புக்களில் பங்கெடுப்பதால் என்றெல்லாம் சொல்லி அவர்கள் நண்பர்களைச் (குறைந்தது 2 பேரையாவது) சேர்த்துவிடவேண்டும்.

இரண்டு: தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புக்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

 இது போக தி ரிக் எ ராஸ் என்ற தளத்தில் சொல்லப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் படித்தால் மனம் பதைபதைக்காமல் இருக்குமா? ஒரு சிலர் இந்த நிறுவனங்களின் அடிமைகளாகவே ஆகிவிட்டதாகக் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட மல்டி லெவல் மார்கெட்டிங் என்றழைக்கப்படும் மலைச்சரிவு வியாபாரம் போலத்தான் இதுவும். இந்த வகுப்புகளில் சேர்ந்துகொள்ளச் சொல்லி நண்பர்களை, சொந்தங்களை, குடும்பத்திலுள்ளவர்களைக்கூட இழந்திருப்பவர்கள் உலகெங்கும் ஏராளம் என்று அந்தத் தளத்திலுள்ள பதிவுகளில் தெரிகிறது.

 சரி இந்த வகுப்புக்களில் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் இராமகிருஷ்ண பரமஹம்சர், வேதாத்ரி மகரிஷி, சுவாமி சுகபோதானந்தா, ஸ்ரீ ரவி சங்கர், பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினம், சுகிசிவம், இறையன்பு மற்றும் பலர் சொன்னதைவிட வாழ்வியல் செய்திகள் ஏதும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. உலகெங்கிலுமுள்ள மக்களைச் சந்தித்து பெற்ற கருத்துணர்வுகளை வைத்து, பார்ப்போரைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட படக்கலவைகளைக் காட்டி வலைவீசுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர்கள் வாங்கும் பணம் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாயில் ஆரம்பித்து (முதல் வகுப்புக்கு) முப்பதாயிரத்துக்கும் மேலாக வளருகிறது. இதில் பல இலட்சங்களை இழந்த குடும்பங்கள் பணத்தைமட்டுமல்லாது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காகப் பணியாற்றியவர்களின் மாதவருமானத்தைக் கூட தரமால் ஏமாற்றியிருப்பதாக பல வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

 இந்த வகுப்புக்கள் கலந்துகொள்ளும் அப்பாவிகளின் மனதை வசியம் செய்து ஆக்கப்பூர்வமாக இருப்பதாகத் தோன்றவைக்கும். பின் அரிப்பெடுத்தவன் சொறிந்தால் இன்பமாக இருப்பதைப் போல அவனை தொடர்ந்து சொறியச் சொல்லும் நிலையை இந்த வகுப்பில் கலந்துகொள்ளும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் பின் அதுவே நம்மைப் பயித்தியமாக்கி சொறிந்த இடம் புண்ணாகும் நிலையை நமக்கு ஏற்படுத்துகிறது.

 புத்தகம் படிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிச்சென்றும் அதைப் பின்பற்றாத நம் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிய வாய்ப்பிருக்கிறது பார்த்தீர்களா? புவிப்பொது மறையாகக் கருதப்படும் திருவள்ளுவர் சொல்லாத கருத்தா, அறிவுரையா நாம் வேறுஇடங்களில், நிலைகளில் பெற்றுவிட முடியும்.

 உங்களுக்கு வாழ்வில் தீராத துன்பமா, உங்கள் மனம்தான் உங்களுக்குத் துணை. திருவள்ளுவர் இதைத்தான் துன்பத்துக்கு உன் மனமே துணையாகாத போது வேறுயார் துணையாக இருக்கமுடியும் என்று கூறியிருக்கிறார். எம். ஜி. ஆர் திரைப்பாடல்களில் கூட நமக்குத் தேவையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீவாழலாம்” இந்தப்பாடலை கருத்தாகக் கேட்டுப்பாருங்கள்.

 மன அழுத்தமுள்ளவர்கள், சில ஆயிரங்கள் பணம் செலவானாலும் பரவாயில்லை நம் இந்திய நாட்டின் யோகா, தியான வகுப்புக்களைக் கற்று மன அமைதி கொள்ளுங்கள். மேலை நாடுகளிலெல்லாம் நமது யோகா புகழ்பெற்றுவரும் வேளையில் நாம் ஏன் வேறு வழிகளை நாட வேண்டும். மேலும் புத்தகங்கள் பல வாழ்வியல் கருத்துக்களை நமக்குப் புகட்டும்போது ஏன் நாம் அவைகளை வாங்கிப்படித்து இன்புறக்கூடாது என்றும் தோன்றுகிறதல்லவா?

அன்புகூர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தக் கட்டுரையைப் படிக்கச் சொல்லி அவர்களையும் எச்சரிக்கை செய்யுங்கள்.

பார்க்க: http://www.rickross.com/groups/landmark.html

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>