தேநீர்க்கடையை மூடு.... மது விற்கட்டும்!

“மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்குக் கேடு”

எவ்வளவு சிறிய எழுத்துக்களில் இந்த வாசகங்களை எழுத முடியுமோ அவ்வளவு சிறிய எழுத்துக்களில் எழுதிவைத்துவிட்டு நாட்டைச் சீர்குலைக்க ஒரு சதியை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் பயணிக்கிறபோதெல்லாம் பாருங்கள், எங்கெல்லாம் கூட்டம்கூட்டமாக மக்கள் திரள் இருக்கிறதோ அங்கே நீங்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது மதுக்கடை என்று. விவசாயிகள் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்ககூடாது என்று அரசாங்கம் சொல்வது சரியானதாக இருந்தாலும், இதனைச் சொல்கிற தகுதி அரசாங்கத்துக்கு இல்லை.

கோவையிலுள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இரவு 10:50 மணிக்கு நான் பேருந்திலிருந்து இறங்கிவர காலம் வாய்த்தது. அப்போது

நான் கண்ட காட்சி என் மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது, இறைவன் நமக்கு கண்களைக் கொடுத்த போது இமைகளையும் சேர்த்துத்தானே கொடுத்திருக்கிறான். அந்த இமைகளைப் படுத்தி என் கண்களை மூடிக்கொள்ளச்செய்ய முடிந்ததே தவிர, என்னால் ஏதும் பேச வாய்வார்த்தைகள் வரவில்லை.மதுக்கடை

ஒரு காவல்துறை உந்து வந்து நின்றது, அங்கிருந்த தேநீர்க்கடைகளில், இரவுநேரப்பயணம் மேற்கொள்ளும் மக்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர். ஒரு காவலர் வண்டியிலிருந்து குதித்து அங்கிருந்த அத்துனை தேநீர்க்கடைகளையும் மூடுங்கள் என்று உத்தரவிட்டபடி இருந்தார். அருகிலிருந்த மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கமாய் ஈயாய் மொய்த்தபடி இருந்தது. அவர் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. தேநீர்க்கடை உரிமையாளரைக் கேட்டேன், “என்ன இது? மதுக்கடைகளைத் திறந்து வைத்திருந்தால் தவறில்லையா? தேநீர்க்கடைகள் மூடப்படவேண்டுமா?” என்று கேட்டேன்.

அதற்கு அந்தத் தேநீர்க்கடை உரிமையாளர் சொன்னார், “அதையேன் கேக்குறீங்க! இந்தக் கொடுமைக்கு வாராவாரம் இவர்களுக்கு 300 பணம் ஒத்துக்கீடு வேறு!”. எனக்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டது. வாரம் 300 பணம் கையூட்டுப் பெற்றுக்கொண்டால் ஒரு 30 கடைக்குக் கணக்குப்பார்த்தாலே வாரம் 9000 பணம் ஆகிறது. வாரம் 9000 பணம் என்றால் மாதம் 9000 x 4 = 36,000 பணம் தேநீர்க்கடைகளிலேயே கையூட்டுப் பெறுகிறார்களே. பத்துப் பேர் இதைப்பகிர்ந்து கொண்டால் மாதம் 3,600 பணம் ஒவ்வொருவருக்கும் மாதவருமானமாய் தேநீர்க்கடைகள் மூலம் மட்டுமே வருகிறது.

இதிலே இன்னொரு கருத்தும் புலப்பட்டது, மதுக்கடைகளை மக்கள் தொல்லையின்றி நடத்தத்தான் இப்படியொரு உத்தரவோ? குடிமக்கள் ‘குடி’யைக்கெடுக்காமலிருக்க காவல்துறைப் பாதுகாப்புத் தருகிறதோ?

கணக்கு என் தலையைச் சுற்றித்தள்ள முயல, நிதானமாக வீடு வந்து சேர்ந்தேன். நேர்மையான காவலர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இருப்பார்கள் எங்காவது என்றுகூடச் சொல்ல நா கூசுகிறது. மிகுந்த சிரமத்துக்கிடையில் கடை நடத்தும் கடைக்காரர்களிடம் பிடுங்கித் திங்கும் குரங்குகளை என்ன சொல்வது?

எல்லாம் நல்லவாயன் சம்பாதித்து நாற வாயன் தின்கிற கதைதான்.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>