மழைவந்தால் நகரங்கள் நரகங்கள்!

அடிக்கடி நமது சாலைகள் பல்லிளித்துக் கொள்வதேன் என்று நாம் யாரேனும் எண்ணிப்பார்க்கிறோமா? சாலைகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை. இந்தியச் சாலைகள் பொதுவாக அதிக சரக்குப்போக்குவரத்து காரணமாகவும், மழை, வெய்யில் இரண்டும் மாறி மாறி அடிக்கடி வருவதாலும் அதன் அடிமட்டம் (Basement) சிறப்பாகவும் பல அடுக்குகளாகவும் அமைக்கப்பட்டுப் பின் சாலையின் இருபுறமும் இறக்கமாகவும் நடுவில் கொஞ்சம் உயரமாகவும், சாலை இறங்கி ஏறும்போதும் இதே போல் இருபுறமும் இறக்கமாகவும் நடுவில் உயரமாகவும் அமைக்கப்பட வேண்டும். படத்தில் காண்க. இந்த சாலை போடும் தொழில்நுட்பம். எல்லோரும் அறிந்ததே.

இதைச்சொல்லித்தரத்தான் சாலைப்போக்குவரத்துத் தொழில்நுட்பக்கல்லூரி (Institute of Road & Transport Technology) பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக்கல்லூரிகளில் படித்த எத்தனை மாணவர்களுக்கு சாலை போடும் பணியை வழங்கியிருக்கிறது நமது அரசு? சும்மா பெயருக்குக் கல்விகற்றுக் கொடுத்துவிட்டுப் பின் சாலை போடும் பணிகளை வெளிஆட்களுக்கு ஒப்பந்தத்துக்குத்தான் விடுகிறது. அதனால் அரசியல்வாதிகளுக்குப் பெரும்பணம். அவர்களும் நாம் உழைத்துக் கட்டும் வரிப்பணத்தைத் தின்றுவிட்டு அதில் ஏதோ மிச்சமிருப்பதை வைத்துக் குறைந்த செலவில் ஏனோதானோ என்று சாலை போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள். சாலைகள் மழையினால் நாசமானதும். யார் போய்க் கேட்கிறார்கள்? இல்லை யார் வழக்குத் தொடர்கிறார்கள். சாலை போடுவதில் நடக்கும் ஊழல்களைத் தடுக்க முடியாதா என்றால் அதற்கும் வழியிருக்கிறது. யார் சாலை போடும் பொறுப்பை ஏற்கிறார்களோ அவர்களே அந்தச் சாலையைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எத்தனை முறை பழுதானாலும் அது உடனே செப்பனிடப்படவேண்டும் என்றால் ஒப்பந்ததாரர்கள் பின் வரும் செலவைக் கருத்தில் கொண்டு முதலிலேயே ஒழுங்காகச் சாலைபோடுவார்கள் இல்லையா?

அடுத்ததாக நகர்ப்புறச் சாலைகளில் மழைநீரால் உடைப்புகள் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால், சரியான கழிவுநீர் போக்கு இல்லாததால்தான். மழை அதிகமாக 3 மணிநேரம் பெய்தால் கூட ஓய்ந்தபின் அதிகம் 15 நிமிடங்களில் நீர்வடிந்து ஓடிவிடவேண்டும். கழிவுநீர் போகுமிடங்களை மற்ற நாட்களில் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் மழையில்லாத நாட்களில் குப்பைகளையும் பிளாச்டிக் பைகளையும் போட்டு அடைத்துப்போய் நாறவைத்துவிட்டுப் பின் மழைவந்தபின் அந்தச் சகதிச் சேற்றை வாரி சாலைகளில் கொட்டி மேலும் கொசுக்களும் கெட்ட கிருமிகளையும் ஊரெல்லாம் பரவவைக்கும் வெக்கக் கேடு நம் நாட்டில்தான். வாய்வார்த்தைக்கு வல்லரசு என்று பேசிக்கொள்வது எந்தவிதத்தில் பெருமை. இது போன்ற சிறியஎண்ணங்களிலெல்லாம் சிறப்பான கையாளுமையை ஆய்ந்தறியத்தானெ நமது அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. காலையில் பத்துமணிக்குவந்து மாலை 4 மணிக்கு மூட்டைகட்டிக்கொண்டு போவதுதான் அரசு அலுவலர்கள் வேலையாகிவிட்டது. அதற்குள் எத்தனை ஊதிய உயர்வு, ஊக்கப்பணம் மற்றும் பதவி உயர்வு. சிறப்பாகச் செயல்படுபவர்க்குத்தான் ஊதிய உயர்வும் பதவியுயர்வும் என்றால் எல்லா இடங்களிலும் சரியாக வேலை நடக்குமில்லையா?

எடுத்துக்காட்டாக, காந்திபுரம் குறுக்குச் சாலையில் (Cross Cut Road) மேம்பாலத்துக்குக் கொஞ்சம் முன்னரிருக்கும் ஒரு வண்டிஎரிபொருள் நிரப்புநிலையத்துக்கு (Petrol Bunk) அருகில் பலகாலமாக அடைத்துக் கிடந்த சாக்கடையை மேலுள்ள பாருங்கள். பின் மழையால் அந்த இடமெல்லாம் நீர் தேங்கி நாறிப்போய்க் கிடக்கையில் மாநகராட்சியினர் வந்து அந்த அடைப்பை (இதை மழைக்குமுன்னர் இருந்தகாலத்திலேயே நாள்தோறும் செய்திருக்கவேண்டியது) எடுத்துவிட்டனர். எவ்வளவோ தொழில்நுட்பம் முன்னேறினாலும் நாம் இன்னும் பிச்சைக்காரத்தனமான வேலையைத்தான் செய்கிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அந்தச் சாக்கடைக் கழிவுகளையெல்லாம் எடுத்து உறிஞ்சிச் செல்ல எவ்வளவோ கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் இருக்கையில் வாளிகளில் ஆட்களை வைத்து எடுத்து சாலைகளில் போட்டுவிட்டார்கள்.
இதற்கு சாக்கடை எதற்குக் கட்டவேண்டும். பேசாமல் எல்லோரும் குப்பைகளை சாலையிலேயே போட்டுவிடலாமில்லையா? அந்தக்கழிவு பாத்தி கட்டப்பட்டு உப்புவயல் போல வரண்டு போகவேண்டுமாம். அது முற்றிலும் திடக்கழிவானபின் அதை அள்ளிச் செல்வார்களாம். என்ன கொடுமைங்க இது? அதுவரை அந்த நாற்றத்தைத் தாங்கிக் கொண்டும், அதில் உருவாகும் கொசுக்களையும் அதனால் உண்டாகும் நோய்களையும் தாங்கிக் கொள்ளலாமாம். இதுபோக மழை இன்னும் ஓயவில்லையாதலால், அடுத்த மழைவந்தால் பாத்திகட்டி வைத்திருக்கும் கழிவுச் சேறு சாலையெங்கும் ஓடி அதில் வண்டிகளெல்லாம் ஏறி…. உவ்வே… என்று குமட்டிக்கொண்டுவருகிறதல்லவா?

இதற்குள் எளியோரை வலியோர் வாட்டும் செயலும் நடந்திருக்கிறது என்று அங்கிருந்த ஒரு சிறிய தேநீர்க்கடை உரிமையாளர் புலம்பித்தள்ளினார். படத்தில் பச்சைக் கோடிட்டிருக்கும் இடத்தில் கழிவுச்சேற்றைக் கொட்டாமல் அங்கெடுக்கப்பட்ட அனைத்துக் கழிவுகளையும் பக்கத்திலுள்ள தேநீர்க்கடைமுன் கொட்டுமாறு அருகிலிருந்த விற்பனைக்கடைக்காரர்கள் 1000 ரூபாய் கையூட்டாகவும் கொடுத்திருக்கிறார்கள். பாருங்கள், முன்னர் பார்த்த குப்பைகள் சாக்கடையில் அடைத்திருக்கும் படம் எடுக்கப்பட்ட இடம் அந்த விற்பனை நிலையத்துவாசல். ஆனால் அங்கிருந்து இவ்வளவுதூரம் சாக்கடைக் கழிவைச் சுமந்துவந்து தேநீர்க்கடைமுன் கொட்டிச் சேகரம் செய்வதற்கு 1000 ரூபாய் கையூட்டு வாங்கியிருக்கிறார்கள் என்றும் 1000 ரூபாய் கொடுத்து கொட்டவேண்டாமென்று சொல்லுமளவு நான் வசதிபடைத்தவனல்ல என்றும் அந்தத் தேநீர்க்கடைக்காரர் புலம்புகிறார்.

இதெல்லாம் நாம் பேசியா தீர்த்துவிடப்போகிறோம் என்கிறீர்களா? இந்தியா மட்டைப்பந்தில் (Cricket) தோற்றுவிட்டதென்று புலம்பியும் தொலைக்காட்சிமுன் அமர்ந்து அழுகினித் தொடர்களைப்பார்த்தும் எதைச் சாதிக்கமுடியுமோ அதைவிட கொஞ்சமாவது பேசினால் சாதிக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் என்ன எண்ணுகிறீர் என்பதைக் கீழே கருத்தாகச் சொல்லலாமே…

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>