மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
ஓடாமல் விளையாட்டேதடி பாப்பா?
ஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! இந்தப்பாட்டைக் கேக்காத பாப்பாக்களே இல்லை. ஆனால் இன்று பாப்பாக்களோ பெட்டிகூடைகளில் அடைந்துகிடக்கிறார்கள்.
உடல்நலத்துக்கு விளையாட்டு அவசியம் என்று சொல்லிவைத்ததை ஒருபோதும் நினைப்பதில்லை நாம். விளையாடவேண்டுமென்றால் கணினியிலும் தொலைக்காட்சியிலுமே விளையாடுவது இவர்களின் மரபாகிவிட்டது.
விதவிதமான தொலைக்காட்சி அலைவரிசைகளின் வரவுக்குப்பின்னர் விளையாட்டுக்கென்று ஆறேழு அலைவரிசைகள் வந்திருந்தாலும் அதனால் மக்களுக்கென்ன பயன் எனச் சிந்தித்தால் உண்மை விளங்கும். மனிதர்களின் பகுதிநேரங்களையும் கணினியும் மிகுதி நேரங்களைத் தொல்லைக் காட்சிகளும் தின்றுவிட்டு இன்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன.
விளையாட வேண்டுமா? நீ போய் விளையாடு! அடுத்தவன் விளையாட அதை வேடிக்கை பார்ப்பது எப்படி உனக்கு ஆயுளையும் உடல்நலத்தினையும் தரும்? இந்தக் கேள்வியை ஒவ்வொரு மனிதரையும் பார்த்துக்கேட்டுப்பாருங்கள். மட்டைப்பந்து (Cricket) மட்டுமா விளையாட்டு? இன்னும் எத்தனையோ விளையாட்டுக்கள் ஆதரவாளர் யாருமின்றி இன்று அனாதைகளாச் செத்துப்போய்விட்டன. மட்டைப்பந்து வீரர்களின் வருமானம் கோடிகளில் இருந்தாலும் அவர்களின் விளம்பர, பகட்டு வாழ்க்கைக்கு அது போதாது. இந்திய அரசின் கூறுகெட்ட விளையாட்டுத்துறை காசுவரும் என்றுதான் மட்டைப்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்துகிறது.
உங்களுக்கெல்லாம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் இனிமேல் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு இன்புறுங்கள், ஆனால் இந்தியா இந்தமுறை பதக்கங்களை வெல்லும் என்று கனவில்கூட நினைத்துக்கொள்ளாதீர்கள். காசுகொழிக்கும் அந்த விளையாட்டு வீரர்கள் போவதெல்லாம் அரசாங்கச் செலவில் (விமானத்திலாகட்டும், தொடர்வண்டியின் குளிர்சாதன வகுப்பிலாகட்டும்). தங்குவதெல்லாம் உயர்தர விடுதிகளில். வருமானமோ இலட்சங்களில், கோடிகளில். போதாதென்று விளம்பரங்களில் வேறு கொள்ளை. இதெல்லாம் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்கிறதா? என்றால், கட்டாயமாக இல்லை. இந்தியாவின் மரபு விளையாட்டான ஆக்கி, தமிழ்நாட்டின் மரபு விளையாட்டான கபடி இவைகளேல்லாம் இப்பொது இருந்த இடம் தெரிவதில்லை. அதன் வீரர்கள் எந்த ஊரில் எந்த வீதிகளில் பிச்சை எடுக்கிறார்களோ தெரியவில்லை.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 17 சூலை 2009 10:34)