மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
எங்கே போகிறோம்?
நாம் எதிர்பார்த்த அழிவுகாலம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. என்ன அப்படிச் சொல்லிவிட்டோம் என்கிறீர்களா? அழிவு என்பது இயற்கையால் மட்டுமல்ல மனிதனாலும் வரலாமல்லவா? ஆமாம்! 2012ன் அழிவு உண்மையாகத்தான் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. 2012ல் இல்லையென்றாலும் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்தாவது இது நடந்தே தீரும்.
தற்போது பெய்த மழை ஒன்றும் புதிதல்ல இதைவிட மோசமான மழைக்காலம் நமது நாட்டில் வந்து போன நாட்கள் நமது வரலாற்றில் உண்டு. ஆனால் வெங்காயம் கிலோ அளவு நூறு ரூபாய்ப் பணத்துக்கு விற்ற காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. பிற்பாடு இது குறையும் என்றாலும் இது நமது விவசாயம் அழிந்தால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஒரு தொடர்மழைக்கு காய்கறிகள் பற்றாக்குறையில் மக்கள் தவிப்பார்களேயானால், நிரந்தரமாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டால், அதன் மூலம் விவசாயம் தடைபட்டால் பசியால் அழிவதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்.
உள்நாட்டு நிறுவன மற்றும் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் உழைப்பாளர்களும், பணியாளர்களும் தாங்கள் பெறும் வருமானத்துக்கான வரியை சம்பளத்தில் அந்நிறுவனம் பிடித்துக் கொண்டபின்னரே பெறுகின்றனர். அவர்கள் வரி ஏய்ப்புச் செய்ய வழியில்லை. ஆனால் அவர்கள் பெருநகரங்களில் தங்கியிருக்க பெற்ற வாடகை வீட்டுக்கு உரிமையாளர் எந்த வேலையும் செய்யாமல் அவர் பெறும் வாடகைக்கு வரி ஏதும் கட்டுவதில்லை. மற்றவர்கள் வரிகட்டாமலிருக்க வருமான வரிச்சட்டத்தில் எப்படியெல்லம் வழிவகை செய்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். பெருந்தொழிலதிபர்கள் பலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையினை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்தால் அந்த நன்கொடைப் பணத்துக்கு வரி விலக்கு அளிக்கும் கேவலமான விதிகளை யார் வகுத்துக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
மற்றுமொருபுறம், உழைப்பவர்களை ஊக்குவித்து நாட்டைச் செழிப்பாக்க வேண்டிய அரசியல்வாதிகள் வணிகம் செய்பவர்கள் போல இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறியாக்கிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உழைப்பவர்கள் நிறுத்திக் கொண்டால் இலவசங்கள் எங்கிருந்து கிடைக்கும்.
எம்.ஜி.ஆரின் பாடல்வரிகளாக வந்த,
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்,
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
என்ற கருத்து முழுக்க முழுக்க உண்மை என்பதும், உழைக்கும் மக்களெல்லாம் தெருவில் நிற்பார்கள் என்பதும், மீண்டும் அடிமைகளாக நாம் ஆகும் காலம் விரைவில் வரும் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை! தெரிவதை இங்கு கருத்தாகச் சொன்னால் என்ன?
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 27 சனவரி 2011 13:59)