மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
6 ரூபாய்க்கு இடைவேளை உணவு (Lunch)
வெளியூர் போகிறவர்கள், தனியாகத் தங்கி வேலை செய்பவர்கள் தவிர்க்கமுடியாத ஒன்று உணவகம். பெருநகரங்களில் இந்த உணவகங்கள் பசி நீங்க வருபவர்களிடம் பிடுங்கித் திங்க எத்தனையோ வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. எல்லோரும் சம்பாதித்து வளமுடன் வாழ ஆசைப்படுபவர்கள்தாம். ஆனால் அதுவே அளவுக்கதிகமான பணத்தாசை என்னாகும்?
வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைக் கொடுக்கும்போது வாயார வாழ்த்திச்செல்வதுதான் எந்த வணிகத்தையும் சிறப்படையச் செய்யும். அதுவே "ஐயோ... பணம் போச்சே... ஏமாந்துட்டோமோ...." என்று நினைத்து ஒவ்வொருவரும் திட்டிவிட்டுப் போனால் நீங்கள் செய்யும் வணிகம் சிறப்புப்பெறுமா...? எண்ணிப் பாருங்கள். உங்கள் வணிகத்துக்கு விளம்பரம் செய்ய நீங்கள் எத்தனை பெரிய விளம்பர அட்டைகள் வைத்தாலும், பொது இடங்களில் எழுதி வைத்தாலும், கோடிக்கணக்கில் செலவுசெய்து தொலைக்காட்சிகளில் படம்காட்டினாலும் நமது வழக்கமான வாடிக்கையாளர் தான் நம் செலவில்லாத விளம்பரம்.
மதுரை சென்றுவருபவருக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும் கேட்டுப்பாருங்கள்; ஆறு ரூபாய் பணத்துக்குக்கு இடைவேளை (Lunch) உணவு தரும் உணவகத்தைத் தெரியுமா என்று. பொறுங்கள், நீங்கள் கேட்பது புரிகிறது. "ஆறு ரூபாய் பணத்துக்கு இடைவேளை உணவா? இது ஒன்றும் ஒரு ரூபாய் அரிசிக் கதைபோல இல்லையே...? தூய்மையாக இருக்குமா? சுவையாக இருக்குமா? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள்". விலைப்பட்டியல் அழகாயிருக்கவேண்டுமென்று விலைவைக்கும் பெரிய ஆரிய (ஆறிய) பவன்கள் மற்றும் சரவண பவன்களில் மட்டும் தூய்மையும் நலனும் இருகிறதென்று உங்களால் மெய்ப்பிக்க முடியுமா? அங்கெல்லாம் உணவு பரிமாறும் அறைகள்தாம் அழகு பெற்றிருக்கும். சமையலறையை எட்டிப்பாருங்கள். எல்லாம் ஒரே குட்டையிலூறிய மட்டைகள்தான்.
அறைக் குளிரூட்டி இருக்காது. தட்டிற்கருகில் கைத்துடைப்புக் காகிதம் இருக்காது, வெள்ளைரவை உப்புமாவுக்கு "சொய்யா முயா பாத்" என்ற புதுப் பெயரை ஏந்தி விலைப்பட்டியல் இருக்காது, உணவுப்பொருட்களை துல்லியமான புகைப்படங்களால் மெருகேற்றும் சுவர்ச் சித்திரங்களிருக்காது, ஆனால் வயிறாரச் சோறு கிடைக்கும். மதுரையில் அந்தச் சிறிய உணவகத்தின் பெயர் "இராமு தாத்தா உணவகம்" என்பதை அங்கிருப்பவர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்களாம். ஒரு குழம்பு, சாறு(ரசம்), பொறியல் மற்றும் மோர் எனச் சுவையாய் உண்டு மகிழலாம். ஏழை மக்களின் சொர்க்கமாகத் திகழும் இதுபோன்ற சிற்றுண்டிச்சாலைகள் இன்னும் எல்லா நகரங்களிலும் பெருகினால் வள்ளலார் கண்ட புதிய புவி கிடைக்குமென்பதில் யாருக்கும் ஐயமில்லை.
வணக்கம், தங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. இராமு தாத்தா உணவகம் மட்டுமல்ல அனைத்து உணவகங்களும் இந்த விலையிலேயே தாராளமாக தரமான உணவுப் பண்டங்களை விற்க முடியும்... அதில் தாராளமாக இலாபமும் ஈட்டலாம்... ஆனால் ஏனோ வள்ளலார் கண்ட புதிய புவி இன்னும் நம்மால் காண இயலவில்லை... நமது வாழ்த்துக்களை 'இராமு தாத்தா உணவகத்திற்கு' தெரிவிப்போம்....