| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? - பாகம் 2
இறைச்சியால் உலகவெப்பமாதல் (Global Warming) பற்றி இக்கட்டுரையின் முதல் பாகத்தில் சொல்லியிருந்தோம். ஆனால் இப்படியொரு சிந்தனை நிறைய பேருக்கு இதுவரை வந்ததில்லை என்ற எனது ஆய்வு ஆச்சரியத்தை அளித்தது. மேலும் இது பற்றிய கருத்துக்களை இணையத்தில் தேடும்போது வியத்தகு செய்திகள் தென்பட்டன. இரண்டாம் பாகம் முழுதும் இறைச்சி உண்ணாமையால் உண்டாகும் நலன்களை எடுத்தெழுதுவது என்று முடிவுசெய்துகொண்டேன்.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி, பன்றி, முயல் போன்ற விலங்கினங்களின் உணவுக்காக தாவரங்கள், புல்வெளிகள், காடுகள் அழிக்கப் படுகின்றன.
சென்ற பாகத்தில் கண்டதுபோல் 1 கிலோ அளவு இறைச்சிக்கு சராசரியாக 10 கிலோ அளவு தாவரப்பயிர்கள் செலவிடப்படுகின்றன. அதற்கு மாற்றாக மனிதர்கள் உண்ணும் தாவரப்பயிர்களைப் பயிரிடுவதால் ஒருவர் இறைச்சி உணவுக்கு பயிரிடும் தாவரப் பண்ணையிடத்தில் பத்துப் பேருக்கு சைவ உணவுப் பயிர்களை வளர்க்க முடியும். நம்மூரில் விவசாயப்பண்ணைகளை அழித்து தொழிற்சாலைகளையும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் எழுப்பி ஏற்கனவே நகரமயமாதல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
தோராயமாக அறுநூற்று எழுபது கோடி மக்கள் இந்தப் புவியில் வாழ்கிறார்கள். இது இன்னும் 30 ஆண்டுகளில் தொள்ளாயிரம் கோடியை எட்டும் எனக் கணக்கிடப்படுகிறது. மக்களின் உணவுத்தேவைகள் இன்னும் அதிகமாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்பொழுதிருக்கும் நிலையிலேயே பலர் உணவின்றிச் சிரமப்படுவதைப் பார்க்கமுடிகிறது. உலகத்தில் முப்பது விழுக்காடு (30%) நிலம் உணவுக்காக மட்டுமே தேவைப்படுகிறது. இருபது விழுக்காடு (20%) எரிபொருட்கள் உணவுசமைக்கவே செலவிடப்படுகின்றன. விவசாயத்தின் நண்பர்களாகக் கருதப்பட்டுவரும் ஆடு, மாடுகளே இப்போது எதிரிகளாகவும் மாறியிருக்கின்றன. மனிதனின் தேவைப் பயிர்களின் எச்சங்களை ஆடுமாடுகளுக்குத் தருவது மாறி இப்போது அவைகளுக்காகவே பயிரிடும் நிலை வந்திருக்கிறது.
இதனால் மனித உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுபோக நீர்நிலைகள் அளவுக்குமீறி மாசுபட்டுவருகின்றன. பணத்துக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் (Livestocks) மூலம் உருவாகும் கழிவுகள் புவிமாசுபடுதலில் முக்கியப் பங்கெடுத்து வருகின்றன.
இது இப்படியே தொடர்வதால் இடையில் பெரிய அளவில் பஞ்சம் ஏற்படுவது உறுதி என்பதுதான் இந்தக் கணக்கின் விடையாக இருக்கிறது. இது ஏதோ முரண்பாடான கருத்து அல்ல. எதார்த்தமான உண்மைநிலை. இறைச்சி உண்ணுதலைக் குறைத்துக்கொண்டும் விரைவில் முழுவதுமாகத் தவிர்த்தாலன்றி நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலாது என்பதை வலித்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. விலங்குகள் இயன்றவரை காட்டிலிருக்கவேண்டியவைதான். மனிதனுக்கே இங்கே மூச்சுத்திணறும் போது இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் நமக்குத் தேவையா எனச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பச்சைப் பசுமைகள் அழிக்கப்படுவதும், விலங்குகளுக்காக பயிர்கள் வளர்க்கப்படுவதாலும் மனிதனின் உணவுக்குப் பங்கம் விளைவிப்பதுடன் புவி வெப்பமடையக் காரணமாகவும் அமைகின்றன. புவி வெப்பமாதலால் மீத்தேன் வெளியாகிறது. அது ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. இதனால் மேலும் புவி வெப்பமடைகிறது. துருவப்பகுதிப் பனிக்கட்டிகள் உருகிக் கடல்மட்டம் அதிகமாகிறது. இதனால் மேலும் பல நிலப்பகுதிகள் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்தக் காலநிலைகளில் சுனாமி போன்ற பேரழிவுச் சீற்றங்கள் நம்மைத் தாக்கும்.
கட்டுரை ஆரம்பத்திலிருந்தே பல எதிர்மறையான கருத்துக்களைத் தாங்கி வருகிறது என நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இவை மறைக்கமுடியாத உண்மைதான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்ற ஆதங்கத்தில் கசப்புமருந்தைக் கட்டாயம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
நாம் திருந்தினால் போதுமா மற்றவர்கள் திருந்துவார்களா? இறைச்சியை முற்றிலும் குறைத்து விரைவில் தவிர்த்துக்கொள்வார்களா? என்று கேட்பவர்கள் முதலில் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை பற்றி உங்கள் நண்பர்களுக்கு எழுதுங்கள். நாம் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சுயநலக்காரர்கள் நீங்களல்ல என்பதை யாம் அறிவோம்.
உங்கள் மகன்/மகளுக்கோ, பேரன்/பேத்திக்கோ சேர்த்துவைக்கும் சொத்து பலகோடியாயினும் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாட மாசுபட்ட உலகத்தை உருவாக்கிவிட்டால் அதுவும் நாம் செய்யும் பாவம்தான்.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:15)
http://en.wikipedia.org/wiki/World_population
http://www.geohive.com/earth/population1.aspx
மேலும், உலகவெப்பமயமாதலுக்கான் உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காடுகளை அழிக்க விலங்குகளுக்கான் பயிர்கள் காரணமல்ல. பின்வரும் காரணங்களைப் பாருங்கள்-
1. பெருகிவரும் உலக மக்கள் தொகை.
2. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிட்டதால் உலகில் பெரும்பாலான அளவு காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதுபோல இந்தியாவிலும் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுவிட்டன. இந்தப் பாவம் டாடா குழுமங்கள் மற்றும் சுயநினைவற்ற இந்திய அரசினையே சாரும். இது தமிழ்நாட்டில், ஊட்டி, நாகர்கோவில் மற்றும் வால்பாறை போன்ற இடங்களிலே நிகழ்ந்திருக்கிறது. எனவே வடக்குப் பகுதிகளான அஸ்ஸாம், மேகாலயா, மிசோராம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சொல்லவும் வேண்டியதில்லை. இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது இன்னும் ஐம்பது ஆண்டுகளில் மேலும் 20 விழுக்காடு (20%) இந்திய காட்டுப்பகுதிகள் தேயிலைப் பயிருக்காக அழிக்கப்பட்டுவிடும்.
3. காட்டுவிலங்குகள் காடுகளில்தான் மேய்கின்றன.ஆனால் அவை காடுகளை அழிப்பதில்லை.
கவனிக்கவும்: மரங்கள் மனிதர்களால் மட்டுமே அழிக்கப்படுகின்றன; விலங்குகளால் அல்ல.