அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்

May 29, 2012

சிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் உண்மைதான் இந்த வழிபாட்டு முறைகளெல்லாம்.

நாற்பட்ட அதிக சூட்டினாலும், தீய பழக்கங்களினாலும் ஏற்பட்ட மேக நோய்கள் என்னும் ஏழு உடல் தாதுக்களையும் நலிவடையச்செய்யும் முற்றிய நோய்களையும் வில்வ இலை தீர்த்துவைக்கும் என்பது உண்மை. இது எய்ட்ஸ் நோய்க்கிருமிகளையும் அழிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

காலை வெறும் வயிற்றில் 5 வில்வ இலைத்துளிர்களை மென்று உண்டு பின் பசும்பால் குடித்து வந்தால் ஓராண்டில் மேக நோய்கள், கை கால் பிடிப்பு, வாய்ப்புண் வயிற்றுப்புண், பெண்களின் வெள்ளைப்போக்கு, அதிகமான உதிரப்போக்கு நீங்கி நலமடையும். உடல் சூடு தணிந்து உதிரம் தூய்மையடையும்.

5 இலைகளுடன் 3 மிளகுகளைச் சேர்த்து மென்று சாப்பிட்டுவந்தால் காச நோய் மற்றும் ஆஸ்துமா கட்டுப்படும். வயிற்றிலும் கல்லீரலிலும் ஆரம்பமாகும் புற்றுநோய்கள் நீங்கும். இலையை நிழலில் உலர்த்தி மென்மையான பொடியாக்கி அரை தேக்கரண்டி அளவு காலை மற்றும் மாலை தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு இருமல், நீர்க்கோர்வை, தலைவலி, மூக்கில் நீர்வடிதல் தீரும். காலை மற்றும் மாலை நெய்யில் அல்லது வெண்ணையில் குழைத்துச் சாப்பிடுவதால் பித்தம், வயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல், நீர்த்தாரை எரிச்சல், உடல் எரிச்சல் மற்றும் வெள்ளைப் போக்கு நீங்கி நலம்பெறலாம்.

வில்வ இலைப்பொடியுடன் மஞ்சள் கரிசாலைச் சாறு கலந்து கோலியளவு காலை மற்றும் மாலை சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை தீரும்.

15 கிராம் அளவு வில்வமரப்பட்டையை அரை லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 125 மி.லி அளவு சுருக்கி வடித்து தேன் கலந்து 2 மணிநேரத்துக்கொருமுறை 40 மி. லி. அளவு குடித்தால் கடும் விக்கல் நிற்கும்.

100 கிராம் அளவு வேர்ப்பட்டையை உலர்த்தி 10 கிராம் அளவு சீரகம் சேர்த்தரைத்து 1 தேக்கரண்டி அளவு காலை மற்றும் மாலை பாலுடன் சாப்பிடுவதால் தாது வலிமை பெறலாம்.

நன்கு கனிந்த வில்வப் பழச்சதையை விதை நீக்கி உலர்த்திப்பொடித்து சம அளவு சர்க்கரை சேர்த்துவைக்கவும். சாப்பிட்டவுடன் மலம் கழித்தல், பெருங்குடலில் எரிச்சல், பேதி, சீதபேதி, போன்ற கோளாறுகளுக்கு 1 கிராம் அளவு காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் சுவைத்துச் சாப்பிட்டுவரத் தீரும்.

பழங்களை நீர்விட்டுப் பிசைந்து வடிகட்டி 1 லிட்டர் அளவுக்கு 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி ஆறியபின் கண்ணாடிக்கலன்களில் வைத்துக்கொண்டு சாப்பிட மேற்கண்ட பலன்களும் மேலும் பித்தமும் குறையும்.

நன்கு பழுத்த காசிவில்வப் பழச்சதை ஒரு தேங்காய் உட்பருப்பின் அளவு இருக்கும். இதை 40 நாட்கள் தேனில் முழுவதும் மூழ்கவிட்டு வெய்யிலில் வைத்து எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடச் பித்தம் மிஞ்சி ஏற்பட்ட மூளைக்கோளாறுகள் நீங்கும். சாப்பிட மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். பித்தக்குமட்டல், வயிறு எரிச்சல், நீர் எரிச்சல், மூல எரிச்சல், அடிக்கடி மலம் கழித்தல் போன்ற நோய்களிலிருந்து நலம் பெறலாம். கண்கள் வலிமை பெறும். வில்வப்பழத் தேனூறல் என்ற பெயரில் இது நமது மையத்தில் கிடைக்கிறது. இலைப்பொடியும் நமது மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நம் நாட்டு வில்வப்பழத்தை ஜெர்மனி நாட்டு ஓமியோபதி முறையில் தூய்மைப்படுத்தப்பட்ட சாராயத்தில் ஊறவைத்து மருந்துப்பொருளாகத் தருகிறார்கள். அதிக உதிரப்போக்குள்ள மூலநோய், ஆண்களின் மலட்டுத்தன்மை, இதய நோயாளிகளின் நீர்வீக்கம், உயிர்ச்சத்து B குறைவால் வரும் பெரிபெரி, வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களுக்கு “Aegle Marmeos” என்ற இம்மருந்து நலமளிப்பதாக குணபாடம் கூறுகிறது.

இதன் வேர்ப்பட்டையை நீக்கி சிறுசிராய்களாகச் செய்து கசாயமாக்கி தேவையான பொருட்களைச் சேர்த்து வில்வாதி இலேகியம் என்றபெயரில் சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் சுவையான மருந்தாகச் செய்து, பசியின்மை, சுவையின்மை, உணவில் விருப்பமின்மை, அதிக உமிழ்நீர்ச் சுரப்பு, பித்தம், வாந்தி, நாட்பட்ட செரிமானக் கோளாறுகள் போன்ற நோய்களுக்குக் கொடுத்து நலமளித்துவருகிறார்கள்.

எனவே சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்பட்டு பித்தம்நீக்க உறுதுணையாயிருக்கும் இந்த வில்வத்தைப் பயனாக்கி நீண்ட நாட்கள் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

தொடரும்…

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>