அறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு

அறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு

May 29, 2012

மாரியம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

வேப்பமரமும் அரசமரமும் ஒன்றுசேர்ந்து காற்றைத் தூய்மையாக்கி பல நோய்களையும், மனக்கோளாறுகளையும் நீக்கி நலம்தரும் திறன்பெற்றிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்குப் புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் முதன்முதலில் உண்ணுவது வேப்பம்பூ பஞ்சாமிர்தமாகும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வேம்புக்கு நம் முன்னோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். பாண்டியமன்னர்கள் வேப்பம்பூ மாலை அணிவது அவர்களின் மரபாகக் கருதப்பட்டுவந்தது. கசப்பான எந்தப்பொருளும் பித்தத்தை விருத்திசெய்யும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், வேம்பின் கசப்புமட்டும் பித்தத்தைச் சாந்தப்படுத்தும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் அறிவியலாளர்கள் பல்வேறு மரங்களைக் குறித்து ஆய்வு செய்தபோது அதிகமாகக் காற்றைத்தூய்மைப்படுத்தும் மரமாகவும் வாகனங்களின் இரைச்சலைக் குறைக்கும் மரமாகவும் வேப்பமரம் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் மருந்தாகப் பயன்படும் வேப்பரம் விவசாயத்தில் தாவரங்களுக்கும் உரமாகப் பயன்படுகிறது. வேப்பக்கொட்டையிலிருந்து எடுத்த எண்ணை மற்ற விதைகளை ஒரு வருடம் வரை பூச்சி அண்டாமலும் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது. வேம்பம்பிண்ணாக்கைக் கரைத்துப் பயிர்களுக்குத் தெளிக்கும்போது அப்பயிர்கள் வெட்டுக்கிளி மற்றும் வேறு பூச்சிகள் தாக்காமலிருப்பதை கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் கண்டறிந்துள்ளார்கள்.

புதிய மருத்துவ முறைகளில் நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆண்டிபயாட்டிக் எனப்படும் மருந்துகளைப் பயன்படுத்துவதால் நமது உடலில் மரபுக்கூறுகளைத் தாங்கியிருக்கும் குரோமோசோம்கள் சிதைவுறுவதாகவும் அதற்குப்பதிலாக வேம்பைப் பயன்படுத்துவதால் குரோமோசோம்களைச் சிதைக்காத ஆண்டிபயாட்டிக்காக அது செயலபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வேம்பை உடலுக்குத் திறானூட்டி அழியாமல் காக்கும் காயகற்ப மூலிகையாகச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். 100 ஆண்டுகள் சென்ற மரத்தின் இலை, பூ, வேர்ப்பட்டை, பட்டை, காய் இவற்றைத் தனித்தனியே நிழலிலுலர்த்தி சமஎடை சேர்த்துப் பொடியாக்கி பால், வெண்ணை, நெய், தேன் போன்றவற்றில் ஏதாவதொன்றைச் சேர்த்து காலை மாலை 1 கிராம் அளவு 90 நாட்களுக்குச் சாப்பிடுவதால் இளமை திரும்பி முடிகள் கருத்து, வாழ்நாட்கள் நீடிக்கும் என்று கற்ப நூல் சொல்கிறது.

நாட்சென்ற முதிர்ந்த வேப்பமரப்பட்டையைச் சேகரித்து மேலுள்ள புறணியை நீக்கிவிட்டு உள் பட்டையை மட்டும் உலர்த்தி பொடியாக்கி காலை மாலை 1/2 தேக்கரண்டி பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் ஒரு நாளைக்கு 10 முறைக்கும் மேல் அடிக்கடி சிறுநீர்கழிக்கும் நீரிழிவு நோய் நீங்கும். இதனுடன் சம அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் இரவு 1 தேக்கரண்டி சாப்பிட்டு வருவதால் உதிரம் தூய்மையடைந்து தோல்நோய்கள் நீங்கும். புத்திகூர்மை உண்டாகும். கல்லீரல், மண்ணீரல் வலிமை பெறும்.

பொதுவாக வேப்பம் பட்டைப்பொடியை அனைவரும் ஆண்டிற்கு 90 நாட்கள் சாப்பிடுவதால் பல நோய்கள்  தீர்ந்து உடல் பொலிவுடனும் வலிமையுடனுமிருக்கும். வேப்பம்பூவைத் துவையலாகவும், இரசம்வைத்தும் வறுத்தும் சுவையாகச் சாப்பிடலாம். இதனால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கும்.

மோரில் மஞ்சளும், உப்பும் கலந்து வேப்பம்பூவை 1 நாள் ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்கிப் பயன்படுத்தலாம். இந்தவற்றல் 100 கிராம் அளவு, மிளகு 24 கிராம் அளவு மெலிதாக வறுத்துப்பொடித்து மதிய உணவுடன் சிறிது நெய்சேர்த்துப் பிசைந்து சாப்பிட நாவின் சுவையின்மை, பசியின்மை நீங்கி வயிற்றிலுள்ள பூச்சிகள் ஒழியும். வயிற்றுப்புண் ஆறும். கபம் கட்டுப்படும்.

வேப்பம்பூக்களைச் சேகரித்து அவற்றை மூழ்குமளவு தேன்விட்டு வெய்யிலில் சிலநாட்கள் வைத்து இந்த வேப்பம்பூ குல்கந்தை காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடவும் மேற்கண்ட பலன் கிட்டும். அம்மை நோயாளிகளுக்குச் சுற்றியும் இதன் இலைகளைக் கொத்துக்கொத்தாக வைப்பதால் விரைவில் நலமடையும், மற்றவர்களுக்கும் பரவாது. சயரோகம், தோல்நோய்களிகள் மற்றும் பல்வேறு கிருமிகளால் நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகாலையில் வேப்பங்கொழுந்தைச் சாப்பிட்டுப் பகலில் வேப்பமர நிழலில் ஓய்வெடுத்து வந்தான் வேம்பின் திறனால் சிலமாதங்களில் நோய்தீர்ந்து நலமடைவார்கள்.
வடமாநிலங்களில் வேப்பந்தோப்பில் மரத்தில் பரண் அமைத்து நாள்முழுவதும் தங்கச்செய்து நோய்தீர்க்கும் இயற்கை மருத்துவமனைகள் அதிகமுள்ளன.

வீட்டில் பெருச்சளித் தொல்லை இருந்தால் அது வரும் வழிகளில் வேப்பந்தழைகளைப் போட்டுவைத்தால் வரவே வராது. உங்கள் விருப்ப தெய்வத்தை வேண்டிக்கொண்டு, நோயாளிகள், மனதில் பயமேற்பட்டவர்கள், மற்றும் குழந்தைகளுக்கு 3 வேப்பிலைக் கொத்தைக் கையில் வைத்து ‘சகல நோயும் சர்வ தோசங்களும் நசிமசிசுவாகா’ என்று மேலிருந்து கீழாக சுழற்றி சிரகடிப்பதால் நலமடைவார்கள்.

நமது வீடு, வீதிகள், சாலையோரங்கள், தொழிலகங்கள் மற்றும் பண்ணைகளில் நிறைய வேப்பமரங்களை வளர்த்து காலை எழுந்ததும் அதனைப்பார்த்து பகலில் அதன் நிழலில் ஓய்வெடுத்து மருந்தாகவும் பயன்படுத்தி நலமாக வாழ்வோமாக.


தொடரும்…

 

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>