அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (3) - திறனூட்டும் தக்காளி

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (3) - திறனூட்டும் தக்காளி

May 29, 2012

உலகெங்கிலும் பயன்படுகின்ற முக்கியமான காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. உலகிலேயே உருளைக்கிழங்கிற்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளிதான். ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுகின்ற இதன் தாவரவியல் பெயர் Solanum Lycopersicum என்பதாகும். இதனைச் சமைக்காமல் அப்படியே சாப்பிடமுடியும். குழம்பு, இரசம், கிச்சடி போன்ற உணவுவகைகளில் சேர்த்தால் அதன் சுவை கூடும். சட்னி, தொக்கு, பச்சடி, கூட்டு, சூப்பு, சாஸ், பழச்சாறு எனப் பலவிதமான வகைகளில் தக்காளி உணவில் இடம்பெறுகிறது.

விலை குறைவாகக் கிடைப்பதால் இதன் அருமை பெருமைகளை நம்மால் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தினமும் அளவுடன் தக்காளியினைச் சேர்த்துவருவதால் அழகு கூடி நல்ல உடல் நலத்துடனும் நோயெதிர்ப்புத் திறனுடனும் நீண்ட காலம் வாழலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் அடிக்கடி உண்டாகும் குறையுள்ளவர்கள் தவிர மற்றவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். உண்மையில் தக்காளி போன்ற உணவுவகைகள் அவைகளிலுள்ள சுண்ணாம்புச்சத்தைச் செரிக்க முடியாததால் மட்டுமே இவர்களுக்குக் கற்களாகச் சேர்ந்து விடுகின்றன; மற்றவர்களுக்குச் செரித்து எலும்பை பலப்படுத்துகின்றன.

தக்காளி

நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் இதன் சிறப்புகளைத் தெரிந்து பயன்படுத்தும் போது அதிகப்பயன் பெறலாம். நோய் எதிர்ப்புத் திறனை உடலுக்கு அளிப்பதுடன் அசதி நீங்கி புத்துணர்வளிக்கும் திறனும் தக்காளிக்கு உண்டு.

இப்பழத்தில் மட்டுமே உயிர்ச்சத்துக்களான (Vitamin) A B மற்றும் C மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. இதில் காரச்சத்துள்ள தாதுப்பொருட்களும், போலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம் எனப்படும் மூன்று புளிப்புச்சத்துக்களும் சரியான விழுக்காட்டில் கலந்துள்ளன. இரும்புச்சத்தும் பொட்டசியம் சோடியம் போன்ற சத்துக்களும் அதிக அளவில் இப்பழத்தில் உள்ளன. பலவீடுகளில் தோலை வேகவைத்தபின் உரித்து எடுத்துவிட்டுத்தான் உணவில் கலப்பார்கள். ஆனால், இதன் தோலில் Lycopine சத்து அதிகமுள்ளதால் தோலுடன் அரைத்துப் பயன்படுத்தவேண்டும். இந்த Lycopine என்ற சத்தானது மாரடைப்பு வராமல் தடுக்கக் கூடிய வல்லமை படைத்தது.

மேலும் Prostate enlargement என்ற சிறுநீர்க் குழாயடைப்பு நோயினையும் அதனால் ஏற்படும் சிறுநீர் எரிச்சலையும் இது குணப்படுத்துகிறது. ஓமியோபதி எனும் மருத்துவ முறையில் இதிலிருந்து மருந்தெடுத்து வாதம் மற்றும் தலைவலிக்குக் குணமடையத் தருகிறார்கள்.

தக்காளியைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ ஏதாவதொரு வகையில் பக்குவப்படுத்தி உட்கொண்டு வருபவருக்கு மந்தமான கல்லீரல் நன்கு செயல்படத்துவங்கும். செரிமானம் தொடர்பான அனைத்து நோய்களும் குணப்படுகிறது.

பழச்சாறெடுத்து உப்பும் மிளகுப் பொடியும் சேர்த்துப் பருகுவதால் கருவுற்ற பெண்களின் ஆரம்பகால வாந்தி கட்டுப்படுகிறது. பழச்சாறுடன் தேன் கலந்து பருகினால் உதிரம் (இரத்தம்) விருத்தியடைவதுடன் சுத்தமாகிறது. பெரியவர்களும் குழந்தைகளும் காலை மற்றும் மாலை இருவேளைகளும் உணவுக்குப்பின் பருகிவர சொறி, சிரங்கு போன்ற நோய்கள் வராது. வந்திருப்பவர்களுக்குக் குணமடையும். குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டியில் (Spoon) ஆரம்பித்து நாளாக 5 தேக்கரண்டிவரை தரலாம்.

இது உதிரக்குழாய்களிலுள்ள தடைகளை நீக்குவதில் வீரியமாக இருப்பதால் கொழுப்பு மற்றும் அழுகிய பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றி தடையற்ற உதிரஓட்டத்தினைப் பெற உதவுகிறது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் தொடர்ந்து சாப்பிட புண் ஆறுகிறது. உடலில் வறட்சியைப் போக்கி குளிர்ச்சியைத் தருகிறது. இதனால் மூலநோய் தணிகிறது. சூப்பாக சமைத்துக் குடிப்பதால் இரைப்பை மற்றும் குடல்நோய்கள் குணமாகிறது. நுரையீரலில் கட்டியுள்ள கபத்தைக் கரைத்து வெளியேற்றுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு உடனடித் திறனளிக்கிறது. உடல் பருமன் குறைகிறது. சக்கரை நோயாளிகளின் சோர்வை நீக்குகிறது. மலச்சிக்கலை ஒழிக்கிறது. கண்பார்வைக்குறையைச் சரியாக்குகிறது. பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளை உதிரக் கசிவிலிருந்து காக்கிறது. முகமும் உடலும் பளபளப்பாகிறது. எலும்புகளை உறுதியாக்குவதால் கடின வேலை செய்பவர்களின் அவசிய உணவாகிறது. பச்சையாக உண்பதால் நரம்புகள் வலிமை பெறும்.

உடலில் வீக்கமிருந்தால் வற்றும். பொதுவாகக் கல்லீரல் கோளாறுள்ளவர்களும் அதிகக் கொழுப்புள்ளவர்களும் தொடர்ந்து உண்ண விரைவில் நலம்பெறலாம். பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தடவி உலர்ந்தபின் கழுவினால் முகம் அழகுபெறும். புண்கள் மற்றும் கட்டிகள் மீது வேகவைத்த பழத்தைக் கட்டிவர விரைவில் ஆறும்.

தக்காளி இலையில் நச்சு உள்ளது எனவே தக்காளி இலையினை உண்ணக்கூடாது. ஆனால் மற்ற செடிகளுக்கு அருகில் நட்டுவளர்ப்பதால் அந்தச் செடிகளுக்கும் பூச்சிகள் அண்டாது. அளவுடன் பயன்படுத்த நோயற்றுவாழ வழிவகை செய்கிறது.

தொடரும்…

 

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>