அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்கு

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்கு

May 29, 2012

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பி செங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,

புரதம் 8.6
கொழுப்பு 6.4
கால்சியம் 0.1
பாஸ்பரஸ் 0.15
இரும்பு 0.011
சோடியம் 0.03
பொட்டாசியம் 1.4

கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவு
உயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.

சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப்பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும்.

சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.

சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.
ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.

உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.

இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.

சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு 25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவு கலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.

இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.

சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.

இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளை விரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>