அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (15) - மணந்தரும் சாதி மல்லி

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (15) - மணந்தரும் சாதி மல்லி

May 29, 2012

மூச்சுக் காற்று உள்ளிழுக்கப்படும்போது காற்றில் கலந்திருக்கும் வாசத்தை பிரித்தறியும் உணர்வு நரம்பினால் நாம் மணத்தை உணர்கிறோம். நாற்றமடிக்கும் அழுகல் வாசனையை உடைய மணத்தை நுகர்வதால் உடலும் குருதி நாளங்களும் அசுத்தமடையும். நலம்கெடும். மனத்தூய்மையும் கெடும். மனத்தூய்மை கெட்டுப்போவதால் பிறரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும். கோபம், கவலை, மந்தப்புத்தி, வஞ்சனை ஆகிய எண்ணங்களும் மேலெழும். ஊழிக்காற்றடித்தால் நச்சுக்காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு ஊரெங்கும் பரவுகிறது.

சுடுகாட்டுப்புகை, சாக்கடை, மலம், அழுகிய பண்டங்கள், இறந்த உடல்கள் கெட்டுவரும் வாடை இவற்றை நுகர்வதால் வாழ்நாட்கள் குறைந்துபோகும். எனவேதான் நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். தூய்மையான இடங்களில் வசித்தால், அறிவும், அழகும், வாழ்நாட்களும், நாள்தோறும் நலமும் கூடிப்பெருகும்.

இயற்கை நறுமணமான நல்ல வாசனையுடைய பொருட்களின் மணத்தை நுகர்வதால் மனமும் தூய்மையடையும், தெய்வீக எண்ணங்கள் பெருகும். எனவேதான் கோயில்களில் மற்றும் திருமணம் போன்ற விழாக்களில் நறுமணத்துடன் கூடிய அழகான மலர்களால் அழகுபடுத்துகிறார்கள். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களைக் காணச்செல்லும்போது மலர்க்கொத்தைக் கொடுத்து வாழ்த்துவது வழக்கம். வெளியில் சென்ற கணவன் பணிச்சுமைகளையும் மேலும் பல இன்னல்களையும் பெற்று வீடுதிரும்பும்போது மனைவியின் இன்முகத்துடன் அவர் அணிந்திருக்கும் மல்லிகையின் மணமும் கலந்து மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்தைத் தருவது உண்மைதானே…!

மல்லிகையில் பலவகைகள் இருந்தாலும் மாலதி என்று அழைக்கப்படும் சாதிமல்லி மற்றெல்லாப் பூக்களையும் விட மேலான மணம் வீசக்கூடியது. இந்தமலர் சராசரியாக 60 அடிதூரம் வரை அதன் மணத்தைப் பரப்பக்கூடியது.

இதன் இலைகளைப் பறித்து சிறிது நல்லெண்ணை விட்டு வதக்கி வாதவலி வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்க வலி நின்று வீக்கம் கரையும். தொண்டை நோய்க்கும், மார்பு வலிக்கும் ஒற்றடமிடலாம். இலையுடன் சேர்ந்து சிறிது சுக்கு, சுண்ணாம்புப் பால் சேர்த்தரைத்து நெற்றி, கன்னம், இவைகளில் தடவி சூடுகாட்டினால் நீர்த்தோசத்தினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சிவடித்துச் சீழ்வடியும் புண்களுக்குத் தடவ ஆறும். காதில்வடியும் சீழ் நிற்கும். இளம்வயதில் பலவிதத்திலும் வாலிபத்தினைப் பாழாக்கிப் பிஞ்சிலே பழுத்த கனிகள் போல் நாடிநரம்பு தளர்ந்தவர்கள் இதன் இலையை அரைத்து தொடையிடுக்கு மற்றும் அவ்விடங்களில் கட்டிவர நாடி நரம்புகள் வலிமைபெற்று புத்துணர்வடையும். பூக்களை அரைக்காமல் வைத்துக்கட்டினாலும் இதே பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்குப் பால்தருவதை நிறுத்திய தாய்மார்களுக்குப் பால் கட்டிக்கொண்டு மார்பில் வலியுண்டாகும். இதற்கு சாதிமல்லிப்பூக்களை மார்பில் பரவலாகவைத்துக் கட்டி வந்தால் விரைவில் நலமடையும்.

பூவை அரைத்து வீக்கங்களில் தடவ வீக்கம் குறையும். தோலில் உண்டாகும் சொறி மற்றும் சிரங்குக்கு பூவை அரைத்துக் கட்டி 15 கழித்துக் குளித்துவந்தால் நலமடையும். சாதிமல்லி வேருடன் சிறு வசம்புத்துண்டு சேர்த்து எலுமிச்சம்பழ சாற்றில் அரைத்து தலைக்குத் தடவிக் குளித்தால் பேன்கள் ஒழியும். தலைவலி பொடுகு அரிப்பு நீங்கும்.

சில ஆண்களுக்குப் பெண்கள் போல மார்பு பெரிதாக இருக்கும். இவர்கள் 3 மாதம் தொடர்ந்து இரவில் சாதிமல்லிப்பூவை மார்பில் வைத்துக் கட்டிக் காலையில் எடுத்துவிட மார்புகள் அளவில் சிறியதாகும். கடவுளுக்குப் பிடித்தமான மலர்களில் ஒன்றான சாதிமல்லியை இரவில் நமக்கும், குழந்தைகளுக்கும் அணிவித்துப் படுக்கையிலும் தூவி உறங்குவதால் மன அமைதியும் உயர்வான எண்ணங்களும், தூய மூச்சுக்காற்றும் பெற்று முகம் மலர்ச்சியும் அழகும் நிறைந்து காணப்படும்.

தொடரும்…

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>