அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) - நலமும் அழகும் தரும் மஞ்சள்

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) - நலமும் அழகும் தரும் மஞ்சள்

May 29, 2012

மஞ்சள் நமது இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. இதன் தாவரவியல் பெயர் Curcumalongaஎன்பதாகும். இதன் பண்புகளை நமது முன்னோர்கள் நன்கு ஆராய்ந்தறிந்து இறைவழிபாட்டிலும், நோய்தீர்க்கும் மருந்துகளிலும், அழகூட்டும்பொருட்களிலும் பயன்படுத்தும் பல முறைகளைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

எந்த நற்செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் முழுமுதற்கடவுளாக மஞ்சளை ஒரு பிடி நீரைத் தெளித்து பிடித்து வைத்து அகரம்புல் சொருகி அதை இறைவனாக எண்ணி வழிபடுபடுவது நாம் அறிந்ததே. மங்கலச் சின்னமான குங்குமம் மஞ்சளில்தான் உருவாக்கப்படுகிறது. நற்காரியங்கள், விழாக்கால உணவுக்கான மளிகைப் பொருட்களின் பட்டியலில் மஞ்சள் எழுதியபின்தான் மற்ற பொருட்களை எழுதுவார்கள். மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப்பொருள் என்பதால்தான் அது வழிபாட்டிலிருந்து எல்லா இடம், காலச் சூழ்நிலைகளிலும் நமது முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

உடலைப் பொற்சாயலாக்கி கெட்ட நாற்றத்தைப் போக்குகிற மஞ்சளினால் ஆண் வசப்படுத்தலும், பசியும் அதிகமாகும். வாந்தி, பித்த, வாத கோபங்கள், தலைவலி, சளி, நாசிரோகம், பிரமேகம், வலி, வீக்கம், வண்டுகடி நச்சு, பெருவிரணம் ஆகியவை நீங்கும். என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது.

தாவரங்களில் கிழங்குப் பிரிவைச் சேர்ந்த இந்தச் செடி சம வெப்பநிலைப் பகுதிகளில் சராசரியாக மூன்றடி உயரம் வரை வளரக்கூடியதாகும். சுவையில் கார்ப்பும், துவர்ப்பும் கொண்டிருக்கும்.

மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும், குண்டுமஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள் போன்றவையே அதிகம் பயன்படுகின்றன.

இதப்பயன்படுத்துவதால் புற்றுநோய் மற்றும் அல்சீமர் எனப்படும் நினைவாற்றல் இழப்புநோய் வராமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்கள் குளிக்கும்போது நாள்தோறும் மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு குளிப்பதால் முகப்பரு மற்றும் தேவையற்ற முடிகளை வராமல் தடுத்து முக அழகையும் பொற்சாயலையும், மனதைக்கவரும் அழகையும் தருகிறது.

தொற்றுநோய் பரவும் காலங்களில் வீட்டிலும் வாசலிலும் மஞ்சளை நீரில் கரைத்துத் தெளிப்பதால் கிருமிகள் அண்டாமல் காக்கும். தாவரங்களுக்கு ஏற்படும் பலவித நோய்களுக்கு மஞ்சள் கரைசலை இயற்கை வேளாண்மையில் பயன்படுத்துகிறார்கள்.

கரப்பான், பாச்சை, சிலந்தி, மூட்டைப்பூச்சி உள்ள வீடுகளில் அடிக்கடி கரைத்து தெளித்து வருவதால் அவை அடியோடு நீங்கும்.

எறும்பு அதிகம் வீட்டில் தொல்லை செய்தால் மஞ்சள் பொடி தூவ ஓடிவிடும். சாக்கடை மற்றும் நீர் தேங்கியுள்ள இடங்களில் கரைத்துத் தெளித்தால் அதில் தோன்றும் கிருமிகள் அழிந்து கெட்டநாற்றம் அறவே ஒழியும்.

வெள்ளைத்துணியை மஞ்சளுடன் சேர்ந்துக் கொதிக்கவைத்து சாயமேற்றிக் கட்டிக்கொள்வதால் தீராத இருமல், அரிப்பு, நச்சுக் காய்ச்சல், மலக்கட்டு மற்றும் நீர்க்கட்டு நீங்கும். மஞ்சள் கலந்த நீரில் தூயவெள்ளைக் கைக்குட்டையை ஊறவைத்துப் பின் நிழலில் காயவைத்து “மெட்ராஸ் ஐ” எனப்படும் தொற்றுக்கண்வலிக்கு கண்களை அடிக்கடி துடைத்து வருவதால் கண்வலி, நீர்கோர்த்தல் தீரும்.

மஞ்சள் சுட்டு வரும் புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோர்வை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு தொண்டைப்புண் மற்றும் கிருமித் தொற்றுதல் தீரும்.

கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி, வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் போட்டு மூக்கு மற்றும் வாய்வழியாக ஆவிபிடித்தாலும் மேற்கண்ட தொல்லைகள் தீரும். குறிப்பாக தற்போது புவியெங்கும் பரவிவரும் பன்றிக்காய்ச்சல் கிட்டவே அண்டாது.

2 குவளை தண்ணீரில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் கலந்து கொதிக்கவைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துக் குடித்தால் பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட நச்சுநீர்க்கட்டுக்கள் நீக்கி வெளியேற்றும். குடல் தன்னிலை மாறியதால் ஏற்பட்ட வயிற்றுப் பொருமலை நீக்கும்.

சுண்ணாம்புடன் சரியளவு மஞ்சள் கலந்து நகச்சுற்றுக்குத் தடவினால் நலமாகும். மண்சட்டியில் மஞ்சள் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கரியாக்கித் தண்ணீர், தேன், பால் இவற்றுடன் 50 மில்லிகிராம் அளவு காலை மாலை தொடர்ந்து சாப்பிடுவதால் மேக நோய்கள் புண்களில் ஏற்படும் உறுத்தல்தீரும். மண்டையிடி, மார்வலி, மாரடைப்பு கட்டுப்படும். இதையே சாம்பலாகும்வரை விட்டு இதேபோல் சாப்பிட வேதியியல் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் நச்சுத்தன்மை உடலிலிருந்து நீங்கும். குடல்புண்கள், வயிறு கழிச்சல், அடிக்கடி நீர்பிரிதல் கட்டுப்படும். படை, சொறி, சிரங்கு, தேமலுக்கு தேங்காயெண்ணையுடன் சேர்த்துத் தடவ நலமடையும்.

பசுமஞ்சள் சாறு 1 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி நீர்பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சரியளவு கலந்து 1/2 கிராம் அளவு சாப்பிட்டாலும் சரியாகும்.

கடுக்காய்ப்பொடியுடன் சரியளவு கலந்து சேற்றுப்புண்ணில் இரவுதோறும் தடவ சிலநாட்களிலேயே நலம்பெறலாம். இரவில் உணவுக்குப்பின் பசும்பாலில் 10 பல் பூண்டு, மஞ்சள் 1/4 தேக்கரண்டி மற்றும் சர்க்கரை சேர்த்துக்காய்ச்சி வடித்து பூண்டை மென்று சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட கடும் இருமல், தும்மல், நீர்வடியும் சளி நலமடையும்.

மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி இலை, அகரம்புல், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்து, சிறு கட்டிகள், கொப்புளங்கள், படைசொறி புண்களுக்கு வைத்துக்கட்டுவதால் நலமடையும். யானைக்கால் நோய்க்கு 2 தேக்கரண்டி பசுமூத்திரம், சிறிது வெல்லம், 1 கிராம் அளவு மஞ்சள் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து சாப்பிட நலமடையும். சுரம்தீரும்.

தாது இழப்பினால் ஏற்படும் நலக்குறைவிற்கும், பித்தக்கோளாறுகளுக்கும், வலது பக்கத்தலைவலிகளுக்கும் ஓமியோபதி மருத்துவத்தில் இதனை வீரியப்படுத்தித் தருகிறார்கள். இதையும் பப்பாளியையும் மாற்றி மாற்றித் தருவதால் குழந்தைகளின் ஈரல்குலைக் கட்டிகளும் நலமடைகிறது.

மஞ்சளிலிருந்து பிரித்தெடுக்கும் குர்குமின் என்ற எண்ணைய்ச் சத்து உதிரக் கொழுப்பையும், கல்லீரலில் பித்த நீர் அதிகம் சுரப்பதையும் கட்டியாவதையும் தடுக்கிறது.

உணவுக்குச் சுவைகூட்டி, நிறம் கூட்டி, பசியைத் தூண்டி, கிருமிகளை அழித்து நோயெதிர்ப்பாற்றலைத் தந்து மனமகிழ்ச்சியையும், தெய்வீகத் தன்மையையும் அழகையும் தரும் மூலிகையான மஞ்சளை முறையாகப் பயன்படுத்தி நலம் பெறுவோமாக.


தொடரும்…

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>