அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (2) - உடல்வலுப்பெற மாதுளை

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (2) - உடல்வலுப்பெற மாதுளை

May 29, 2012

முத்துக்களையும் மாணிக்கத்தையும் போல ஒளிவீசும் விதைகளைக் கொண்ட மாதுளங்கனி சிறுமர வகுப்பைச் சார்ந்தது. இது இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது.

வாழை போல இதன் மரப்பட்டை, வேர்ப்பட்டை, பழத்தோல், பூ, பிஞ்சு, பழம் மற்றும் இலை என இதன் அனைத்துப்பாகங்களும் மருத்துவப் பயனுடையது.

மாதுளையில் இனிப்புச்சுவை, புளிப்புச்சுவை என இருவகைகள் உண்டு. இனிப்புவகை அன்றாட சாப்பிடவும், புளிப்பு மாதுளை மருத்துவப்பயன்பாட்டுக்கும் சிறப்பானவை.

பொதுவாக மாதுளையில் துவர்ப்பு மிகுந்திருப்பதால், குருதி (இரத்தம்) விருத்தியாகும். உடல் இறுக்கம் பெறும். குடல் வலிமை பெறும். சூட்டினாலும், கிருமிகளாலும் ஏற்படும் பல்வேறு கழிச்சல்களைக் கட்டுப்படுத்தும். உடல் குளிரும்.

வெடித்துவீழ் பழத்தை வாங்கி
மெல்லிய சீலைகட்டி கடுக்கெனப் பிழிந்து கொண்டு
கண்டுசர்க் கரையும் குடித்திட வெப்பு மாறும்
குளிர்ந்திடும் அங்கமெல்லாம் வடித்தநன் மொழியினாளே
மாதுளம் பழத்தின் சாறே.
இது அகத்தியரின் பாடல்.

மாதுளை, தூதுளை, வளர்ந்த வீட்டில்
வயிற்றிலும் நெஞ்சிலும் குற்றமில்லை

என்பது மூத்தோர் சொல். ஏனென்றால் மார்பு, தொண்டை, இருமல் போன்ற தொல்லைகளை தூதுளை நீக்குகிறது. வயிற்றில் ஏற்படும் அனைத்து தொல்லைகளையும் மாதுளை தீர்க்கிறது.
மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.
தொடர்ந்து வண்டியோட்டுபவர்கள், பேருந்துகளில், தொடர்வண்டிகளில் அடிக்கடி பயணிப்பவர்கள், இரும்பைத் தொட்டு வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் அழகும் பொலிவும் பெறும்.
சர்க்கரை நோயாளிகள், செரிமானத் திறன் குறைந்தவர்கள் அடிக்கடி மலம் கழிக்கும் Amebiosis நோயாளிகள். அதிக உடல் மற்றும் மன உழைப்பால், உடற்சூடும் பித்தமும் கூடி வாந்தி, விக்கல், வாய்நீர்ச்சுரப்பு, குமட்டல், மயக்கம், நெஞ்சுச்செரிவு, காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், புளியேப்பம் போன்ற தொல்லைகளால் சீரழிபவர்கள் தொடர்ந்து உண்ண முழுவதும் குணமடையலாம்.
மதிய உணவுக்குப்பின் அரைப்பழம் வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து உண்டால் வரட்டிருமல் மற்றும் மலச்சிக்கல் தீரும். அடிக்கடி இதை விரும்பிச்சாப்பிடுவதால் குருதி (இரத்தம்) விருத்தியடையும், சுத்தமாகும், அறிவு வளர்ச்சி ஏற்படும். விந்தணுக்கள் கூடும். குழந்தைப்பேறு இல்லாத கணவன்-மனைவி தொடர்ந்து சாப்பிடப் பலன் கிட்டும்.
உயிர்ச்சத்தான (Vitamin) C , தாதுச்சத்துக்களான மக்னீசியம், கந்தகம் ஆகியவை இதில் அதிகம் உள்ளன. இதன் விதை காசநோய், நீர்ச்சுருக்கு முதலானவற்றை நீக்கும். இன்னும் விந்தையான செய்தி என்னவென்றால் மாதுளை பொறாமையையும் பகையுணர்வையும் களையும் ஆற்றல் படைத்தது எனவே அதனை விரும்பி உண்ணுங்கள் என முகமது நபிகள் கூறியிருக்கிறார். எனவே பொறாமையும், பகையுணர்வும் கொண்டு நமக்கெதிரான செயல்கள் செய்யும் மனிதர்களுக்கு நிறைய மாதுளைப்பழங்கள் வாங்கிப் பரிசளித்து அவர்கள் மனதினை மாற்றலாம் என முடிவுசெய்திருப்பீர்கள்.
புதிய ஆய்வொன்றில் இந்தப்பழம் இதயத்திற்குப் பாதகம் விளைவிக்கும் LDL எனும் கொழுப்பினைக் கட்டுப்படுத்தி தமனியடைப்பு (Cardio Vascular Disease) நோயினைத் தீர்க்கிறது; இதய நரம்புகளை இறுக்கமேற்படாமல் காக்கிறது எனத் தெரியவந்துள்ளது.
பற்களைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. நிணநீர்க் கட்டிகள் ஏற்படாமலும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகவும் உடலைப்பாதுகாக்கிறது. சிறுநீர்ப்பாதையிலுள்ள புரோசுடேட் எனும் சுரப்பியை வலுப்படுத்தி வீக்கம் வராமலும் புற்றுநோயினின்றும் காக்கிறது. சிறுநீரகத்தை வலுவாக்கும் திறனும் மாதுளைக்கு உண்டு.
மாதுளம்பூச் சாறு 2 தேக்கரண்டியுடன் கற்கண்டைப் பொடிசெய்து சேர்த்து காலை மாலை தொடர்ந்து உட்கொள்வதால் சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம் ஆகியவை ஒழியும். பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்.
சூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.
பழம் சாப்பிட்டபின் மீந்துபோகும் தோலைக் காயவைத்து பொடியாக்கி கால்பங்கு சாதிக்காய் சேர்த்து  வெண்ணை அல்லது நெய்யுடன் சேர்த்து உண்ண சீதபேதி, இரத்தபேதி எனப்படும் வியாதிகள் குணமாகும். இதன் இலை மூல நோய்மருந்துகளில் இடம்பெறுகிறது. பட்டை குடல் கிருமிகளை அகற்றும் மருந்துகளில் இடம்பெறுகிறது.
புளிப்பு மாதுளை வகை கிடைத்தால் அதனைத் தட்டிப்பிழிந்து மூன்று தேக்கரண்டி உட்கொண்டால் அனைத்து பேதிக்கழிசலும் கட்டுப்படும். புளிப்புமாதுளை கிடைக்காவிட்டால் கடைகளில் கிடைக்கும் இனிப்பு மாதுளம்பிஞ்சை அரைத்து மோருடன் சேத்தும் சாப்பிடலாம்.
முகத்திலும், தலையிலும், கண் இமைகளிலும் புழுவெட்டு ஏற்பட்டு முடிஉதிர்ந்து சொட்டையாகும். நாள்பட்டால் இதிலுள்ள நுண்புழுக்கள் பெரிதாகத் தெரியும். இதற்குப் புளிப்பு மாதுளம் பழச்சாற்றை காலை மாலை சூடுபறக்கத் தேய்த்தால் குணமாகும்.
எனவே உடலின் உள்ளுறுப்புக்களை வலுப்படுத்தி உயிர்காக்கும் மாதுளையை அனைவரும் வளர்த்துப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.
தொடரும்…..
The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>