அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (13) - வானமுதம் கடுக்காய்

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (13) - வானமுதம் கடுக்காய்

May 29, 2012

துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும் பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்க்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும். Terminalia Chebula என்பது கடுக்காயின் தாவரவியல் பெயர். அகத்திய முனிவர் இதனைத் தாயினும் மேலானதாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

கடுக்காயும் தாயும்
கருதிலொன்றென்றாலும்
கடுக்காயைத் தாய்க்கதிகங்
காண்நீ – கடுக்காய்நோய்
ஓட்டி உடற்தேற்றும்
உற்ற வன்னையோ சுவைகள்
ஊட்டி உடற்தேற்று முவந்து

வடமொழி நூல்கள் பலவற்றில் கடுக்காயின் இன்றியமைமாக்காக தேவேந்திரன் அமுதத்தை அருந்தும்போது ஒருதுளி புவியில் சிந்தி அது கடுக்காய்மரமாக வளர்ந்ததாகவும், பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒன்றாகக் கருதப்படுவதாவும் கூறப்பட்டுள்ளது.
புவியிலுள்ள அனைத்திலும் நல்லது கெட்டது இரண்டும் கலந்தே இருப்பதுபோல் கடுக்காயிலும் நச்சு உள்ளது. எப்படி சுக்கு, இஞ்சி ஆகியவற்றின் தோலைநீக்கிவிட்டு உட்புறத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமோ அதுபோல கடுக்காயின் உற்புறமுள்ள கொட்டைப்பகுதியை நீக்கிவிட்டு அதன் தோலை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

கடுக்காயில் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய் மற்றும் பால்கடுக்காய் என்று நான்குவகைகள் உண்டு. இவை நான்கும் உடலை அழிவிலிருந்து காக்கும் கற்ப மூலிகைகளாகக் கருதப்படுகின்றன. இமயமலைப்பகுதிகளில் தவத்திலிருக்கும் தவ முனிவர்கள் இவற்றைத் தேடி உண்பதாகக் கூறப்படுகிறது. தேவ மருத்துவராகக் கருதப்பட்ட தன்வந்திரி பகவான் தம்மிடம் எப்போது கடுக்காய் வைத்திருந்தார்.

கொட்டை நீக்கிய கடுக்காய் 10 கிராம் அளவு எடுத்து 2 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துச் சாப்பிடுவதால் அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். புண்களைக் கழுவ புண்கள் ஆறும். வாயிலுள்ள புண்களுக்கு கொப்பளித்தால் ஆறும்.

மென்மையான பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து 1/2 குவளை வெந்நீருடன் கலந்து இரவு படுக்கும்போது குடித்தால் மலச்சிக்கல் நீங்கி காலையில் முறையாகக் கழியும். பொடியைப் பல்துலக்குவதால் ஈறுவலி, ஈறுகளில் உதிரம் வடிதல் பல் ஆட்டம் வாய்ப்புண் தீரும்.
அடிபட்ட காயத்தில் உடனே பொடியை வைத்தால் உதிரப்போக்கும் நிற்கும் விரைவில் காயம் ஆறி நலம்பெறலாம். மூக்கில் உதிரம் வடியும்போது இப்பொடியை சிறிதளவு உறிஞ்சினால் உதிரம் வடிவது நிற்கும்.

கபநோய் தன்னளவில் அதிகமாகக் கூடிய சனவரி மாதத்தின் நடுவில் இருந்து மார்ச் மாத நடுவரை இதனுடன் சம அளவு திப்பிலிப்பொடி கலந்து 1 கிராம் அளவு காலை மாலை தேனுடன் சாப்பிட்டால் கபம் இருமல் கட்டுப்படும்.
கபம் குறைந்து வற்றிப்போகும் நாட்களான மார்ச் மாதத்தின் நடுவிலிருந்து மே மாதத்தின் நடுவரை தனியாக 1/2 கிராம் அளவு பால் அல்லது நெய்கலந்து சாப்பிட கபம் சரிநிலையடைந்து உடல் நலம்பெறும்.

வாதம் நிலைமாறும் மேமாதத்தின் நடுவிலிருந்து சூலை மாத நடுவரை வெல்லம் 2 பங்கு சேர்த்து இடித்து வைத்துக்கொண்டு காலை மாலை சிறு நெல்லிக்காயளவு சாப்பிட வாதம் தொடர்பிலான நோய்கள் வராது.

சூலை மாதத்தின் நடுவிலிருந்து செப்டம்பர் நடுவரை பித்தம் இயற்கையாகவே கூடும் நாட்களாகும். அந்த நாட்களில் வறுத்துப் பொடித்த உப்பு அல்லது புடமிடப்பட்ட உப்பு பற்பம் கலந்த தண்ணீருடன் சாப்பிட்டால் பித்த நோய்கள் வராமல் காக்கும்.

இவ்வாறு முழு நாட்களும் சாப்பிடச் சூழ்நிலையில்லாதவர்கள் குறைந்தது அக்காலங்களில் 15 நாட்களாவது சாப்பிட பலன் கிடைக்கும்.

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
மண்டலம் கொண்டால்
கோலை ஊன்றிக்
குறுகி நடந்தோரும்
கோலை வீசிக் குலாவி நடப்போரே!

என்ற தேரையரின் வாக்குப்படி காலை வெறும் வயிற்றில் இஞ்சியைத் தோல்சீவித் தட்டிப் பிழிந்து, தெளியவைத்த மேல்சாறுமட்டும் 1 தேக்கரண்டி எடுத்து சமயளவு தேன்கலந்து சாப்பிட்டு, இடைவேளையில் தூய்மையாக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட சுக்குப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து உணவுடன் நெய்சேர்த்துச் சாப்பிட்டு இரவு கடுக்காய்ப் பொடி 1 கிராம் அளவு தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் கொழுத்த மற்றும் நலக்குறைவுடைய உடலும் தெம்பும் சுறுசுறுப்பும் அடையும்.

முன் சொன்ன நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் முறைப்படி கலந்த மருந்துக்கு திரிபலா சூரணம் என்ற பெயர். இந்தச் சூரணத்தை முறைப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உணவுசெரிக்காத தொல்லை, மலச்சிக்கல், உடற்சூடு, மூல எரிச்சல், வயிற்றுப்புண், உதிரக்குறைவு, வெண்குட்டம், கண் நரம்பு நலக்குறைவு ஆகிய நோய்கள் தீரும். சர்க்கரை நோய் தீரும். தொப்பை குறையும். மேற்கண்ட தயாரிப்புகள் வேண்டியவர்கள் நமது ஆராய்ச்சிமையத்துக்குத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.


தொடரும்…

The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

ஒரு பதில்

  1. a.k.lakshmanan /

    கடுக்காய் ஒரு நல்ல மருந்து. நான் தினமும் கடுக்காய் எடுத்துக் கொள்கிறேன். நல்ல ஒரு அனுபவமாக இருக்கிறது.

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>