அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (9) - அருகம்புல் எனப்படும் அகரம்புல்

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (9) - அருகம்புல் எனப்படும் அகரம்புல்

May 29, 2012

புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப் பல்விருகமாகி என்று புவியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார். திருவள்ளுவப் பெருமானும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று முதலில் தோன்றியது அகரம் என்றே கூறியிருக்கிறார். முதலில் ஒருசெல் தாவரமாகத் தோன்றி வளர்ந்த அகரம்புல் தற்போது அருகன் புல் என்று மருவிவிட்டது.

முதலில் தோன்றியதால் அதிகத் திறன்மிக்கதாகவும், மற்ற பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கும் திறனுடையதாகவும் உள்ளது இந்த அகரம்புல். மாட்டுச்சாணத்தில் இரண்டாவது நாளே கிருமிகள் மற்றும் பூச்சிகள் உண்டாகும். ஆனால் நம் பெண்கள் மார்கழி மாதத்தின் காலை நேரங்களில் கோலம்போட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து ஒரு அகரம்புல் குத்திவைத்தால் கெடாமல் எத்தனை நாளாயினும் அப்படியே உலர்ந்து போகிறது.

அனல்வீசும் கோடையிலும் இப்புல்மேல் பட்டுவரும் காற்று குளிர்ந்துவிடும். ஒருமுறை தோன்றி வளர ஆரம்பித்தால் அப்பகுதி முழுவதும் ஆழமாகவும், அகலமாகவும் பரவி நிலைத்துவிடும். எத்தனை ஆண்டுகள் நீர் கிடைக்காமல் வற்றினாலும் அழிந்துபோவதில்லை. மீண்டும் நீர்பட்டுவிட்டால் செழிக்க ஆரம்பித்துவிடும். அகரம்புல் வளரும் நிலத்தை நீரால் அரிக்க இயலாது. வரண்ட நிலம் வெப்பத்தினாலும் வெடிக்காது. எனவே இப்புல்லால் வரப்பு அமைத்துத் தான் நெல்வயல் அமைக்கிறார்கள்.

இந்தக் கருத்தைத் தான் ஔவையாரும்,

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்

என்று தொழில் நுட்பமாகப் பாடியிருக்கிறார். விவசாயக் கல்லூரி இல்லாத அக்காலத்திலேயே இவை போன்ற உழவர் தொழில்நுட்பங்கள் தமிழர்களால் பாடப்பட்டு அவை மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.

ஏரிக்கரைகளில், சாலையோரங்கள், இருப்புப்பாதைச் சரிவுகள் போன்ற இடங்களில் அகரம்புல்லை வளர்த்துவந்தால் நாளடைவில் வெள்ளத்தால் அடித்துச் செல்லாமல், வெப்பத்தால் வெடித்துவிடாமல் கெட்டிப்பட்டுவிடும். அணுகுண்டு போட்டு இந்தப் புவியில் எந்தவொரு உயிரும் விளங்காமல் செய்தாலும் அகரம்புல் மட்டும் மீண்டும் வளர்ந்து புல்லாகிப் பூடாகிப் பரிமாணவளர்ச்சியைத் தொடங்கிவைத்துவிடும் என்று அறிவியலாளர்கள் கண்டுணர்ந்துள்ளனர்.

சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் ராகுவால் நடக்கும் கெட்டவைகளைப் போக்க அகரம்புல் அர்ச்சனை செய்து பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அகரம்புல்லைப் போட்டுவைப்பார்கள். இது மூடப்பழக்கமல்ல. புற ஊதாக் கதிர்வீச்சு கிரகண நேரத்தில் அதிகமாயிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவே நீரில் அகரம்புல்லைப் போட்டுவைப்பார்கள்.

சரி மருத்துவப் பலன்களுக்கு வருவோம். உதிர விருத்திக்கு, உதிரம் தூய்மைப்பட, உடலில் எந்த இடத்தில் ஏற்படும் உதிரக் கசிவைத் தடுக்க, வெப்பத்தைத் தணிக்க, நுரையீரலில் கபத்தைத் தடுத்துக் கரைத்து வெளியேற்ற, உடலை உறுதிப்படுத்தி அழகையும் அறிவையும் தர என அகரம்புல் ஒரு கோடி நன்மைகளை நமக்கு அளிக்கிறது. அதனால்தான் தெய்வ வழிபாடுகளில் அகரம்புல் பயன்படுகிறது.

ஒரு பிடி அகரம்புல்லை எடுத்து அரைத்து அதே அளவு ஆவின் வெண்ணையுடன் கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் உண்ண மூலநோய் தணியும், உடல் உறுதிபெறும், அழகும் அறிவும் உண்டாகும்.

30 கிராம் அளவும் அகரம்புல்லை எடுத்து 10 மிளகு தட்டிப்போட்டு 2 குவளைத் தண்ணீரில் கலந்து 1/2 குவளை வருமளவு காய்ச்சிச் சுருக்கி வடித்துக் காலை மற்றும் மாலை நேரங்களில் அருந்த நுரையீரல் தொடர்பான உதிர வாந்தி நிற்பதுடன், மூச்சுக் குழாயிலுள்ள கபம் கரைந்து வெளியேறும்.

அகரம்புல் 1 பிடி, துளசி 20 இலைகள், வல்லாரை 10 இலைகள் சேர்த்து, நீர்விட்டு, மின்னரவையில் அரைத்துத் துணியில் பிழிந்து வடித்துக் காலை மற்றும் மாலை தொடர்ந்து வெறும் வயிறாகக் குடித்துவந்தால் நன்மை பல கிடைக்கும். புல்லை இடித்துப் பிழிந்து வரும் சாற்றை மூக்கில் உதிரம் வரும்போதும் அடிபட்ட காயத்திலும் விட்டால் உதிரம் கட்டுப்படும். கண்களில் விட்டால் கண்புகைச்சலும் நோயும் தீரும்.

பசும்புல் 100 கிராம் அளவு, மஞ்சள் பொடி 10 கிராம் சேர்த்தரைத்து சொறி சிரங்கு, சேற்றுப் புண், தினவு, தேமல், கோடையில் வரும் வியர்க்குரு, படர் தாமரை ஆகியவைகளிலிருந்து நலம் பெறத் தடவலாம்.

அகரம்புல் பொடி காலை மற்றும் மாலை நேரங்களில் பால், தேன், வெந்நீர் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிட்டு வந்தாலும் இதன் நன்மை கிடைக்கும். Sun Stroke என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பரிதி (சூரிய) வெப்பத்தால் உண்டாகும் மயக்கம் வராது.

இந்தப்புல்லின் வேர் ஒரு பிடி, வெண்மிளகு 10 தட்டிப்போட்டு, 2 குவளை நீரில் கொதிக்கவைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துக் காலை மாலை வேளைகளில் சாப்பிடுவதால் பல ஆங்கில மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டதால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு, நீரடைப்பு, நச்சுத்தன்மை, நீர்பிரியும் போது உண்டாகும் எரிச்சல், மூலக்கடுப்பு, இரசபாசாண மருந்துகளின் வெப்பம், ஒவ்வாமை தீர்ந்து நலம் பெறலாம்.

புதிய ஆராய்ச்சியில் இந்த அகரம்புல்லை ஆராய்ந்து 200க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துக்கள் (Vitamins) இதில் இருப்பதாகக் கண்டுணர்ந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் அகரம்புல் சேர்த்துச்செய்யும் ரொட்டி அதிகவிலைக்கு விற்கப்படுகிறதாம்.

நமக்கெல்லாம் மூலமுதன்மைப் பிறப்பாகவும் நம்மை நன்மைகளால் காக்கும் தெய்வீக மூலிகையான அகரம்புல்லை முறைப்படி உண்டு வந்த நோயை நீக்கி, மேலும் நோயேதும் அணுகாமல், அழகும் அறிவும் மேலோங்கி வாழ்வோமாக.


தொடரும்…


The following two tabs change content below.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com

2 பதில்கள்

  1. J. John Jacob /

    arukampul podi vaankinen. eppadi saappida vendum.

    • அருகம்புல்லின் பொடியைக் கசாயம் நாள்தோறும் காய்ச்சிக் குடித்து வருவதால் நீர்கடுப்பு நீங்கும், உடற்சோர்வு நீங்கிப் பசியெடுக்கும், இரத்தம் தூய்மையாகும் மேலும் மலச்சிக்கல் நீங்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு போன்ற தோல்நோய்கள் குணமாகும். அருகம்புல்லின் பொடியை தயிரில் கலக்கிக் குடித்து வருவதால் பெண்களுக்கேற்படும் வெள்ளைப் படுதல் நோய் நலமடையும்.

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>