அடிமையானாய் தமிழா!

பல நாட்கள் ஆயிற்றுக் கவிதை எழுதி. என் நேரம் மிகக்குறைவாய் இருந்துவிட்டபடியால் என்னால் எண்ணி எழுத முடியாத நிலை. ஒரு ஞாயிறு மாலை அமர்ந்திருந்தபோது தமிழனின் ஆறாவது விரலாகிப்போன தொலைக்காட்சி இயக்கி (Remote Control) கையில் வைத்துத் திரும்பத்திரும்ப விசைகளை அழுத்தியபோது அந்த மாலை நேரச் சூரியன் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது. ஒருகணம் நிறுத்திப் பார்த்தேன். போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி நடத்துனர் போட்டி விதிகளைப் படித்தபோது மனது கொஞ்சம் வலித்தது.

ஒரு நேரத்தில் ஏழைகளின் உயிரைக்குடித்த ஆனால் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட பரிசுச்சீட்டு (லாட்டரி), அல்ல… அதைவிடக் கொடியதாக அந்நிகழ்ச்சி இருப்பது கண்டு திகைத்தேன். இதை இவன் ஆரம்பித்தது போல இன்னும் எல்லாத் தொலைக்காட்சியும் ஆரம்பித்தால் அவ்வளவுதான் சூதாட்டம், லாட்டரி எல்லாம் தமிழ்நாட்டில் வந்தேவிட்டது. ஒரு நேரத்தில் அறிவைச் சோதித்தபின் அதற்கான பரிசை வழங்கி நிகழ்ச்சி நடத்தலாமே தவிர சூதாட்டம்போல நிகழ்ச்சி நடத்தக்கூடாதென்ற விதிகளெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை. கோடீஸ்வரன் நிகழ்ச்சியைக் கூட ஒரு கணக்கில் வைக்கலாம். வெற்றிபெறுபவன் அறிவாளியாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். ஆனால் ஒன்றுமேயில்லாமல் பெட்டி எண்ணைச் சொல்லி 50 இலட்சம் வரை பணம் வைத்து விளையாடும் தீரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அதுசரி அவர்களிடம் இல்லாத பணமா? அவர்களிடம் இல்லாத திறனா?

என்னால் முடிந்ததெல்லாம் இந்தக் கவிதையை எழுதித்தீர்ப்பது தான். தடுக்கும் திறன் என்னிடமில்லை. ஆனால் உங்களிடம் உண்டு. கண்டிப்பாக இக்கவிதையைப் படியுங்கள். உங்களுக்குக் கவிதை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.

ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கினான்
உழைத்த கூலிக்காசைப் பலரிடம் பிடுங்கி
சிலருக்குச் சில நூறுகளைக் கொடுத்து
விளம்பரம் செய்தான் சீட்டுக்காரன்
அதன் மயக்கத்தில் காலகாலமாய்
அடிமையானவர் அலங்கோலமாய்

குடித்துக் கொஞ்சமும் – லாட்டரி
அடித்துக் கொஞ்சமும்
மூட்டைதூக்கிக் கிடைத்த
காசும் போனதால்
சிந்தை கலங்கிச் சொத்தை இழந்தார்
வாழும் வழியின்றி நத்தைபோல் ஊர்ந்தார்
உற்றார் உறவினர் ஓவென்றழச் செத்து வீழ்ந்தார்

உழைப்பை மறந்து அதிர்ஷ்டத்தில் அழிந்தார்
பலரும் அழிந்தபின் பலமான முடிவு
பழைய அரசால் சட்டமும் வலிமை பெற்றது
போராட்டம் செய்த கோமாளிகளின் கூத்தும்
காசுக்காக அவர்கள் போட்ட கூட்டும்
கூண்டோடொழிந்தது.

இன்று நம்மூரில் லாட்டரி இல்லை
என்று நாமும் இறுமாப்படைகையில்
ஒரே வார்த்தை ஓஹோண்ணு வாழ்க்கை
என்று கத்தியபடி வருகிறான் கோமாளி ஒருவன்
சீரியல் சீரியல் என்று சீரழிக்கும் சானலில்
டீலா நோ டீலா என்று நம்மையெல்லாம்
டீலாவில் தள்ளிவிட பல நாளா போட்டதிட்டம்

முதலில் ஏழை ஒருவனை அழைத்து
சூதாட்டம் ஆடவைத்துப் பணம் கொடுப்பதாகக் காட்டி
படமும் எடுத்து பாழாய்ப்போன நம் நேரத்தைப்
பக்குவமாய்த் திருடி நடந்தது ஒரு பகற்கொள்ளை

பின் பெட்டியிலிருப்பது எதுவென்றறிய
அனுப்புங்கள் குறுந்தகவலை (SMS) என்று
கும்மியடிக்கிறான் அந்தக் கூத்தாடி
அனுப்பினால் நமக்குக் கழியும் 3 ரூபாய்
அந்தக்காசில் இவனுக்கும் பங்குண்டு

படங்காட்டி உன் பயனுள்ள நேரத்தையும் விழுங்கிக் கொண்டு
படம்பார்க்க நீ கொடுக்கும் காசையும் வாங்கிக் கொண்டு
உனக்குக்காட்டும் விளம்பரதாரரிடமும்
காசை வாங்கிக் கொண்டு
இத்தனையும் போதாதென்று உன்னை குறுந்தகவலனுப்பச் சொல்லியும் சம்பாதிக்கிறானே

இவந்தான் இந்தியாவின் உண்மையான கொள்ளைக்காரன்

இவனடிக்கும் கொள்ளைக்குக் காவலாய் இவனுக் கொரு பதவி
அதையும் கொடுத்தது உன் ஓட்டுதானடா ஓட்டைச் சட்டைத் தமிழா!
ஒவ்வொரு ஊடகத்திலும் இவனுக்கு முதலிடம் வேறு.
போதாதென்று இளைஞர் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் இவன் சினிமாக்கள் வேறு.

ஏதேது இனி தமிழகத்தில் இவனின்றி ஓரணுவும் அசையாது போலும்

ஒரு தினப் பத்திரிக்கை
ஒரு வாரப் பத்திரிக்கை
ஒரு வானொலி
ஓராயிரம் தொலைக்காட்சிகள்
அதைக்காட்ட ஒரு சட்டி வியாபாரம்
சட்டி வாங்கிப் படம்பார்க்காதவரிடம்
தட்டி வாங்கிப் படங்காட்ட
ஒரு கம்பிவட இணைப்பு வழங்கும் நிறுவனம்
ஒரு திரைப்பட நிறுவனம்
ஒரு தொலைபேசி நிறுவனம்
இன்னும் என்னவெல்லாம் ஊடகங்கள் உண்டோ
அதிலெல்லாம் ஒன்று

ஒன்றில் இன்னொன்றைப் பற்றி விளம்பரம்
அதில் இன்னொன்றைப் பற்றி விளம்பரம்
மாற்றி மாற்றிக் கொள்ளையோ கொள்ளை

கொஞ்சம் பொறுத்திருங்கள் ஒரு காலம் வரும்
தமிழகத்தை இவன் கையில் கொடுத்துவிட்டு
அகதியாய் இலங்கையில் நாமெல்லாம் குடியேறும் காலம் வரும்
இப்படியே நாம் அறிவிழந்து தொலைக்காட்சி பார்த்தபடி இருந்தால்
அப்படியும் ஒரு காலம் வரும்.
என்ன சொல்கிறாய் தமிழா? டீலா…? நோ டீலா?

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>